திருத்தந்தை லியோ திருத்தந்தை லியோ   (AFP or licensors)

நம்பிக்கை மற்றும் ஒப்புரவைத் தொடர்ந்து பரப்புரை செய்யுங்கள்!

அமைதியை நிலைநாட்ட உழைக்கும் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், அறிஞர்கள் மற்றும் தலைவர்களை சிகாகோவிலுள்ள இலயோலா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்று வரும் பெற்று வரும் இந்த நிகழ்வு ஒருங்கிணைத்துள்ளது என்பது இதன் சிறப்பம்சமாக அமைந்துள்ளது.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

"அமைதி என்பது வெறுமனே மோதல்கள் இல்லாத நிலை மட்டுமல்ல, அது இறைவனிடமிருந்து வரும் ஒரு கொடை" என்றும், "நம்பிக்கை மற்றும் ஒப்புரவைத் தொடர்ந்து பரப்புரை செய்ய வேண்டும்" என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

சிகாகோவிலுள்ள இலயோலா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்று வரும் அமைதி மற்றும் ஒப்புரவிற்கான அனைத்துலகச் சந்திப்பின் நிகழ்வொன்றிற்கு மார்ச் 07, சனிக்கிழமையன்று அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு மொழிந்தார் திருத்தந்தை.

"தனிப்பட்ட வாழ்வு, சமூகம் மற்றும் உலகளாவியத் தளம் என வாழ்வின் அனைத்து நிலைகளிலும் ஒப்புரவு நிலவ வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்த்தியுள்ள திருத்தந்தை, "அமைதியை நோக்கிய முயற்சிகளில் உலகச் சமூகம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என்றும் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.

ஒன்றிப்பை வளர்ப்பதற்கும், காயங்களை ஆற்றுவதற்கும் இறைவேண்டலின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, "பல்வேறு மதத்தினர் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் இறைவேண்டல் வரலாற்றின் போக்கையே மாற்றியமைக்கும் வலிமை கொண்டது" என்றும் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக, இந்த நிகழ்வில் பங்கேற்றவர்களுக்குத் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கிய திருத்தந்தை, இணக்கமான ஓர் உலகத்தை உருவாக்குவதற்காக அவர்கள் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளில் அவர்களுக்கு வலிமையும் அமைதியும் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்தி தனது செய்தியை நிறைவு செய்தார் திருத்தந்தை.

அமைதியை நிலைநாட்ட உழைக்கும் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், அறிஞர்கள் மற்றும் தலைவர்களை சிகாகோவில் இடம்பெற்று வரும் பெற்று வரும் இந்த நிகழ்வு ஒருங்கிணைத்துள்ளது என்பது இதன் சிறப்பம்சமாக அமைந்துள்ளது.

இந்த நிகழ்வு, கடந்த 2022-ஆம் ஆண்டு முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடங்கிய 'உறவுப் பாலங்களை உருவாக்கும் முயற்சி' (Building Bridges Initiative) என்ற முன்னெடுப்பின் அடிப்படையில் அமைந்ததாகும். இன்றைய பிளவுபட்ட உலகில், கலந்துரையாடல் மற்றும் புரிந்துணர்வின் அவசியத்தை இந்நிகழ்வு மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 மார்ச் 2026, 12:16