திருத்தந்தைக்கு சுதந்திரப் பதக்கம்!
அபிசேக் ராஜா அலங்காரம் – வத்திக்கான்
மதச் சுதந்திரம், மனச்சான்றின்படி செயலாற்றுதல் மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றிற்காகத் தன் வாழ்நாள் முழுவதும் ஆற்றிய பணிகளை கௌரவிக்கும் விதமாக, அமெரிக்க தேசிய அரசியலமைப்பு மையம் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களுக்கு சுதந்திரப் பதக்கத்தை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இவ்வாண்டு ஜூலை 3, வெள்ளிக்கிழமையன்று, சுதந்திர அரங்கத்தில் இடம்பெறும் 38-வது ஆண்டு விருது வழங்கும் விழாவின்போது பெற்றுக்கொள்ளவிருக்கும் இந்த விருதிற்கான தனது ஏற்புரையை திருத்தந்தை வத்திக்கானில் இருந்து காணொளி வாயிலாக வழங்க இருக்கிறார்.
கடந்த 2025-ஆம் ஆண்டு மே மாதம் திருத்தந்தையாக பொறுப்பேற்றது முதல், பல்சமய உரையாடல் மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆகியவற்றின் வழியாக நல்லுறவை ஏற்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்து வரும் திருத்தந்தை, அனைவரும் மனித மாண்புடன் நடத்தப்படவும் அமைதியான முறையில் இணக்கமாக வாழவும் பல்வேறு சமயத் தலைவர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
திருத்தந்தைக்கு வழங்கப்படவிருக்கும் இந்த விருதினைப் பற்றி அமெரிக்கத் தேசிய அரசியலமைப்பு மையத்தின் தற்காலிகத் தலைவர் வின்ஸ் ஸ்டாங்கோ அவர்கள், "'மதச் சுதந்திரமும் சிந்தனை மற்றும் கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரமும் இல்லாமல் அமைதியை நிலைநாட்ட முடியாது' என்று திருத்தந்தை லியோ அவர்கள் வலியுறுத்தியுள்ளார்" என்றும், "அவரது இந்தக் கொள்கைகள் அமெரிக்க அரசியலமைப்போடு ஒன்றிணைந்து செல்கிறது" என்றும் தெரிவித்துள்ளார்.
1988-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சுதந்திரப் பதக்கம், உலக அளவில் சுதந்திரத்தை மேம்படுத்த உழைக்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களைக் கௌரவித்து வருகிறது. இந்த ஆண்டு இந்த விருது வழங்கும் விழாவானது பிலடெல்பியாவில் இடம்பெறும் அமெரிக்காவின் 250-வது ஆண்டைக் குறிக்கும் சுதந்திர வாரக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அமைய உள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
