மொனாகோவிற்கான திருத்தூதுப் பயணத்தின் இலச்சினை மற்றும் விருதுவாக்கு மொனாகோவிற்கான திருத்தூதுப் பயணத்தின் இலச்சினை மற்றும் விருதுவாக்கு  

மொனாக்கோவிற்கான திருத்தந்தையின் திருத்தூதுப் பயணத் திட்டம்!

யோவான் நற்செய்தியில் வரும், “வழியும் உண்மையும் வாழ்வும் நானே" (காண்க. யோவா 14:6) என்ற இறைவார்த்தைகளை மொனாகோவிற்கான திருத்தூதுப் பயணத்தின் விருதுவாக்காகக் கொண்டு தனதுப் பயணத்தை மேற்கொள்கிறார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மார்ச் 28, சனிக்கிழமையன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், மொனாக்கோ நாட்டிற்கு அமைதிக்கான ஒரு நாள் திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்கிறார் என்றும், இது அவரது முதல் ஐரோப்பிய பயணம் மற்றும் 2026-ஆம் ஆண்டின் முதல் அனைத்துலகத் திருத்தூதுப் பயணத்தைக் குறிக்கும் விதமாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.

ஒன்பது மணி நேரங்களைக் கொண்ட திருத்தந்தையின் இந்தப் பயணத்தில், மொனாக்கோவின் இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட் மற்றும் கத்தோலிக்கச் சமூக உறுப்பினர்களுடனான சந்திப்புகள், இளைஞர்கள் மற்றும் கிறிஸ்தவப் புகுநிலையினர் உடனான சந்திப்புகள் ஆகியவை அடங்கும்.

மொனாக்கோவின் ஃபாண்ட்வியலில் (Fontvieille) அமைந்துள்ள புகழ்பெற்ற இரண்டாம் லூயிஸ் கால்பந்து மைதானத்தில் தலைமையேற்று நிகழ்த்தும் திருப்பலியுடன் திருத்தந்தையின் அந்நாட்டிற்கானத் திருத்தூதுப் பயணம் நிறைவடையும்.

மார்ச் 28, சனிக்கிழமையன்று காலை 9:00 மணிக்கு மொனாக்கோ உலங்கு வானூர்தித் தளத்திற்கு (helicopter) உலங்கு வானூர்தி (Helicopter) மூலம் வந்தடையும்  திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், கத்தோலிக்க மதம் அரசு மதமாக உள்ள மொனாக்கோ நகரத்திற்கு வருகை தரும் முதல் திருத்தந்தையாகத் திகழ்கிறார்.

அதனைத் தொடர்ந்து மொனாக்கோவின் இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட் மற்றும் அவரது குடும்பத்தினருடன் இளவரசர் அரண்மனையில் ஒரு விழா மற்றும் மரியாதைக்குரிய வருகையுடன் திருத்தந்தையின் திருத்தூதுப் பயண நிகழ்வுகள் தொடங்குகின்றன.

பின்னர் காலையில், திருத்தந்தை லியோ அவர்கள் கோர்சிகா மற்றும் மொனாக்கோவின் பாதுகாவலர் புனித டிவோட்டா கோவிலிற்கு வெளியே இளைஞர்கள் மற்றும் கிறிஸ்தவப் புகுநிலையினருக்கு உரையாற்றுவதற்கு முன்பு, அமலோற்பவ அன்னைப் பேராலயத்தில் உள்ளூர் கத்தோலிக்கரைச் சந்திப்பார்.

சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, திருத்தந்தை லியோ அவர்கள், இரண்டாம் லூயிஸ் கால்பந்து மைதானத்தில் திருப்பலிக்குத் தலைமை தாங்குவார், பின்னர் மாலை 5:45 மணிக்குத் தனது திருத்தூதுப் பயணத்தை முடித்துக்கொண்டு உரோமை நகருக்குத் திரும்புவார்.

திருத்தந்தையின் இந்தத் திருத்தூதுப் பயணம், திருப்பீடத்திற்கும் மொனாக்கோவின் ஆளும் கிரிமால்டி குடும்பத்திற்கும் இடையிலான நீண்டகால உறவை எடுத்துக்காட்டும் அதேவேளையில், மனித உயிருக்கு மரியாதை, சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் சமூக உரையாடல் போன்ற பகிரப்பட்ட முன்னுரிமைகளை ஊக்குவிக்கிறது என்று திருஅவையின் உயர் அதிகாரிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

யோவான் நற்செய்தியில் வரும், “வழியும் உண்மையும் வாழ்வும் நானே" (காண்க. யோவா 14:6) என்ற இறைவார்த்தைகளை இந்தத் திருத்தூதுப் பயணத்திற்கான விருதுவாக்காகக் கொண்டு மொனாகோவிற்குப் பயணம் மேற்கொள்கிறார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 மார்ச் 2026, 10:10