தேடுதல்

திருத்தந்தை லியோ திருத்தந்தை லியோ   (AFP or licensors)

அமேசான் தலத்திருஅவை ஒன்றிப்பின் அடையாளமாகத் திகழ வேண்டும்!

அமேசான் தலத்திருஅவைக்கு அனுப்பியுள்ள காணொளிச் செய்தியொன்றில், விசுவாசத்தைக் கிறிஸ்துவின் அன்பில் ஆழமாக வேரூன்றச் செய்வதன் முக்கியத்துவத்தையும், நற்செய்தியானது கலாச்சாரத்திற்குப் பொருத்தமானதாகவும் உள்ளூர் மரபுகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கொலம்பியாவின் பொகோட்டாவில் இடம்பெற்ற அமேசான் தலத்திருஅவை மாநாட்டின் (CEAMA) 6-வது பேரவைக்கு அனுப்பியுள்ள காணொளிச் செய்தியொன்றில், அமேசான் பகுதியில் நற்செய்தியைப் பண்பாட்டுடன் ஒருங்கிணைக்கும் தனது பணியைத் தொடருமாறு ஊக்குவித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

மார்ச் 17, செவ்வாய்க்கிழமையன்று அனுப்பியுள்ள இந்த வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு அதன் தலத்திருஅவையை ஊக்கப்படுத்தியுள்ள திருத்தந்தை, "அது தனது பணியின் பன்முகத்தன்மையில் ஒன்றிப்பின் அடையாளமாகத் திகழ வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அமேசான் சமூகங்களின் எதிர்காலப் பாதையை அறிந்துகொள்வதில் காட்டிய அர்ப்பணிப்பிற்காகப் பங்கேற்பாளர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டுள்ள திருத்தந்தை, அப்பகுதி சந்தித்துவரும் பொருள்சார் மற்றும் ஆன்மிகப் போராட்டங்களையும் ஒப்புக்கொண்டுள்ளதுடன், குறிப்பாக, சமூக, சுற்றுச்சூழல் மற்றும் திருஅவைச் சார்ந்த சவால்களை எதிர்கொள்ளும்போது, ​​அதற்குத்  துணை நிற்கும் அனைவருக்கும் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

பன்முகத்தன்மையில் ஒன்றிப்பை வளர்க்கும் ஒரு “பாதுகாப்பான புகலிடமாக” திருஅவையின் பங்கை எடுத்துக்காட்ட, மெதுவான ஆனால் நீடித்த வளர்ச்சி மற்றும் உயிர்ப் பாதுகாப்பின் அடையாளமாக விளங்கும் ஷிஹுவாகோ (shihuahuaco) மரத்தின் உருவகத்தைப் பயன்படுத்தியுள்ளார் திருத்தந்தை.

விசுவாசத்தைக் கிறிஸ்துவின் அன்பில் ஆழமாக வேரூன்றச் செய்வதன் முக்கியத்துவத்தையும், நற்செய்தியானது கலாச்சாரத்திற்குப் பொருத்தமானதாகவும் உள்ளூர் மரபுகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் தனது செய்தியில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.

"கலாச்சாரப் பண்பாட்டுமயமாக்கல் என்பது கடினமான ஆனால் அவசியமான ஒரு பாதை," என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, 'கெரிடா அமேசோனியா' (Querida Amazonia) என்ற நூலை மேற்கோள் காட்டி, தூய ஆவியாரின் அருளடையாளத்தை விசுவாசிகள் தழுவிக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இறுதியாக, அப்பகுதியில் விசுவாசத்திற்காகத் துன்புற்றவர்களின் வழிமரபைத் தொடரும் விதமாக, அமேசான் கத்தோலிக்கர்கள் தங்களின் "மறைப்பணிச் சீடர்கள்" (missionary disciples) என்ற அடையாளத்தை ஆழப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்து தனது காணொளிச் செய்தியை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 மார்ச் 2026, 13:30