அங்கோலாவின் புதையல்: வடுக்களிலிருந்து மலரும் மகிழ்ச்சியும் புதிய நம்பிக்கையும்
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
ஏப்ரல் 18, லுவாண்டாவில் உள்ள அதிபர் மாளிகையில் அந்நாட்டு அரசு அதிகாரிகள், குடிமைச் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் தூதரக அதிகாரிகளுடனான சந்திப்பின் போது திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஆற்றிய உரை.
உங்களிடையே இருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மதிப்பிற்குரிய அதிபர் அவர்களே, அங்கோலாவிற்கு வருகை தருமாறு நீங்கள் அழைப்பு விடுத்ததற்காகவும், என்னை வரவேற்ற உங்களின் கனிவான வார்த்தைகளுக்காகவும் உங்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். இறைவன் நேசிக்கும் இந்த நிலத்தில் அவரது பிரசன்னத்தின் அடையாளங்களைத் கண்டடையவும், அமைதி மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட உணர்வோடு உங்கள் மக்களைச் சந்திக்கவும் ஒரு புனிதப் பயணியாக நான் இங்கு வந்துள்ளேன்.
நிலைத்திருக்கும் புதையல்: வலியிலிருந்து பிறந்த மகிழ்ச்சி
உங்கள் நாடு விலைக்கு வாங்க முடியாத அல்லது திருடப்பட முடியாத புதையல்களைக் கொண்டுள்ளது. அவற்றில் ஒன்று துன்பங்கள், வேதனைகள் மற்றும் ஏமாற்றங்களுக்கு மத்தியிலும் நிலைத்திருக்கும் ஆழமான மற்றும் நிலையான மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சி அறியாமையினால் உருவானது அல்ல; இது வலியையும் போராட்டத்தையும் அறிந்து உருவான மகிழ்ச்சி. இருப்பினும் செல்வம் மற்றும் சுயநல ஆதாயத்தின் மாயையிலிருந்து தங்கள் இதயங்களை விடுவித்துக் கொள்பவர்களிடம் இந்த மகிழ்ச்சி தொடர்ந்து மேலோங்குகிறது. பல நேரங்களில், மற்றவர்கள் ஏதேனும் வழங்குவதற்காகவோ அல்லது எடுத்துக் கொள்வதற்காகவோ உங்கள் நிலத்தை நாடுகிறார்கள். வாழ்வையும் உண்மையையும் வெறும் வணிகப் பொருள்களாகக் குறைத்து மதிப்பிடும் இந்தப் போக்கை தகர்ப்பது அவசியமாகும்.
இளைஞர்களின் கனவும் அரசியல் நற்பண்பும்
ஆப்பிரிக்கா உலகிற்கு மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையின் நீர்த்தேக்கமாக விளங்குகிறது. இப்பண்புகளை அரசியல் நற்பண்புகள் என்று அழைக்கலாம். அதன் இளைஞர்களும் ஏழைகளும் தொடர்ந்து கனவு காண்கிறார்கள் மற்றும் நம்பிக்கை கொள்கிறார்கள். தற்போதுள்ளவற்றைக் கொண்டு அவர்கள் மனநிறைவு அடையவில்லை; அவர்கள் மேலும் உயர்வும், புதிய பொறுப்புகளை ஏற்கவும், தங்கள் எதிர்காலத்தை வடிவமைக்கவும் விழைகிறார்கள். மக்களின் ஞானத்தை கருத்தியல்களால் ஒழித்து விட முடியாது. உங்கள் சமூகங்களுக்குள் இருக்கும் சிறந்த ஆற்றல்களை ஆதரிக்கவும், செவிசாய்க்கவும், நற்பண்பு, நீதி, அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கப் பாதைகளைத் தேர்ந்தெடுத்தவர்களை ஊக்குவிக்கவும் நான் இங்கு வந்துள்ளேன். அதே வேளையில், பிரிவினையையும் அநீதியையும் தேர்ந்தெடுத்து நாட்டின் வளர்ச்சியைத் தடுப்பவர்களின் மனமாற்றத்திற்காக அனைத்து நல்மனம் கொண்ட மக்களுடன் நானும் இணைந்து வேண்டுகிறேன். பல நாடுகளைப் போலவே, உங்கள் நாடும் அதன் பொருள் வளங்களின் சுரண்டலால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சுரண்டல் துன்பம், இறப்பு மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது மக்களைப் புறக்கணிக்கும் மற்றும் பாகுபாடு காட்டும் ஒரு வளர்ச்சி மாதிரியை ஊக்குவிக்கிறது, இன்னும் இதுவே ஒரே வழி என்றும் உரிமை கோருகிறது. ஆனால் படைப்பு என்பது பன்முகத்தன்மைக்குள் இருக்கும் நல்லிணக்கம் என்பதை உங்கள் பாரம்பரியங்கள் நமக்கு நினைவூட்டுகின்றன. சுரண்டல் மூலமாகவோ அல்லது மற்றவர்கள் மீது ஒரு கருத்தைத் திணிப்பதன் மூலமாகவோ இந்த நல்லிணக்கம் மீறப்படும்போதெல்லாம், மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
