திருத்தந்தையின் ஆப்பிரிக்கத் பயணத்திற்கான இலச்சினைகள் வெளியீடு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
வரும் ஏப்ரல் மாதம் 13 முதல் 23 வரை இடம்பெறவுள்ள, அல்ஜீரியா, கேமரூன், அங்கோலா மற்றும் ஈக்வடோரியல் கினியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் ஆப்பிரிக்கத் திருத்தூதுப் பயணத்திற்கான அதிகாரப்பூர்வ இலச்சினைகளையும் விருதுவாக்குகளையும் வெளியிட்டுள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.
அல்ஜீரியாவின் வடிவமைப்பில், அமைதியையும் கிறிஸ்தவ-முஸ்லிம் உரையாடலையும் குறியீடாகக் காட்டும் 'சி ரோ' மற்றும் தேசிய வரைபடத்துடன், ஒரே கோப்பையில் நீர் அருந்தும் இரண்டு புறாக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், அரபு, அமாசிக் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் "உங்களுக்கு அமைதி உரித்தாகுக" (யோவா 20:19) என்ற அதன் விருதுவாக்கும் இணைக்கப்பட்டுள்ளது.
கேமரூனின் இலச்சினை, திறந்த திருவிவிலியம், அதன் மேல் தேசிய வரைபடம், சிலுவை, மற்றும் கிறிஸ்துவில் உள்ள ஒன்றிப்பைக் குறிக்கும் ஒரு தங்கப் புறா ஆகியவற்றைச் சித்தரிக்கிறது; அதனுடன் “அவர்கள் அனைவரும் ஒன்றாய் இருப்பார்களாக” (யோவான் 17:21) என்ற அதன் விருதுவாக்கும் இடம்பெற்றுள்ளது.
அங்கோலாவின் இலச்சினை இறையாசீர், ஆப்பிரிக்க அடையாளம் மற்றும் இறைபராமரிப்பு ஆகியவற்றைக் குறிக்கும் வகையில் சிவப்பு நிறங்கள், வரைபடம், ஆறுகள் மற்றும் சிலுவை ஒன்றை உள்ளடக்கியுள்ளதுடன், அதன் விருதுவாக்கு நம்பிக்கை, ஒப்புரவு மற்றும் அமைதியை முன்னிலைப்படுத்துகிறது.
எக்குவட்டோரியல் கினியாவின் இலச்சினை, ஒரு தங்கச் சிலுவை, தேசிய வரைபடம், குடும்ப நிழற்படங்கள் மற்றும் தொடக்க கால நற்செய்தியாளர்களுக்கான வரலாற்று மரியாதை ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளது. இவற்றுடன், “கிறிஸ்து, ஈக்வடோரியல் கினியாவின் ஒளி, நம்பிக்கையூட்டும் எதிர்காலத்தை நோக்கி” என்ற விருதுவாக்கும் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த இலச்சினைகள் நான்கு நாடுகளுக்கும் இடையே உரையாடல், நம்பிக்கை மற்றும் அமைதிக்கான ஒரு பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்துகின்றன என்று வத்திக்கான் கூறியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
