உலக குழந்தைகள் மருத்துவமனையின் ஆதரவாளர்கள் அமைப்பின் புதிய மருத்துவத் திட்டம்!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
தேவையில் இருக்கும் குழந்தைகளுக்கான குழந்தைகள் நல மருத்துவச் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், அமெரிக்காவைச் சேர்ந்த "உலக குழந்தைகள் மருத்துவமனையின் ஆதரவாளர்கள்" என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம், Teladoc Lite எனப்படும் அடிப்படை வசதிகளுடன் கூடிய மருத்துவ ஆலோசனை சேவை அமைப்பை திருத்தந்தைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
இந்த நிகழ்வு மார்ச் 4, புதன்கிழமையன்று வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் திருத்தந்தையின் புதன் பொது மறைக்கல்வி உரைக்கு முன்னதாக இடம்பெற்றது. இந்த அமைப்பின் தொலைதூர மருத்துவத் திறன்களை விளக்குவதற்காக, திருத்தந்தைக்கும் அர்ஜென்டினாவில் உள்ள ஒரு மையத்திற்கும் இடையே நேரடித் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
உரோமையிலுள்ள குழந்தை இயேசு மருத்துவமனையை உள்ளடக்கிய இந்த வலையமைப்பு, வளரும் நாடுகள் அல்லது போதுமான குழந்தை மருத்துவ வசதிகள் இல்லாத பகுதிகளில் உள்ள ஏறத்தாழ பத்து லட்சம் குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள Patrons எனப்படும் அமைப்பின் தலைவர் ஃபாபிரித்சியோ அரேங்கி பென்டிவோலியோ (Fabrizio Arengi Bentivoglio) அவர்கள், உலகெங்கிலும் உள்ள குழந்தைகளின் உடல்நலத்தை ஆதரிப்பதற்கும், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களுடன் இணைந்து தங்களது பராமரிப்புப் பணியைத் தொடருவதற்குமான அந்த அமைப்பின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
