தேடுதல்

தேசிய உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அமைப்பின் பங்கேற்பாளர்களுடன் திருத்தந்தை தேசிய உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அமைப்பின் பங்கேற்பாளர்களுடன் திருத்தந்தை   (ANSA)

உடல் உறுப்பு தானம் ஓர் உடன் பிறந்த உறவின் செயல்!

திருத்தந்தை தனது உரையில், "உடல் உறுப்பு தானங்கள் கட்டாயமற்ற சுயவிருப்பத்தின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும்" என்றும், "அது வணிகமயமாக்கப்படக் கூடாது" என்றும் வலியுறுத்தியதுடன், "உறுப்பு மாற்று மருத்துவமானது நம்பிக்கை, பொறுப்புணர்வு மற்றும் தாராள மனப்பான்மை ஆகியவற்றைச் சார்ந்தே இயங்குகிறது" என்று எடுத்துரைத்தார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

திருஅவையின் கடந்த கால வழிகாட்டுதல்களையும், சுற்றுமடல்களையும் சுட்டிக்காட்டி, உடல் உறுப்பு தானம் என்பது ஓர் ஒருமைப்பாடு மற்றும் உடன் பிறந்த உறவின் செயல் என்று அங்கீகரித்ததுடன், அதன் தார்மீக மற்றும் மனிதாபிமான முக்கியத்துவத்தை வலியுறுத்தினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

மார்ச் 26, வியாழனன்று, தேசிய உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அமைப்பின் பங்கேற்பாளர்களைத் திருப்பீடத்தில் சந்தித்து உரையாடியபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, அவர்கள் செய்து வரும் பணிகளுக்காக நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

இத்தாலியில் முதல் உடல் உறுப்பு தானம் நடைபெற்று 70 ஆண்டுகள் நிறைவடைவதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, அருளாளர் கார்லோ க்னோச்சி அவர்கள் தனது மறைவிற்குப் பிறகு செய்த கண் தானம், அந்த நாட்டில் நவீன உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்கான அறநெறிச் சட்டங்கள் உருவாக எப்படி முன்னோடியாக இருந்தது என்பதை எடுத்துக்காட்டினார்.

"உடல் உறுப்பு தானங்கள் கட்டாயமற்ற சுயவிருப்பத்தின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும்" என்றும், "அது வணிகமயமாக்கப்படக் கூடாது" என்றும் வலியுறுத்திய திருத்தந்தை, "உறுப்பு மாற்று மருத்துவமானது நம்பிக்கை, பொறுப்புணர்வு மற்றும் தாராள மனப்பான்மை ஆகியவற்றைச் சார்ந்தே இயங்குகிறது" என்றும் எடுத்துரைத்தார்.

மனித மாண்பைப் பேணுவதோடு, உடல் உறுப்புகளுக்கான அதிகப்படியானத் தேவையைப் பூர்த்தி செய்யத் தொடர்ந்து அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுமாறும் இவ்வமைப்பின் பங்கேற்பாளர்களுக்கு  அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை துறையில் பணியாற்றும் நலவாழ்வுப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் நிறுவனங்களுக்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்ட திருத்தந்தை, முறையான விழிப்புணர்வு மற்றும் தன்னலமற்ற உடல் உறுப்பு தானக் கலாச்சாரத்தை மக்களிடையே வளர்க்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இறுதியாக, இந்நிகழ்வின் பங்கேற்பாளர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரையும் இறைவனின் பரிந்துரை செபத்தில் ஒப்படைத்து, தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கி தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 மார்ச் 2026, 14:58