உரை வழங்கும் திருத்தந்தை உரை வழங்கும் திருத்தந்தை   (ANSA)

இராணுவச் சேவை என்பது இறை அருளில் ஊன்றிய ஓர் அழைப்பு!

திருத்தந்தை தனது உரையில், இராணுவச் சேவையை இறை அருளில் ஊன்றிய ஓர் அழைப்பாக விவரித்ததுடன், "வலுக்குறைந்தவர்களைக் காப்பதும், அமைதியைப் பாதுகாப்பதும், அனைத்துலக அமைதி காக்கும் முயற்சிகளில் பணியாற்றுவதுமே இந்தச் சேவையின் நோக்கம்" என்று எடுத்துக்காட்டினார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

“சமூகம் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள முடிந்தாலும், அவற்றை உள்வாங்கிக் கொள்ளத் தவறிவிடுகிறது” என்றும், “குறிப்பாக வரலாற்றில் கடவுளின் இருப்பை உணர மறந்துவிடுகிறது” என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

மார்ச் 07, சனிக்கிழமையன்று, இத்தாலிய இராணுவப் பேராயரகத்தின் (Military Ordinariate of Italy) நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அதன் உறுப்பினர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, அதன் கடந்த கால நினைவுகளைப் போற்றுவதன் அவசியத்தையும், அர்ப்பணிப்புடன் கூடிய சேவையையும் வலியுறுத்தினார்.

உலகெங்கிலும் உள்ள இராணுவ பேராயரகங்களுக்கு இடையே தொடர்ச்சியான ஒத்துழைப்பு நிலவ வேண்டும் என்று  ஊக்குவித்த திருத்தந்தை, "புனித அகுஸ்தினார் காட்டிய வழியில், இராணுவ தனி இல்ல அருள்பணியாளர்கள் (chaplains)  'அன்பின் பணியை' வெளிப்படுத்த வேண்டும்" என்றும், "தங்கள் உயிரையே தியாகம் செய்த அவர்களின் வீரத்தைப் பின்பற்ற வேண்டும்" என்றும் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.

மேலும், இராணுவச் சேவையை இறை அருளில் ஊன்றிய ஓர் அழைப்பாக விவரித்த திருத்தந்தை, "வலுக்குறைந்தவர்களைக் காப்பதும், அமைதியைப் பாதுகாப்பதும், அனைத்துலக அமைதி காக்கும் முயற்சிகளில் பணியாற்றுவதுமே இந்தச் சேவையின் நோக்கம்" என்றும் மொழிந்தார்.

இராணுவப் பேராயரகத்திற்குள் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய முயற்சிகளைப் பாராட்டிய திருத்தந்தை, குறிப்பாக, மேய்ப்புப்பணி மையம், தனி இல்ல அருள்பணியாளர்களுக்கான பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் ஆன்மிக உதவி மையம் ஆகியவை நவீன சவால்களை எதிர்கொள்வதையும், நம்பிக்கை, கலாச்சாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு இடையே கலந்துரையாடலை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன என்று எடுத்துக்காட்டினார்.

அமைதி மற்றும் மோதல்கள் நிறைந்த இரு காலங்களிலும், இராணுவத்தினர் புரிந்த தியாகங்களையும் அவர்கள் காட்டிய துணிச்சலையும் இந்த நூற்றாண்டு விழா நினைவுபடுத்தியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 மார்ச் 2026, 12:06