உரையாடலே வளர்ச்சிக்கான வழி
சமூக மற்றும் அரசியல் கட்டமைப்பை உடைத்து, வறுமையையும் புறக்கணிப்பையும் ஆழப்படுத்தும் மோதல்களையும் பகையையும் ஆப்பிரிக்கா உடனடியாக வெற்றி கொள்ள வேண்டும். சந்திப்புகளின் மூலமே வாழ்க்கை செழிக்கிறது. உரையாடல் முதன்மையானதாக இருக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் எழக்கூடும் என்றாலும், அவை அழிவுக்கு இட்டுச் செல்ல வேண்டிய அவசியமில்லை. துணிவுடனும் ஞானத்துடனும் எதிர்கொள்ளும்போது, மோதல் என்பது வளர்ச்சி மற்றும் ஒற்றுமைக்கான வாய்ப்பாக மாற்றப்படலாம். அதிகாரத்தில் இருப்பவர்கள் அதன் பன்முகத்தன்மையின் செழுமையை நம்பினால் அங்கோலா பெருமளவில் வளர முடியும். எனவே கருத்து வேறுபாட்டைக் கண்டு அஞ்சாதீர்கள். இளைஞர்களின் தொலைநோக்குப் பார்வைகளையோ அல்லது முதியவர்களின் கனவுகளையோ மட்டுப்படுத்தாதீர்கள். அதற்குப் பதிலாக, மோதல்களைப் புதுப்பித்தலுக்கான வாய்ப்புகளாக மாற்றுங்கள். தனிப்பட்ட அல்லது குழு நலன்களுக்கு மேலாக எப்போதும் பொது நலனை முன்னிறுத்துங்கள். இத்தகைய தேர்வுகள் குறுகிய காலத்தில் எதிர்ப்பைக் கொண்டு வந்தாலும், வரலாறு இறுதியில் அவற்றை உறுதிப்படுத்தும். மகிழ்ச்சியும் நம்பிக்கையும் வெறும் தனிப்பட்ட உணர்வுகள் மட்டுமல்ல; அவை விட்டுக்கொடுத்தல் மற்றும் தனிமைப்படுத்தப்படுதலுக்கு எதிராகச் செயல்படும் சக்திவாய்ந்த ஆற்றல்கள். கொடுங்கோலர்கள் அச்சம், பிரிவினை மற்றும் செயலற்ற தன்மையை வளர்ப்பதன் மூலம் இவற்றை அடக்க முயல்கிறார்கள். மக்கள் நம்பிக்கையை இழக்கும்போது, அவர்கள் தவறானவர்களின் சுயநலத்திற்கும், மதவெறிக்கும் மற்றும் மற்றவர்கள் மீதான அலட்சியத்திற்கும் எளிதில் ஆளாகிறார்கள். இது தன்னுடனும், பிறருடனும் மற்றும் சமூகத்துடனும் இருக்கும் உறவுகளில் விரிசலை ஏற்படுத்துகிறது.
நம்பிக்கையின் முகமாக அங்கோலா
இருப்பினும், உண்மையான மகிழ்ச்சி என்பது வாழ்வை வலுப்படுத்தும் மற்றும் சமூகத்தை வளர்க்கும் ஒரு வரமாகும். இது மக்கள் தங்கள் திறமைகளை பொது நலனுக்காகப் பயன்படுத்தவும், ஒருவர் மற்றவரின் மாண்பை அங்கீகரிக்கவும் தூண்டுகிறது. இது இருண்ட சூழ்நிலைகளிலும் பாதைகளைத் திறக்கிறது. மகிழ்ச்சி இல்லாமல் புதுப்பித்தல் இருக்க முடியாது; நேரடி சந்திப்புகள் இல்லாமல் உண்மையான அரசியல் இல்லை; மற்றும் பிறரை பற்றிய சிந்தனை இல்லாமல் நீதி நிலைநாட்டப்படுவதில்லை. நீங்கள் அனைவரும் இணைந்து அங்கோலாவை ஒரு நம்பிக்கையின் முகமாக மாற்ற முடியும். செல்வத்தின் ஆதிக்கமும் பொய் வாக்குறுதிகளும் இல்லாத ஒரு நீதியான சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் கத்தோலிக்க திருஅவை ஒரு பணிவான உடன் பணியாளராக சேவை செய்ய விரும்புகிறது. ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம், உங்கள் மக்களின் திறமைகளை நீங்கள் மேம்படுத்தலாம், அணுக முடியாத தொலைதூரப் பகுதிகளைக் கூட முன்னேற்ற முடியும். உலகம் யாரை நிராகரிக்கிறதோ, கடவுள் யாரைத் தேர்ந்தெடுக்கிறாரோ அவர்களுடன் இணைந்து நின்று, முழுமையான மனித வளர்ச்சிக்கான தடைகளை அகற்றுவோம். இப்படித்தான் நம்பிக்கை பிறக்கிறது: கட்டுபவர்களால் புறக்கணிக்கப்பட்ட கல்லை கட்டிடத்தின் மூலைக் கல்லாகிறது. மனிதகுலம் மற்றும் வரலாற்றின் முழுமை இயேசு கிறிஸ்துவே.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
