பொய்யான செய்திகளை முறியடித்து சந்திப்பின் கலாச்சாரத்தை வளர்த்திடுங்கள்!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
வேகமாக மாறிவரும் இவ்வுலகில் அமைதி மற்றும் புரிந்துணர்வை வளர்ப்பதில் ஊடகங்களின் முக்கியப் பங்கை வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
மார்ச் 22, ஞாயிறன்று. Mediaset நிறுவனத்தால் இயக்கப்படும் இத்தாலியத் தொலைக்காட்சி நிறுவனமான Tgcom24-இன் 25-வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, அத்தொலைக்காட்சியின் இயக்குனர் மற்றும் ஆசிரியர் குழுவினருக்கு அனுப்பியுள்ள செய்தியொன்றில் இவ்வாறு வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, உண்மை, மரியாதை மற்றும் உரையாடல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஊடகச் சூழலை உருவாக்குமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தற்போதைய தகவல் தொடர்பு நிலையைப்பற்றிப் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இணையத்தில் பெரும்பாலும் "சத்தமாக கத்தப்படும் சொற்களே" ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளதுடன் இன்றையச் சமுதாயத்தில் ஊடகங்களுக்கு இருக்கும் முக்கியமான பணியைக் குறித்தும் எடுத்துரைத்துள்ளார்.
மேலும் செய்திகளின் மேலோட்டமான தன்மையைக் கடந்து சென்று, குறிப்பாகச் சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் பிரச்சினைகளைக் கையாளும் போது, அதிக இரக்கத்துடனும் ஒருமைப்பாட்டு உணர்வுடனும் கூடிய அணுகுமுறையை ஊடகங்கள் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை, இதன் மூலம் உரையாடலுக்கான வழிகளை ஏற்படுத்தும் தனித்துவமான ஆற்றல் ஊடகங்களுக்கு உண்டு என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எல்லாவற்றிற்கும் மேலாக, மனித மாண்பைப் போற்றும் வகையிலான, சுதந்திரமான மற்றும் மரியாதைக்குரிய தகவல் பரிமாற்றத்திற்கு அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை, இதனை, இவ்வுலகை ஆயுதமற்ற மற்றும் விடாமுயற்சியுடன் கூடிய அமைதியை நோக்கி வழிநடத்தும் ஒரு வலிமையான கருவி என்று வர்ணித்துள்ளார்.
திருத்தந்தையின் இந்தச் செய்தி, உண்மையை முதன்மைப்படுத்துவதிலும் நெறிமுறை சார்ந்த நேர்மையைக் கடைப்பிடிப்பதிலும் ஊடக நிறுவனங்களுக்கு இருக்கும் பெரும் பொறுப்பை வலியுறுத்துவதாகவும் அமைந்துள்ளது.
ஊடக உலகம் மாற்றங்களைக் கண்டு வரும் இக்காலத்தில், நெறிமுறை சார்ந்த இதழியல் குறித்த திருத்தந்தையின் இந்த வேண்டுகோள் மிகவும் அவசியமானதாகும். புரிந்துணர்வை உருவாக்குதல், ஒன்றிப்பை நிலைநாட்டுதல் மற்றும் ஓர் அமைதியான உலகச் சமுதாயத்தை நோக்கிய பயணத்தில் ஊடகங்களின் பங்களிப்பை திருத்தந்தையின் இந்தச் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் போலியான செய்திகளின் பரவலை முறியடிப்பதும், ஒருவரையொருவர் நேரில் சந்தித்து உரையாடும் பண்பை மேம்படுத்துவதும், பிளவுபட்டுக் கிடக்கும் சமூகத்தை ஒன்று சேர்ப்பதற்குத் தேவையான முக்கிய நடவடிக்கைகளாக திருத்தந்தையின் இந்தச் செய்தி எடுத்துக்காட்டியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
