தேடுதல்

திருப்பொழிவு செய்யும் திருத்தந்தை திருப்பொழிவு செய்யும் திருத்தந்தை   (ANSA)

இறைவனின் அருள்கொடையை உள்ளகத்தில் கண்டறியுங்கள்!

நான்காவது உயிர்ப்பு ஞாயிற்றுக்கிழமையன்று வழங்கப்படும் 63-வது உலக இறையழைத்தல் நாளுக்கான திருத்தந்தையின் இந்தச் செய்தி, நல்லாயராம் இயேசு, தமது அழைப்பை நாடும் அனைவருக்கும் வழங்கும் அழகு மற்றும் நம்பிக்கையின் பாதையைப் பற்றி எடுத்துரைக்கிறது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"இறையழைத்தல் என்பது ஒருமுறை கிடைக்கும் வரம் அல்ல, மாறாக அது வாழ்நாள் முழுவதும் விரியும் ஒரு பாதை. அது வளர்ந்து கனி தரவேண்டும் எனில், இறைவனுடனான உறவின் மூலம் நாள்தோறும் அது பேணி வளர்க்கப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ

வருகிற ஏப்ரல் மாதம் 26-ஆம் ஆம் தேதி சிறப்பிக்கப்படவிருக்கும் 63-வது உலக இறையழைத்தல் நாளுக்கென, மார்ச் 24, செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்டுள்ள செய்தியொன்றில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, "இறைவனின் கொடையை உள்ளகத்தில் கண்டறிதல்" (The Interior Discovery of God’s Gift) என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நான்கு துணைத் தலைப்புகளில் தனது சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அழகின் வழி

விசுவாசிகள், குறிப்பாக இளைஞர்கள், கடவுளின் இலவசமான மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தும் (உருமாற்றும்) கடவுளின் அருள்கொடையைக் கண்டறிவதற்கான ஒரு வழியாக “இறையழைத்தலின் அகப் பரிமாணத்தை” தழுவிக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

"வாழ்க்கையின் உண்மையான அழகு என்பது நம் கண்களால் மட்டும் காணப்படுவதில்லை, மாறாக அகச்சிந்தனை மற்றும் நமது உள் எண்ணங்களுக்குக் கவனம் செலுத்துவதன் மூலமும் அனுபவிக்கப்படுகிறது" என்று வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.

மேலும் "இயேசுவைப் பின்பற்றுவது ஆன்மிக மாற்றத்திற்கு வழிவகுக்கிறது" என்றும், "அது தனிநபர்களைத் தங்கள் விசுவாசத்தில் வெறும் 'நல்லவர்களாக' மட்டுமல்லாமல், புனிதர்களைப் போலவே 'அழகானவர்களாகவும்' ஆக்குகிறது" என்றும் விளக்கியுள்ளார் திருத்தந்தை.

ஒருவருக்கொருவர்மீதான விழிப்புணர்வு

"'உங்களைச் சுற்றியுள்ள உலகில் பதில்களைத் தேடாதீர்கள், ஏனெனில் உண்மை உங்களுக்குள்ளேயே இருக்கிறது' என்று புனித அகுஸ்தினார் நமக்கு நினைவூட்டுவது போல, நம் இதயத்தின் ஆழத்தில் உள்ள இறைவனின் குரலுக்கு நாம் செவிசாய்க்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை, "இந்த மௌனத்திலும், இந்தத் திறந்த மனதிலும்தான், அர்த்தமும், மகிழ்ச்சியும், நோக்கமும் நிறைந்த ஓர் வாழ்விற்கான அழைப்பை நாம் காண்கிறோம்—அது இறைவனின் அன்பையும் வழிகாட்டுதலையும் வெளிப்படுத்தும் ஓர் வாழ்வாகும்" என்று மொழிந்துள்ளார்.

புனித அகுஸ்தினாரின் முன்மாதிரியைப் பின்பற்றி, இறைவேண்டல், மௌனம் மற்றும் தியானம் ஆகியவற்றின் மூலம் மக்கள் தங்கள் அக வாழ்வை வலுப்படுத்திக்கொள்ளுமாறு ஊக்குவித்துள்ள திருத்தந்தை, "திருமணம், குருத்துவம் அல்லது துறவற வாழ்க்கை என எதுவாக இருப்பினும், அதில் தங்களின் உண்மையான அழைப்பைக் கண்டறிய இது அவர்களுக்கு உதவும்" என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நம்பகத்தன்மை

குடும்பங்கள், பங்குத்தளங்கள் மற்றும் துறவறக் குழுமங்களுக்குள் இறையழைத்தல்கள் தழைத்தோங்குவதை ஊக்குவிக்கும் ஒரு சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை, "இறைநம்பிக்கை, இறைவேண்டல் மற்றும் ஆதரவு நிறைந்த இத்தகையச் சூழல், இறைவனின் அழைப்புக்குச் செவிமடுக்கவும், அதை வளர்க்கவும், ஏற்றுக்கொள்ளவும் வழிவகுக்கிறது" என்று எடுத்துரைத்துள்ளார்.

மேலும், "கடவுளுக்கும் அவருடைய மக்களுக்கும் இடையேயான ஆழமான பிணைப்பை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்" என்றும், "கடவுள் நம் ஒவ்வொருவரையும் ஆழமாக அறிந்திருப்பதால், அவருடைய எல்லையற்ற இரக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், அன்பு, நம்பகத்தன்மை மற்றும் தாராள மனப்பான்மை நிறைந்த இதயங்களுடன் நாம் அவருக்குப் பதிலளிக்க வேண்டும்" என்றும் அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை.

முதிர்ச்சி

நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியிலும் இறைவனின் திட்டங்களில் நம்பிக்கை வைத்த புனித யோசேப்பின் வாழ்வுடன் ஒப்புமைப்படுத்தி, "இறைவனின் தெய்வீகத் திட்டத்தின் மீதான நம்பிக்கை, ஒருவரின் இறையழைத்தல் சார்ந்த நிறைவுக்கு இன்றியமையாதது" என்று நினைவூட்டியுள்ளார் திருத்தந்தை

இறுதியாக, "அன்றாட இறைவேண்டல், இறைவார்த்தைமீதான தியானம் மற்றும் திருநற்கருணை ஆராதனை ஆகியவற்றின் வழியாக இளைஞர்கள் கடவுளுடனான தங்கள் உறவை ஆழப்படுத்திக்கொள்ள வேண்டும்" என்று ஊக்குவித்துள்ள திருத்தந்தை, "இவ்வாறு, அவர்கள் தங்கள் இறையழைத்தலின் அழகைக் கண்டறிவதோடு, கடவுளின் அன்பையும் மீட்பையும் பரப்பும் திருஅவையின் பணிக்கும் பங்களிப்பார்கள்" என்று எடுத்துக்காட்டி இறையழைத்தல் நாளுக்கான தனது செய்தியை நிறைவு செய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 மார்ச் 2026, 14:29