உலகளாவிய ஆயுதக் குறைப்பு மற்றும் அமைதிக்கு திருத்தந்தை அழைப்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஆயுத மோதல்கள் மற்றும் இராணுவ விரிவாக்கங்கள் அதிகரித்து வரும் உலகில், ஆயுதக் குறைப்பு உரையாடல் மற்றும் அமைதிக்கான அவசர அழைப்பொன்றை தனது மார்ச் மாத இறைவேண்டல் கருத்தில் விடுத்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
தான் திருத்தந்தையாகப் பொறுப்பேற்றுக்கொண்ட நாளில் "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று உலகத்துடன் முதன்முதலில் பகிர்ந்து கொண்ட தனது வார்த்தைகளை நினைவுகூர்ந்துள்ள திருத்தந்தை, வன்முறையை விட தூதரக உறவுகளையும், இராணுவமயமாக்கலை விட ஆயுதக்களைப்பையும் முன்னுரிமைப்படுத்துமாறு நாடுகளை வலியுறுத்தியுள்ளார்.
திருத்தந்தையின் உலகளாவிய இறைவேண்டல் வலையமைப்பு (PWPN) மூலம், உலகளாவிய உறுதியற்றத் தன்மையை நிலைநிறுத்தும் வன்முறை சுழற்சியை நிராகரிக்குமாறு திருஅவைக்கும், நல்லெண்ணம் கொண்ட அனைத்து மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார் திருத்தந்தை.
மேலும் அனைத்து நாடுகளிடையேயும் நம்பிக்கை, நீதி மற்றும் உடன்பிறந்த உறவின் அடித்தளங்களின் மீது கட்டமைக்கப்பட்ட அமைதியைக் கட்டியெழுப்புமாறு அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை.
"கடவுள் நம்மை போருக்காக அல்ல, உடன்பிறந்த உறவுடன் வாழ்வதற்காகவே படைத்தார்" என்றும் அழிவுக்காக அல்ல, ஒன்றிப்பிற்காகவே படைத்தார்" என்றும் தனது இறைவேண்டல் கருத்தில் உலகிற்கு நினைவூட்டியுள்ளார் திருத்தந்தை.
அமைதியை ஓர் உறுதியான நடைமுறை சாத்தியமாக்குவதற்கு இறை உதவியையும், குறிப்பாக, மனிதகுலத்தை பெரும்பாலும் பிளவுபடுத்தும் வெறுப்பு, மனக்கசப்பு மற்றும் அலட்சியம் ஆகியவற்றின் தடைகளை கடக்க வலிமையை அருளும்படியாகவும் இறைவேண்டல் செய்துள்ளார் திருத்தந்தை.
"உண்மையான பாதுகாப்பு என்பது அச்சத்தில் இருந்தோ அல்லது கட்டுப்பாட்டிலோ இருந்தோ வர முடியாது, மாறாக ஒருவருக்கொருவர்மீதான புரிதல் மற்றும் ஒருமைப்பாட்டிலிருந்தே வர வேண்டும்" என்று தெளிவுபடுத்தியுள்ளார் திருத்தந்தை.
"அரசியல் தலைவர்கள் மரணத்தை விளைவிக்கும் திட்டங்களை நிராகரிக்கவும், ஆயுதப் போட்டியைக் கைவிடவும், மிகவும் வலுக்குறைந்தவர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தவும் துணிவு கொண்டிருக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.
"அணு ஆயுதங்களை உறுதியாக நிராகரிப்பதும் ஆயுதங்களைக் களைவதற்கான அழைப்பில் அடங்கும்" என்றும், "ஏனெனில் மனிதகுலத்தின் எதிர்காலம் அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தலால் கட்டுப்படுத்தப்படக்கூடாது" என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.
அமைதியை ஏற்படுத்துவதும் மனித உயிரைப் பாதுகாப்பதும் எப்போதும் உலகளாவிய முன்னுரிமைகளாக இருக்க வேண்டும் என்பதை திருத்தந்தையின் மார்ச் மாதத்திற்கான இறைவேண்டல் கருத்து எடுத்துக்காட்டுகிறது.
"திருத்தந்தையுடன் இறைவேண்டல் செய்யுங்கள்" (Pray with the Pope) பரப்புரையின் ஒரு பகுதியான இம்மாத இறைவேண்டல் முன்னெடுப்பு, உலகெங்கிலும் உள்ள மக்களை அமைதிக்கான இதயப்பூர்வமான இறைவேண்டலில் இணையவும், ஒன்றிணைந்து சிறந்ததொரு எதிர்காலத்தை உருவாக்கவும் நம்பிக்கையுடன் அழைக்கிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
