"விருந்தோம்பல் பேராலயம்” நிகழ்வில் பங்கேற்றவர்களுடன் திருத்தந்தை "விருந்தோம்பல் பேராலயம்” நிகழ்வில் பங்கேற்றவர்களுடன் திருத்தந்தை   (@Vatican Media)

திருக்குடும்பத்தால் ஈர்க்கப்பட்ட விருந்தோம்பலைப் பேணுங்கள்!

திருத்தந்தை தனது உரையில், விருந்தோம்பலின் ஒரு முன்மாதிரியாக புனித யோசேப்பை எடுத்துக்காட்டி, "உண்மையான அக்கறை என்பது மற்றவர்களுடன் உடனிருந்து அவர்களின் நல்வாழ்வுக்குப் பொறுப்பேற்பதை உள்ளடக்கியது" என்று “விருந்தோம்பல் பேராலயம்” நிகழ்வில் பங்கேற்றவர்களிடம் எடுத்துரைத்தார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மற்றவர்களை வரவேற்பதன் முக்கியத்துவத்தையும், கவனத்துடன் பணியாற்றுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி, நாசரேத்தின் திருக்குடும்பத்திடமிருந்து விருந்தோம்பல் கலையைக் கற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

மார்ச் 12, வியாழக்கிழமையன்று, திருப்பீடத்தில் இத்தாலியின் சாக்ரோஃபானோவில் நிகழ்ந்த “விருந்தோம்பல் பேராலயம்” நிகழ்வில் பங்கேற்றவர்களிடம் உரையாற்றியபோது இவ்வாறு அழைப்புவிடுத்த திருத்தந்தை, “இளைஞர்களும் திருஅவையும்: சொந்தத்தை வளர்க்கும் விருந்தோம்பல்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு தனது எண்ணங்களை அவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

கேட்கும் திறனிலிருந்தும் விருந்தோம்பல் வழங்கும் திறனிலிருந்தும் உண்மையான ஒருமைப்பாடு எவ்வாறு பிறக்கிறது என்பதைப் பற்றி  எடுத்துக்காட்டிய திருத்தந்தை, "இது இளைஞர்களுக்கு மிகவும் முக்கியமானது" என்றும், "அவர்கள் சமூகம் மற்றும் திருஅவை இரண்டிற்கும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் உருவாக்குகிறார்கள்" என்றும் கூறினார்.

"இளைஞர்களை வரவேற்பது என்பது அவர்களின் குரல்களுக்குச் செவிமடுப்பதும், அவர்களின் வாழ்க்கையில் தூய ஆவியாரின் உடனிருப்பை அங்கீகரிப்பதும் ஆகும்" என்று அவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார் திருத்தந்தை.

"இருத்தல்" மற்றும் "கவனிப்பு" என்பதன் கிறிஸ்தவ அர்த்தத்தைக் குறித்தும் வலியுறுத்திய திருத்தந்தை, தனிநபர்கள் தங்கள் நேரம், அனுபவங்கள் மற்றும் மதிப்பீடுகளை தங்களைச்  சுற்றியுள்ள சமூகங்களில் பகிர்ந்து கொள்ளுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார்.

திருக்குடும்பத்திலிருந்து உள்ளொளிப் பெற்றவராக, "இயேசுவைத் தேடும் அவர்களின் பயணம், உறவுகளில் இருப்பு மற்றும் பொறுப்பின் விழுமியத்தைக் கற்பிக்கிறது" என்று அவர்களிடம் குறிப்பிட்டுக் காட்டினார் திருத்தந்தை.

குறிப்பாக, விருந்தோம்பலின் ஒரு முன்மாதிரியாக புனித யோசேப்பை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, "உண்மையான அக்கறை என்பது மற்றவர்களுடன் உடனிருந்து அவர்களின் நல்வாழ்வுக்குப் பொறுப்பேற்பதை உள்ளடக்கியது" என்று சுட்டிக்காட்டினார்.

இறுதியாக, விருந்தோம்பல், நன்மை, உடன்பிறந்த உறவு மற்றும் புனிதத்தை ஊக்குவிக்கும் சூழல்களை வளர்ப்பதில் கல்வியாளர்களாகத் திகழ்ந்திடுமாறு அனைத்துப் பங்கேற்பாளர்களையும் ஊக்குவித்து தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 மார்ச் 2026, 10:44