நவீன அழிவு ஆயுதங்களும் திருத்தந்தையர்களின் இறைவாக்கு அழைப்பும் நவீன அழிவு ஆயுதங்களும் திருத்தந்தையர்களின் இறைவாக்கு அழைப்பும்  (ANSA)

நவீன அழிவு ஆயுதங்களும் திருத்தந்தையர்களின் இறைவாக்கு அழைப்பும்!

நவீன ஆயுதங்களின் அழிவாற்றலை எதிர்கொள்ளும் போது, கடந்த நூற்றாண்டுகளில் செய்தது போல, ஒரு "அறநிலைப் போர்" (just war) சாத்தியமானது என்று பேசுவது மிகவும் கடினமானது. ஏற்கனவே அவனியில் அமைதி எனும் திருத்தூது மடலில், அணு ஆற்றல் காலத்தில் போரை நீதிக்கான ஒரு கருவியாக நினைப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று எழுதியுள்ளார். இந்தப் பாதையைப் பின்பற்றி, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களும் அமைதியைத் தனது திருத்தந்தை பணிக்காலத்தின் முக்கியக் கருப்பொருள்களில் ஒன்றாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

கடந்த நூற்றாண்டில், "அறநிலைப் போர்" குறித்த திருஅவையின் போதனைகள் படிப்படியாக வளர்ச்சியடைந்து, அதற்கான நியாயங்களை முன்வைப்பதைக் கடினமாக்கியுள்ளன. முந்தைய கால இறையியல் சிந்தனைகள், இன்றைய காலத்தைப் போன்று அதிக அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுதல் போன்ற தற்கால யதார்த்தங்களுக்கு மாறாக, மிகக் குறைந்த அழிவாற்றல் கொண்ட ஆயுதங்களுடன் போர்கள் நடந்த காலத்தில் உருவானவை. இது அவசரமான அறநெறி சார்ந்த கவலைகளை எழுப்புவதோடு, போர் இனி ஒரு தெளிவான தீர்வு அல்ல என்ற உறுதியை வலுப்படுத்துகிறது.

முதலாம் உலகப் போரை "பயனற்ற படுகொலை" என்று பதினைந்தாம் பெனடிக்ட் கண்டித்ததிலிருந்து, இரண்டாம் உலகப் போரைத் தடுக்க பன்னிரண்டாம் பயஸ் மேற்கொண்ட முயற்சிகள் வரை, மற்றும் அணு ஆற்றல் காலத்தில் போர் என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று என்று இருபத்தி மூன்றாம் ஜான் கூற்றிலிருந்து, "இனி ஒருபோதும் போர் வேண்டாம்" என்ற ஆறாம் பவுலின் வேண்டுகோள் வரை, திருத்தந்தையர்கள் தொடர்ந்து அமைதிக்காக அழைப்பு விடுத்துள்ளனர். இரண்டாம் ஜான் பால் மற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் ஆகியோர் இதை மேலும் வலியுறுத்தியுள்ளனர். நவீன போரின் அழிவாற்றல்  "அறநிலைப் போர்" என்பதற்கான அளவுகோல்களைப் பொருந்தாததாக ஆக்குகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தினார்.

கத்தோலிக்க திருஅவையின் மறைக்கல்வியானது கடுமையான நிபந்தனைகளுடன் முறையான தற்காப்பை அனுமதித்தாலும், இன்றைய ஆயுதங்கள் அவை எதனை அகற்ற முயல்கின்றனவோ அந்த தீமையை விடப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துபவையாக உள்ளன.

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், இந்த இறைவாக்கு அழைப்பைத் தொடர்ந்து முன்னெடுத்து, வன்முறைக்கு மேலானதாக உரையாடலை வலியுறுத்துகிறார். மேலும், உண்மையான வலிமை போரில் இல்லை, மாறாக வாழ்வைப் பாதுகாப்பதிலும் சேவை செய்வதிலும் தான் உள்ளது என்பதை மனிதகுலத்திற்கு நினைவுபடுத்துகிறார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 ஏப்ரல் 2026, 07:01