தேடுதல்

மறையுரை வழங்கும் திருத்தந்தை மறையுரை வழங்கும் திருத்தந்தை   (ANSA)

மீட்பின் பாதையில் ஒரு கூட்டுப்பயணம்

விவிலியம் வாசிப்பது ஒரு தனிப்பட்ட செயல் அல்ல, அது திருஅவையின் வழிகாட்டுதலோடு மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு 'கூட்டுப் பயணம்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

ஏப்ரல் 23, வியாழன்று, எக்குவடோரியல் கினியாவின் தலைநகரான மலாபோ விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற திருப்பலியில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வழங்கிய மறையுரை.

அன்பான சகோதர சகோதரிகளே,

நாம் கேட்ட விவிலிய வாசகங்கள், திருவிவிலியத்தை நாம் உண்மையாகவே புரிந்து கொள்கிறோமா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள அழைப்பு விடுக்கின்றன. இது ஒரு முக்கியமான கேள்வி, ஏனென்றால் இது கடவுளின் வார்த்தையை மட்டுமல்ல, அவருடைய ஞானத்தால் அவர் தொடர்ந்து வழிநடத்தும் நம் சொந்த வாழ்க்கையின் கதையையும் வாசிக்க உதவுகிறது.

திருத்தூதர் பிலிப்பு எத்தியோப்பிய அதிகாரியைச் சந்தித்தபோது, "நீர் வாசிப்பதன் பொருள் உமக்குத் தெரிகிறதா?" என்று கேட்டார். அதற்கு அந்த அதிகாரி, "யாராவது எனக்கு விளக்கிக் கூறாவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும்?" என்று பதிலளித்தார். இந்த பதில் அவரது தாழ்மையையும் திறந்த மனதையும் காட்டுகிறது. அவர் செல்வந்தராகவும் கல்வி கற்றவராகவும் இருந்தபோதிலும், அவர் உண்மையான விடுதலையைப் பெற்றிருக்கவில்லை. இருப்பினும், பிலிப்பு உடனான சந்திப்பின் மூலமாகவும் நற்செய்தியின் மூலமாகவும் அவரது வாழ்க்கை மாற்றமடைந்தது. ஒரு சாதாரண வாசகராக இருந்த அவர், இறைவார்த்தையின் வாழும் சாட்சியாக மாறினார். திருமுழுக்கின் வழியாக, அவர் இனி அந்நியர் அல்ல, மாறாக கடவுளின் பிள்ளையாக மாறினார்.

அவரைப் போலவே, நாமும் திருமுழுக்கின் வழியாக நம்பிக்கையைப் பெற்றுள்ளோம். திருஅவைக்குள்ளும் தூய ஆவியின் வழிகாட்டுதலுடனும் நம்பிக்கையோடு வாசிக்கப்படும்போது மட்டுமே திருவிவிலியம் அதன் உண்மையான அர்த்தத்தை வெளிப்படுத்துகிறது. இது ஒருபோதும் தனிப்பட்ட செயல் அல்ல, மாறாக ஒரு கூட்டுப் பயணம். முறையான வழிகாட்டுதலின் மூலம், அனைத்து மறைநூல்களும் கடவுளின் வாக்குறுதிகளை நிறைவேற்றி மீட்பைக் கொண்டுவரும் மனித உருவெடுத்த 'வாழ்வு தரும் இறைவார்த்தையாகிய  இயேசு கிறிஸ்துவையே சுட்டிக்காட்டுவதை நாம் காண்கிறோம்.

இயேசு தந்தையை வெளிப்படுத்தி வாழ்வை அளிக்கிறார். பாலை நிலத்தில் கடவுள் தம் மக்களுக்கு மன்னாவை உணவாக அளித்ததை அவர் நினைவுபடுத்துகிறார், அது இப்போது நற்கருணையில் நிறைவேறியுள்ளது. மன்னாவை உண்டவர்கள் இறந்தனர், ஆனால் வாழ்வின் அப்பமாகிய கிறிஸ்துவைப் பெறுபவர் என்றென்றும் வாழ்வார். அவர் தமது இறப்பு மற்றும் உயிர்ப்பின் வழியாக நம்மைப் பாவத்திலிருந்து விடுவித்து, நிலை வாழ்விற்கான பாதையை நமக்காகத் திறக்கிறார்.

எனவே, நாம் ஒரு முடிவை எடுக்க அழைக்கப்படுகிறோம்: அவரில் நம்பிக்கை கொள்ளவும், அவர் வழங்கும் நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளவும் அழைக்கப்படுகிறோம். வாழ்வு மற்றும் நீதிக்கான நமது ஆழமான வேட்கை, நமக்காகத் தம்மையே கையளிக்கும் கிறிஸ்துவில் நிறைவடைகிறது. இருளில் ஒளி, வலுக்குறைவில் ஆற்றல் மற்றும் மரணத்திற்கு அப்பாற்பட்ட வாழ்வு என அவரில் நாம் அனைத்தையும் காண்கிறோம்.

நாம் புனித திருவிருந்தைக் கொண்டாடும்போது, கிறிஸ்துவே நமது வாழ்வு மற்றும் நமது மீட்பு என்று பறைசாற்றுகிறோம். நம்முடைய கடின சூழல் மறைந்துவிடாது, ஆனால் அவை இறை பிரசன்னத்தால் ஒளிபெறுகின்றன. அவருடைய வார்த்தை நமக்கு நற்செய்தியாக இருக்கிறது, மேலும் நமது வாழ்வு, சேவை, அன்பு மற்றும் மன்னிப்பு ஆகியவற்றின் மூலம் அதை உலகுடன் பகிர்ந்து கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம்.

திருத்தந்தை பிரான்சிஸ் நமக்கு நினைவூட்டுவது போல, நற்செய்தியின் மகிழ்ச்சி இயேசுவைச் சந்திப்பவர்களின் இதயங்களை நிரப்புகிறது. நாம் மற்றவர்களுக்கு நம்மை மறைத்துக் கொள்ளாமல், கடவுளின் அன்பிற்கு, குறிப்பாக ஏழைகளுக்குச் சேவை செய்வதிலும் நீதியை நிலைநாட்டுவதிலும் திறந்த மனதுடன் இருப்போம். ஈக்குவடோரியல் கினியாவின் திருஅவையாகிய நீங்கள், உங்கள் பணியை மகிழ்ச்சியுடன் தொடர உங்களை ஊக்குவிக்கிறேன். கடவுளின் வார்த்தை அனைவருக்கும் நம்பிக்கையையும் மாற்றத்தையும் கொண்டு வரும் வகையில், உறுதியுடன் நற்செய்தியை அறிவித்து உங்கள் வாழ்வின் மூலம் சான்று பகிருங்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 ஏப்ரல் 2026, 09:00