சிறார் பாதுகாப்புக்கான பாப்பிறை ஆணையத்தின் உறுப்பினர்கள் சிறார் பாதுகாப்புக்கான பாப்பிறை ஆணையத்தின் உறுப்பினர்கள்   (@Vatican Media)

திருஅவையின் வாழ்விற்கு சிறார்களைப் பாதுகாப்பது மிகவும் அவசியம்!

திருத்தந்தை தனது உரையில் கூட்டுப் பொறுப்புடன் செயலாற்ற அழைப்பு விடுத்த திருத்தந்தை, "வலுக்குறைந்தோரைப் பாதுகாப்பது திருஅவை வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் ஊடுருவியிருக்க வேண்டும்" என்று அவர்கள் அனைவருக்கும் நினைவூட்டினார்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மார்ச் 16, திங்களன்று, சிறார் பாதுகாப்புக்கான பாப்பிறை ஆணையத்தின் ஆண்டு நிறையமர்வுக்  கூட்டத்தின் உறுப்பினர்களிடையே ஆற்றிய உரையில், திருஅவையில் பாலியல் முறைகேடுகளால் பாதிப்பிற்குள்ளாகும் குழந்தைகளைப் பாதுகாப்பதன் அவசியத் தேவைக் குறித்து எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

பேராயர் திபால்ட் வெர்னி மற்றும் ஆயர் லூயிஸ் மனுவேல் அலி ஹெர்ரெரா இருவரின்  தலைமையில் இயங்கிவரும் இந்த ஆணைக்குழுவின் தொடர்ச்சியான முயற்சிகளைப் பாராட்டிய திருத்தந்தை, திருஅவைக்குள் ஒரு 'பராமரிப்புப் பண்பாட்டின்' முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

சிரார் மீதான பாலியல் முறைகேட்டினைத் தடுப்பதில் திருஅவையின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய திருத்தந்தை, "இந்தப் பணி அதன் நோக்கத்திற்கு இன்றியமையாதது" என்றும் குறிப்பிட்டுக் காட்டினார்.

மற்ற வத்திக்கான் அமைப்புகளுடன் இவ்வாணையம் மேற்கொண்டுள்ள ஒத்துழைப்பைப் பாராட்டிய திருத்தந்தை, எண்மமுறை (digital abuse) முறைக்கேட்டுடன் தொடர்புடைய பாதிப்புகள் போன்ற வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்வதில் தொடர்ச்சியான முன்னேற்றத்தை வலியுறுத்தினார்.

மேலும் பல்துறை அணுகுமுறையின் முக்கியத்துவம் (multi-disciplinary approach) குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை, குறிப்பாக, பாதிப்புக்குள்ளாகும் தன்மை குறித்த மாறிவரும் கருத்துக்கள் மற்றும் பாலியல் முறைகேடுகள் தடுப்பில் தொழில்நுட்பம் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது தொடர்பான ஆணையத்தின் எதிர்கால அறிக்கைகள் மீது நம்பிக்கை தெரிவித்தார்.

கூட்டுப் பொறுப்புடன் செயலாற்ற அழைப்பு விடுத்த திருத்தந்தை, "வலுக்குறைந்தோரைப் பாதுகாப்பது திருஅவை வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் ஊடுருவியிருக்க வேண்டும்" என்று அவர்கள் அனைவருக்கும் நினைவூட்டினார்.

இறுதியாக, அப்பணிக்குழுவின் பணியைத் திருஅவையின் அன்னையாம் புனித மரியாவின் பரிந்துரை இறைவேண்டலில் ஒப்படைத்த திருத்தந்தை, அவர்கள் அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கி தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 மார்ச் 2026, 13:44