திருத்தந்தையை உற்சாகமுடன் வரவேற்கும் மக்கள்  திருத்தந்தையை உற்சாகமுடன் வரவேற்கும் மக்கள்   (ANSA)

அங்கோலாவில் திருத்தந்தைக்கு எழுச்சியூட்டும் வரவேற்பு!

வியானா மறைமாவட்ட ஆயர் எமிலியோ சும்பெலேலோ அவர்கள், திருத்தந்தையை ஒரு தந்தையாகவும் மேய்ப்பராகவும் போற்றி வரவேற்றார். இளைஞர்கள், மரியாயின் சேனை உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் பாரம்பரிய இசை மற்றும் பாடல்கள் மூலம் தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

ஜான்சிராணி அருளாந்து  வத்திக்கான்

அங்கோலா நாட்டிற்குத் தனது திருத்தூதுப் பயணத்தைத் தொடங்கியுள்ள திருத்தந்தையை வரவேற்கும் விதமாக, அந்நாட்டு மக்கள் ஒரு பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தினர். பயணத்தின் முதல் நாளில் தலைநகர் லுவாண்டாவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு திருத்தந்தைக்குத் தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

இந்த வரவேற்பு நிகழ்வில் இளைஞர்கள், மரியாயின் சேனை உறுப்பினர்கள், பல்வேறு திருத்தூது இயக்கங்களைச் சேர்ந்த நம்பிக்கையாளர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர். வியானா மறைமாவட்ட ஆயர் எமிலியோ சும்பெலேலோ அவர்கள், அங்கோலாவிற்கான உங்கள் வருகையின் இந்த முதல் நாளில், நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இங்கே கூடியிருக்கிறோம், ஒரு தந்தையாகவும் மேய்ப்பராகவும் எங்களை உங்கள் இதயத்தில் எப்போதும் தாங்கியிருக்கிறீர்கள் என்பதை நாங்கள் அறிவோம், உங்களை நேரடியாக சந்திப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம் என்று கூறி திருத்தந்தையை வரவேற்றார்.

இளைஞர்கள் தங்கள் பாரம்பரிய இசை மற்றும் பாடல்கள் மூலம் திருத்தந்தையை வரவேற்றனர். ஒரு தந்தையைப் பார்க்கும் ஆர்வத்துடனும், ஆன்மீக மேய்ப்பரைச் சந்திக்கும் நெகிழ்ச்சியுடனும் மக்கள் கொடிகளை அசைத்து முழக்கமிட்டது அந்த இடத்தையே விழாக்கோலமாக மாற்றியது.

அங்கோலா நாட்டின் மிகவும் பழமையான மற்றும் புனிதமான திருத்தலங்களில் ஒன்றான முக்சிமா (Muxima) அன்னை மரியா திருத்தலம், அந்நாட்டு மக்களின் நம்பிக்கையின் அடையாளமாகத் திகழ்கிறது. இந்தத் திருத்தலம் "அமலோற்பவ அன்னைக்கு" அர்ப்பணிக்கப்பட்டிருந்தாலும், அங்கோலா மக்கள் மரியாவை அன்புடன் மாமா முக்சிமா" (Mama Muxima) என்றே அழைக்கின்றனர்.

ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான திருப்பயணிகளை ஈர்க்கும் ஒரு முக்கிய ஆன்மீகத் தலமாக முக்சிமா (Muxima) திருத்தலம் விளங்கி வருகிறது. நம்பிக்கையாளர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றவும், அன்னையின் ஆசியைப் பெறவும் இத்தலத்தை நோக்கித் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர்.

அங்கோலா பயணத்தின் போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான நம்பிக்கையாளர்கள், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களிடம் தங்கள் அன்பு மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்தினர். அப்போது வாசிக்கப்பட்ட விண்ணப்பத்தில், திருத்தந்தை மீதும் திருஅவை மீதும் தங்களுக்குள்ள மாறாத பற்றுறுதியை அவர்கள் உறுதிப்படுத்தினர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 ஏப்ரல் 2026, 10:48