மாலைநேரத் தூதஞ்சலின் 150-வது பிறந்தநாளுக்கு திருத்தந்தையின் செய்தி
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இத்தாலியின் வரலாற்றில் மாலைநேரத் தூதஞ்சல் பத்திரிகையின் (Corriere della Sera) குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரித்து, அதன் 150-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவிக்கும் விதமாக செய்தியொன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
இப்பத்திரிகையின் இயக்குனர் லூச்சியானோ ஃபோண்டானா அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இத்தாலிய கலாச்சாரம், கருத்துக்கள் மற்றும் சமூகத்தை வடிவமைப்பதில் இச்செய்தித்தாள் ஆற்றியுள்ள முக்கிய பங்களிப்பையும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.
150 ஆண்டுகளுக்கும் மேலாக, இச்செய்தித்தாள் இத்தாலியின் வரலாற்றில் இரண்டு உலகப் போர்கள், பாசிசத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி, முடியாட்சியிலிருந்து குடியரசாக மாற்றம் மற்றும் பெர்லின் சுவரின் வீழ்ச்சி போன்ற முக்கிய உலகளாவியத் தருணங்கள் உள்ளிட்ட முக்கியமான நிகழ்வுகளை உள்ளடக்கியுள்ளதையும் எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை.
இந்த முக்கியத் தருணங்களை இச்செய்தித்தாள் எவ்வாறு ஆவணப்படுத்தியுள்ளது, இத்தாலியின் வளர்ந்து வரும் சமூக மற்றும் அரசியல் நிலப்பரப்பின் கண்ணாடியாக மாறியுள்ளது என்பதைக் குறித்தும் தனது எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார் திருத்தந்தை.
எதிர்காலத்தைப் பார்த்து, இன்றையத் தொழில்நுட்பப் புரட்சியால், குறிப்பாக, செயற்கை நுண்ணறிவின் எழுச்சியால் ஏற்படும் சவால்களை அங்கீரித்துள்ள திருத்தந்தை, பத்திரிகை அதிகாரத்தைப் பேணுதல், செய்தி வெளியிடுவதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்தல் மற்றும் பத்திரிகையாளர்கள் மற்றும் வாசகர்கள் இருவரின் மாண்பையும் நிலைநிறுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் மனித தொடர்புகளைப் பாதுகாப்பதிலும், சிந்தனைமிக்க கதைகளை வழங்குவதிலும், மரபுவழி இதழியலியலின் ஈடுசெய்ய முடியாத பங்களிப்புக் குறித்தும் விவரப்படுத்தியுள்ளார் திருத்தந்தை.
இச்செய்தித்தாளின் தொடர்ச்சியான வெற்றிக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டுள்ள திருத்தந்தை, மாலைநேரத் தூதஞ்சல் என்ற இந்தச் செய்தித்தாள் அதன் வளமான பாரம்பரியத்தை வரவிருக்கும் சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் சமநிலைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இறுதியாக, 'இப்பத்திரிகையின் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்' என்று மொழிந்துள்ள திருத்தந்தை, இத்தாலியுடன் இச்செய்தித்தாள் பகிர்ந்து கொள்ளும் ஆழமான பிணைப்பையும் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அதன் பொறுப்பையும் மீண்டும் உறுதிப்படுத்தி தனது வாழ்த்துச் செய்தியை நிறைவு செய்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
