தேடுதல்

கல்விசார் மறுமலர்ச்சி: எக்குவடோரியல் கினியா கலாச்சார உலகினருக்கு திருத்தந்தையின் அழைப்பு

பல்கலைக்கழகம் என்பது வெறும் செங்கல் மற்றும் சாந்தினால் ஆன கட்டிடம் அல்ல; அது கல்வியின் ஆற்றல் மீதும் மனித நேயத்தின் மீதும் கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடு. இது புதிய தலைமுறையினரை உருவாக்குவதற்கும், உண்மையை நேர்மையுடன் தேடுவதற்கும் உரிய இடமாகும்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

ஏப்ரல் 21, செவ்வாயன்று, எக்குவடோரியல் கினியாவின் தலைநகரான மலாபோவில் லியோன் XIV” (Leon XIV Campus) வளாகத்தில் பல்கலைக்கழக நாட்டின் கலைஞர்கள் மற்றும் கலாச்சார அறிஞர்களை திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் சந்தித்தார். அச்சந்திப்பின்போது அவர் ஆற்றிய உரை:

மாண்புமிகு அதிபர் அவர்களே, பல்கலைக்கழக முதல்வர் அவர்களே, சகோதர, சகோதரிகளே  

எக்குவடோரியல் கினியா தேசிய பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத் திறப்பு விழாவிற்கு என்னை அழைத்தமைக்காக உங்களுக்கு நன்றி கூறுகிறேன். இந்த வளாகத்திற்கு எனது பெயரைச் சூட்டியமைக்காகவும் நான் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்; இந்த முடிவு ஒரு தனிநபரை மட்டும் முன்னிலைப்படுத்தாமல், எதிர்கால தலைமுறையினருக்கு நாம் வழங்க விரும்பும் விழுமியங்களையும் பிரதிபலிக்கிறது.

கட்டமைப்பைத் தாண்டிய கனவு

ஒரு பல்கலைக்கழகத்தைத் தொடங்குவது என்பது வெறும் நிர்வாகச் செயல் அல்லது உள்கட்டமைப்பை விரிவாக்கம் செய்வது மட்டுமல்ல. இது மனிதன் மீதும், கல்வியின் ஆற்றல் மீதும் கொண்டுள்ள நம்பிக்கையின் ஆழமான வெளிப்பாடாகும். புதிய தலைமுறைகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும், உண்மையைத் தேடும் உன்னதப் பணியில் நம்மை அர்ப்பணிப்பதையும், அறிவை பொது நலனுக்காகப் பயன்படுத்துவதையும் இது உறுதிப்படுத்துகிறது. இன்று நாம் வெறும் கட்டிடங்களை மட்டும் திறக்கவில்லை, மாறாக நம்பிக்கை, சந்திப்பு மற்றும் முன்னேற்றத்திற்கான ஒரு தளத்தையே திறக்கிறோம்.

ஆழமான வேர்களும் அறிவுசார் வளர்ச்சியும்

ஒரு பல்கலைக்கழகத்தின் பணியை ஒரு மரத்திற்கு ஒப்பிடலாம். எக்குவடோரியல் கினியாவில், 'சீபா' (ceiba) மரம் ஆழமான அடையாள அர்த்தத்தைக் கொண்டுள்ளது. ஒரு மரத்தைப் போலவே, ஒரு பல்கலைக்கழகமும் ஆழமாக வேரூன்றி இருக்க வேண்டும். தீவிரமான படிப்பிலும், மக்களின் நினைவாற்றலிலும், உண்மையை நோக்கிய விடாமுயற்சியுடன் கூடிய தேடலிலும் அது நிலைபெற வேண்டும். அப்போதுதான் அது வலிமையாக வளர முடியும், சமூகச் சூழலோடு இணைந்திருக்க முடியும், மேலும் தொழில்முறை வெற்றியை மட்டுமல்லாமல், நோக்கம், விழுமியங்கள் மற்றும் சேவை மனப்பான்மையையும் வழங்க முடியும். அறிவுத் தேடல் என்பது மனிதகுலத்திற்கு வழங்கப்பட்ட ஒரு கொடை. இருப்பினும், அறிவு என்பது சுயநலம் கொண்டதாகவோ அல்லது உண்மை மற்றும் நன்மையிலிருந்து விலகியதாகவோ மாறிவிடக்கூடாது. அவ்வாறு நிகழும்போது, அது தற்பெருமை கொண்டதாகவும் மனிதாபிமானமற்றதாகவும் மாறும் ஆபத்து உள்ளது. மாறாக, உண்மையான அறிவு என்பது பணிவாகவும், வெளிப்படையானதாகவும் மற்றும் ஞானத்தை நோக்கியதாகவும் இருக்கும்.

தற்பெருமையைத் தவிர்த்து ஞானத்தை நோக்கிய பயணம்

ஒரு கிறிஸ்தவப் பார்வையில், சிலுவை என்பது அறிவைத் தேடும் இந்தத் தேடலின் புனிதத்தைக் குறிக்கிறது. உண்மை என்பது தந்திரமாகக் கையாளப்படுவதற்கோ அல்லது சொந்தமாக்கிக் கொள்வதற்கோ உரியதல்ல, மாறாக பணிவுடனும் பொறுப்புடனும் பெற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது. உண்மை, பகுத்தறிவு மற்றும் சுதந்திரம் ஆகியவற்றுக்கு இடையேயான நல்லிணக்கத்தை நாம் கிறிஸ்துவில் காண்கிறோம். நம்பிக்கை என்பது பகுத்தறிவுக்கு எதிரானது அல்ல; அது பகுத்தறிவைச் சுத்திகரித்து மேம்படுத்துகிறது.

பல்கலைக்கழகத்தின் உண்மையான மதிப்பீடு

ஒரு பல்கலைக்கழகம் அதன் அளவைக் கொண்டோ அல்லது பட்டதாரிகளின் எண்ணிக்கையைக் கொண்டோ மதிப்பிடப்படுவதில்லை, மாறாக அதனால் உருவாக்கப்படும் மனிதர்களின் தரத்தைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது. அதன் நோக்கம் தகுதியுள்ள நபர்களை உருவாக்குவதோடு மட்டும் நின்றுவிடாமல்,  ஞானமுள்ளவர்களாகவும், அறநெறி கொண்டவர்களாகவும், மற்றவர்களுக்குச் சேவை செய்வதில் அர்ப்பணிப்பு உள்ளவர்களாகவும் அவர்களை உருவாக்குவதும் ஆகும். இந்த வளாகம் அறிவு, நேர்மை மற்றும் சேவையின் பலன்களைத் தரட்டும். உண்மையைத் தேடும் மற்றும் பொது நலனுக்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் தலைமுறைகளை இது உருவாக்கட்டும். இந்த நம்பிக்கைகளுடன், உங்கள் அனைவரையும் இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்க வேண்டுகிறேன், மேலும் உங்கள் அனைவரையும் ஞானத்தின் இருப்பிடமான அன்னை மரியாவின் பாதுகாப்பில் ஒப்படைக்கிறேன். நன்றி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 ஏப்ரல் 2026, 13:05