தேடுதல்

பிரான்சின் புனித லூர்து அன்னைத் திருத்தலம் பிரான்சின் புனித லூர்து அன்னைத் திருத்தலம்   (Marco Borrelli)

கல்வி, பாதுகாப்பு மற்றும் ஒற்றுமைக்கு திருத்தந்தை அழைப்பு!

பிரான்ஸ் நாட்டு ஆயர் பேரவைக்கு எழுதியுள்ள செய்தியொன்றில், ஆயர்களுக்கிடையே வலிமையான ஒன்றிப்பு நிலவ வேண்டும் என்ற தனது விருப்பத்தை எடுத்துக்காட்டியுள்ளதுடன், அந்நாட்டுத் தலத்திருஅவைக்கான இறைத் திருவுளத்தை அவர்கள் தெளிந்து தேர்ந்திட வேண்டும் என்பதையும் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

எதிர்காலத்தை வடிவமைப்பதிலும் நற்செய்தி அறிவிப்பிலும் கத்தோலிக்கக் கல்வியின் முக்கியப் பங்கை வலியுறுத்தியுள்ளதுடன், அதிகரித்து வரும் சமூக சவால்களுக்கு மத்தியில், கத்தோலிக்கக் கற்பித்தலின் கிறிஸ்தவ அடையாளத்தைப் பாதுகாக்குமாறு ஆயர்களை கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

திருத்தந்தை அவர்களால் கையொப்பமிடப்பட்டு, திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்களால் பிரான்ஸ் ஆயர் பேரவையின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ள செய்தியொன்றில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, ஆயர் பணியின் முக்கியத்துவத்துவம் குறித்தும் எடுத்துரைத்துள்ளார்.

ஆயர்களுக்கிடையே வலிமையான ஒன்றிப்பு நிலவ வேண்டும் என்ற தனது விருப்பத்தை எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை, பிரான்ஸ் தலத்திருஅவைக்கான இறைத் திருவுளத்தை அவர்கள் தெளிந்து தேர்ந்திட வேண்டும் என்பதையும் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

கல்வி குறித்த கலந்துரையாடல்களுக்குத் தனது ஆதரவை வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, இதற்கு வலுசேர்க்கும் விதமாக, 'நம்பிக்கையின் புதிய வரைபடங்களை வரைதல்' (Drawing New Maps of Hope) என்ற தனது திருத்தூது மடலை மேற்கோள் காட்டியுள்ளார்

சிறார்களுக்கு எதிரான பாலியல் பிரச்சினைகள் குறித்துப் பேசிய திருத்தந்தை லியோ, இத்தகைய செயல்களைத் தடுப்பதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதிலும், தவறு செய்த அருள்பணியாளர்களுக்கு இரக்கம் காட்டுவதிலும் திருஅவை கொண்டுள்ள உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இத்தகைய சவால்களை எதிர்கொள்ளும்போது மேய்ப்புப் பணி அக்கறை மற்றும் காயங்களை ஆற்றுதல் ஆகியவற்றின் அவசியத்தையும் தனது செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

வழிபாட்டுமுறை விவகாரங்கள், குறிப்பாக 'வெத்துஸ் ஓர்தோ' (Vetus Ordo - பாரம்பரிய இலத்தீன் திருப்பலி) சமூகங்களின் தாக்கம் குறித்தும் எடுத்துரைத்துள்ள திருத்தந்தை, இந்த விவகாரத்தால் ஏற்பட்டுள்ள பிளவுகள் குறித்துத் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார் திருத்தந்தை.

மேலும் நிறைவான ஒன்றிப்புக்கு அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை, இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் சீர்திருத்தங்களுக்கு உண்மையுள்ளவர்களாக இருக்குமாறும் அவர்களை வலியுறுத்தியுள்ளார்.

இறுதியாக,  விண்ணேற்பு அன்னை மற்றும் பிரான்சின் புனிதர்கள் அனைவரின் பரிந்துரை இறைவேண்டலில் ஆயர்களை ஒப்படைத்த திருத்தந்தை, அவர்கள் தமது விசுவாசத்திலும் நற்செய்தி அறிவிப்புப் பணிகளிலும் தளராத மன உறுதியுடனும் துணிவுடனும் திகழ வேண்டும் என்று கேட்டுக்கொண்டு தனது உரையை நிறைவு செய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 மார்ச் 2026, 14:32