‘அன்பின் மகிழ்ச்சி’ திருத்தூது அறிவுரை மடலின் 10-வது ஆண்டு நிறைவு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
"வேகமாக மாறிக்கொண்டு வரும் நமது காலத்தில், திருஅவை நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளவும் அதன்படி வாழவும் உதவும் பொறுப்பை ஆண்டவர் ஒப்படைத்துள்ள குடும்பங்களுக்கு ஆதரவளிப்பது மிகவும் முக்கியமானது" என்று கூறியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய "அன்பின் மகிழ்ச்சி" (Amoris Laetitia) என்ற திருத்தூது அறிவுரை மடலின் 10-வது ஆண்டு நிறைவு விழாவுக்காக வழங்கியுள்ள செய்தியொன்றில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, "இம்மடல் இன்றும் நாம் தொடர்ந்து ஆராய வேண்டிய மதிப்புமிக்க படிப்பினைகளை வழங்குகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
தனது செய்தியில், கத்தோலிக்கத் திருஅவைக்குள் குடும்ப வாழ்க்கை, மேய்ப்புப்பணி பொறுப்பு மற்றும் ஒன்றிணைந்த பயண உரையாடல் ஆகியவற்றில் புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்புக்கான அழைப்பொன்றையும் விடுத்துள்ளார் திருத்தந்தை.
மார்ச் 19, வியாழக்கிழமை, திருஅவையில் சிறப்பிக்கப்படும் புனித வளனாரின் பெருவிழா நாளில் வழங்கியுள்ள இந்தச் செய்தியில், "முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் வெளியிடப்பட்ட இத்திருத்தூது அறிவுரை மடல், கடந்த பத்தாண்டுகளாகத் திருமணம் மற்றும் குடும்பச் சவால்கள் குறித்துத் திருஅவைச் சிந்திப்பதற்கு வழிகாட்டியுள்ள 'நம்பிக்கையின் ஒளிமயமான செய்தி'" என்று புகழாரம் சூட்டியுள்ளார் திருத்தந்தை.
இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் படிப்பினையை எடுத்துக்காட்டும் வகையில், குடும்பத்தை “சமூகத்தின் அடித்தளம்” மற்றும் “இல்லறத் திருஅவை” என மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள திருத்தந்தை, உலகெங்கிலும் உள்ள குடும்பங்களைப் பாதிக்கும் கலாச்சார மற்றும் சமூக மாற்றங்களுக்கு ஏற்ப, ஆன்மிக மேய்ப்புப் பணியில் தொடர்ச்சியான தகவமைப்பு தேவை என்பதையும் எடுத்துரைத்துள்ளார்.
இரக்கத்தின் முக்கியத்துவம், மனித பலவீனத்தை அங்கீகரித்தல், மற்றும் கடுமையான நெறிமுறைகளைத் திணிப்பதற்குப் பதிலாக, குடும்பங்களின் சிரமமான காலங்களில் திருஅவை அவைகளுக்குத் துணையாக இருக்க வேண்டியதன் அவசியம் உள்ளிட்ட, இத்திருத்தூது அறிவுரை மடலின் முக்கியக் கருப்பொருள்களை எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை.
இளைஞர்களுக்கான சிறந்த ஆதரவு, வலுவான குடும்பக் கல்வி மற்றும் திருமணத்தை ஓர் கவர்ந்திழுக்கும் இறையழைத்தலாக முன்வைப்பதற்கான புதுப்பிக்கப்பட்ட முயற்சிகள் குறித்தும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.
மேலும் வறுமை மற்றும் வன்முறை போன்ற நவீன சவால்களை ஏற்றுக்கொண்டு, சிரமப்படும் குடும்பங்களுக்கு அதிக ஆதரவு அளிக்குமாறு அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை, இன்னல்களுக்கு மத்தியிலும் அன்றாடச் செயல்கள் மூலம் குடும்ப அன்பை வெளிப்படுத்துபவர்களையும் பாராட்டியுள்ளார்.
எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, இன்றையச் சூழலில் திருஅவை எவ்வாறு குடும்பங்களுக்கு நற்செய்தியை அறிவிக்க முடியும் என்பதை மேலும் ஆராய்வதற்காக, இவ்வாண்டு அக்டோபர் மாதத்தில் ஆயர் பேரவைகளின் தலைவர்களுக்கான உலகளாவிய மாநாடு ஒன்றை அறிவித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.
இறுதியாக, இந்தத் திருப்பணியை திருஅவையின் பாதுகாவலர் புனித யோசேப்பிடம் ஒப்படைத்து இறைவேண்டல் செய்வதாகக் கூறியுள்ள திருத்தந்தை, திருஅவை குடும்ப வாழ்வை வலுப்படுத்துவதைத் தனது பணியின் மையமாகக் கொண்டு செயல்பட இத்திருத்தூது அறிவுரைமடல் கோடிட்டுக் காட்டுவதாகக் கூறி தனது செய்தியை நிறைவு செய்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
