அன்புதான் வாழ்க்கைக்கு நிலைத்தன்மை அளிக்கிறது!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மார்ச் 28, சனிக்கிழமையன்று, காலை 11.45 மணிக்கு, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கோர்சிகா மற்றும் மொனாக்கோவின் பாதுகாவலர் புனித டிவோட்டா கோவிலிற்கு வெளியே இளைஞர்கள் மற்றும் கிறிஸ்தவப் புகுநிலையினருக்கு வழங்கிய அருளுரை.
அன்பான இளைஞர்களே, கிறிஸ்துவுக்காகத் தன் உயிரை ஈந்த புனித டிவோட்டா மற்றும் தொழில்நுட்பம் நிறைந்த உலகில் விசுவாசத்தின் நவீன சாட்சியாகத் திகழும் புனித கார்லோ அக்குதிஸ் ஆகியோரின் முன்மாதிரியான வாழ்வைப் நாம் பின்பற்றுவோம். விசுவாசம் காலத்தாலோ இடத்தாலோ கட்டுப்பட்டதல்ல என்பதை நமக்கு நினைவூட்டும் ஒளிவிளக்குகளாக இவ்விருவரும் திகழ்கின்றனர்.
கவனச்சிதறல்களும் தொடர்ச்சியான மாற்றங்களும் நிறைந்த இன்றைய உலகில், நாம் அன்பில் அதாவது, இறைவனின் அன்பிலும் நாம் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் அன்பிலும் நம்மை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். உண்மையான நிறைவு என்பது, உலகத்தின் நிலையற்றவைகளிலிருந்து வருவதில்லை; மாறாக, கடவுளுடனான நமது உறவு, இறைவேண்டல் மற்றும் தேவையில் இருப்பவர்களுக்குச் செய்யும் சேவையிலிருந்தே வருகிறது.
வாழ்க்கையின் பரபரப்புகளுக்கு மத்தியில், அமைதிக்கும் ஆழமான சிந்தனைக்கும் உரிய தருணங்களைத் தேடுமாறும், இறைவேண்டல் வழியாக இறைவனை நெருங்குமாறும் நான் உங்களை ஊக்குவிக்கிறேன். திருமுழுக்கிற்குத் தயாராகும் உங்களை, கிறிஸ்துவின் பாடுகளின் மறைபொருள்களைப் பற்றி ஆழமாகச் சிந்திக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பிறரன்பு என்பது நமது நம்பிக்கையின் அடித்தளம் என்பதை நினைவில்கொள்ளுங்கள். மேலும் இந்தப் பிறரன்பின் வழியாக கடவுளுடைய அன்புக்குச் சான்றாக இருப்பதற்கான வலிமையை நீங்கள் பெறுவீர்கள்.
ஒவ்வொரு சவாலிலும், குறிப்பாகத் துன்புறுவோருக்கும் ஒதுக்கப்பட்டோருக்கும், அன்புக்கும் நம்பிக்கைக்கும் உண்மையான எடுத்துக்காட்டுகளாகத் திகழுமாறு உங்களை நான் ஊக்குவிக்கிறேன். தூய ஆவியானவர் உங்கள் வழியாகப் பேசட்டும்; ஏனெனில், நம்முடைய சொந்த முயற்சிகளால் அல்ல, கடவுளுடைய அருளினாலேயே நாம் அவருடைய அன்புக்குச் சான்று பகர்கிறோம்.
கடவுளுக்கும் மற்றவர்களுக்கும் உங்களை முழுமையாக அர்ப்பணியுங்கள். ஏனென்றால் இங்குதான் நீங்கள் உண்மையான மகிழ்ச்சியையும் வாழ்வின் நோக்கத்தையும் காண்பீர்கள். உங்கள் அன்றாடப் பணிகளிலும், சமூகச் செயல்களிலும், உலகத்துடனான உங்கள் ஈடுபாட்டிலும் நற்செய்தியின்படி வாழுங்கள். நீதிக்காகக் குரலெழுப்புங்கள், ஏழைகளைக் கவனித்துக் கொள்ளுங்கள், துயருறுவோர் அனைவருடனும் ஒருமைப்பாட்டுணர்வைக் காண்பியுங்கள்.
நீங்கள் இந்தத் தலத்திருஅவையின் மற்றும் இந்த நாட்டின் இளம் முகம். மொனாக்கோ ஒரு சிறிய நாடு, ஆனால் அது ஒருமைப்பாட்டிற்கான சிறந்த இடமாகவும், நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும் திகழ முடியும். எல்லாவற்றையும் கடவுளுக்கு அர்ப்பணியுங்கள்; கிறிஸ்துவில் நண்பர்களாகவும், இந்தப் பயணத்தில் ஒருவருக்கொருவர் உண்மையுள்ள தோழர்களாகவும் இருக்க உங்களை அழைக்கும் ஒரு பணியாக எல்லாவற்றையும் வாழுங்கள்.
நீங்கள் கிறிஸ்துவின் அன்பிற்கு உண்மையுள்ள, மகிழ்ச்சியான சாட்சிகளாகத் திகழ்ந்து, நம்பிக்கையை அளித்து, ஒரு சிறந்த உலகைக் கட்டியெழுப்புவீர்களாக. நான் உங்கள் அனைவரையும் அன்னை புனித கன்னி மரியா, புனித டிவோட்டா மற்றும் புனித கார்லோ அக்குதிஸ் ஆகியோரின் பாதுகாப்பில் ஒப்படைக்கிறேன். உங்கள் அனைவருக்கும் எனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்குகிறேன்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
