தேடுதல்

செய்தியாளர்களிடம் உரையாற்றும் திருத்தந்தை (கோப்புப் படம்) செய்தியாளர்களிடம் உரையாற்றும் திருத்தந்தை (கோப்புப் படம்) 

மத்திய கிழக்கில் அமைதி மற்றும் உரையாடல் நிகழட்டும்!

காஸ்தல் கந்தோல்போவில் செய்தியாளர்களுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில், "அமைதிக்காக இறைவேண்டல் செய்யுங்கள், அமைதிக்காக உழைப்போம், வெறுப்பைக் குறைப்போம்" என்று கூறிய திருத்தந்தை, அச்சுறுத்தல்கள் அல்லது ஆயுதங்களால் நிலைத்தன்மையைக் கட்டியெழுப்ப முடியாது" என்று குறிப்பிட்டார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மத்திய கிழக்கில் வன்முறை அதிகரித்து வரும் நிலையில், உலகத் தலைவர்கள் "அமைதிக்காக பாடுபட வேண்டும்" என்றும் "ஆயுதங்கள் இல்லாமல் தீர்வுகளைத் தேட வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

மசர்ச் 03, செவ்வாயன்று, திருத்தந்தையர்களின் கோடைகால ஓய்விடமான காஸ்தல் கந்தோல்போவில் செய்தியாளர்களுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை, "உலகளவில் வெறுப்பு அதிகரித்து வரும் நிலையில், பேச்சுவார்த்தைக்கு  வழி காண வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

"அமைதிக்காக இறைவேண்டல் செய்யுங்கள், அமைதிக்காக உழைப்போம், வெறுப்பைக் குறைப்போம்" என்று கூறிய திருத்தந்தை, அச்சுறுத்தல்கள் அல்லது ஆயுதங்களால் நிலைத்தன்மையைக் கட்டியெழுப்ப முடியாது" என்று குறிப்பிட்டார்.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் சம்பந்தப்பட்ட அண்மைய இராணுவ நடவடிக்கைகள் குறித்து இஞ்ஞாயிற்றுக்கிழமை வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையின் இறுதியில் தனது கரிசனையையும் அக்கறையையும் வெளிப்படுத்தினார் திருத்தந்தை.

அப்போது, "நீடித்த அமைதி மற்றும் நிலைத்தன்மையை நியாயமான, நேர்மையான மற்றும் பொறுப்பான உரையாடல் மூலம் மட்டுமே அடைய முடியும், அழிவையும் துன்பத்தையும் கொண்டுவரும் ஆயுதங்கள் மூலம் அல்ல" என்று உறுதிப்படக் கூறினார் திருத்தந்தை

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 மார்ச் 2026, 13:28