உருமாற்ற நிகழ்வு உயிர்ப்பின் ஒளியை முன்னறிவிக்கின்றது!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
"இயேசுவின் தோற்றமாற்றம் (உருமாற்றம்) என்பது உயிர்ப்பின் ஒளியை, கிறிஸ்துவின் இறப்பு மற்றும் உயிர்த்தெழுதலின் நிகழ்வை முன்னறிவிக்கிறது" என்றும், "வன்முறை, வலி அல்லது கைவிடப்பட்டதால் காயமடைந்த அனைத்துத் துயருறும் உடல்களுக்கும் கிறிஸ்து எவ்வாறு ஒளியைக் கொண்டுவருகிறார் என்பதை வெளிப்படுத்துகிறது" என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
மார்ச் 01, ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
இந்நாளில் திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு குறித்த நற்செய்தி வாசகத்தை (காண்க. மத் 17: 1-9) மையமாகக் கொண்டு தனது எண்ணங்களை விசுவாசிகளுடன் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை
கிறிஸ்து கடவுளின் வாழும் ஞானம்
"மோசேக்கும் எலியாவுக்கும் இடையில் இயேசு நிற்கும் இந்த நிகழ்வு, திருச்சட்டம் மற்றும் இறைவாக்கினர்கள் இரண்டின் நிறைவேற்றத்தையும், கிறிஸ்துவை கடவுளின் வாழும் ஞானமாக வெளிப்படுத்துவதையும் குறிக்கிறது" என்று வலியுறுத்தினார்.
தூய ஆவியார் ஓர் ஒளிமயமான மேகத்தில் அவரைச் சூழ்ந்து கொண்டிருக்கும் போது, இயேசுவை "என் அன்பார்ந்த மைந்தர் இவரே" என்று அறிவிக்கும் இறைத்தந்தையின் குரலின் முக்கியத்துவத்தை விசுவாசிகளுக்கு எடுத்துரைத்தார் திருத்தந்தை.
"இந்தத் தோற்றமாற்ற நிகழ்வு, கடவுள் தன்னை எவ்வாறு வெளிப்படுத்துகிறார் என்பதைக் காட்டுகிறது, அதாவது, அனைவருக்கும் ஒரே நேரத்தில் அல்ல, ஆனால் ஒரு சிறிய குழுவினருக்கு (சீடர்கள்) வலிமை வாய்ந்த மற்றும் மாட்சிமையான முறையில், அவரை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள அவர்களை அழைக்கிறது" என்று விளக்கினார் திருத்தந்தை.
இயேசுவின் உயிர்ப்பை முன்னறிவிக்கும் தோற்றமாற்ற நிகழ்வு
வரவிருக்கும் உயிர்ப்புப் பெருவிழாவுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்தி சிந்தித்த திருத்தந்தை, உருமாற்றம் எவ்வாறு உயிர்த்தெழுதலின் ஒளியையும், கிறிஸ்துவின் இறப்பு மற்றும் உயிர்த்தெழுதலின் மீட்பின் வலிமையையும் முன்னறிவிக்கிறது என்பதைப் பற்றி விவரித்தார்.
மேலும் துன்பத்திலும் கூட கடவுளின் மாட்சிமை எவ்வாறு ஒளிர்கிறது, மனித அனுபவத்தின் வலியையும் துயரத்தையும் இறை மாட்சியின் வெளிப்பாடாக எவ்வாறு மாற்றுகிறது என்பதைப் பற்றியும் விசுவாசிகளுக்கு எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.
தோற்றமாற்றம் இதயங்களைக் கவர்த்திழுக்கட்டும்
மேலும் இந்தத் தவக்காலத்தின் போது, தோற்றமாற்ற நிகழ்வு, அவர்களின் இதயங்களைக் கவர்ந்திழுக்கும்படியும், ஆழமான நம்பிக்கை, மனமாற்றம் மற்றும் இறைவனுடனான ஒன்றிப்புக்கு வழிவகுக்கும்படியும், விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
'இறைவேண்டலின் ஆசிரியர் மற்றும் விடியற்காலத்தின் விண்மீன்' என்று அழைக்கப்படும் அன்னை கன்னி மரியாவிடம், விசுவாசிகளை அவர்களின் நம்பிக்கை மற்றும் தோற்றமாற்றப் பயணத்தில் வழிநடத்துமாறு இறைவேண்டல் செய்யுமாறு விண்ணப்பித்து தனது ஞாயிறு மூவேளை இறைவேண்டல் உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
