தேடுதல்

 ITA விமானச் சேவை நிறுவன நிர்வாகிகள் மற்றும் பணியாளர்களுடன் திருத்தந்தை ITA விமானச் சேவை நிறுவன நிர்வாகிகள் மற்றும் பணியாளர்களுடன் திருத்தந்தை   (ANSA)

விமானங்கள் அமைதியின் பாலங்களாகத் திகழ வேண்டும்!

திருத்தந்தை புனித ஆறாம் பவுல் காலத்திலிருந்தே திருத்தந்தையர்களின் பயணங்களுக்கு இந்த விமான சேவை நிறுவனம் ஆதரவாக இருந்து வருவதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, திருத்தந்தை பயணிக்கும் விமானங்களில் அமைதியான மற்றும் மதிப்புமிக்க சூழலை உருவாக்குவதில் விமான ஊழியர்களின் முக்கியப் பங்கை எடுத்துக்காட்டினார் திருத்தந்தை பதினான்காம் லியோ

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

"தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அழிவிற்காக அல்லாமல், அமைதியை வளர்ப்பதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

மார்ச் 23, திங்களன்று, ஐரோப்பாவின் மிகப்பெரிய விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான லுஃப்தான்சா குழுமம் மற்றும் ITA விமானச் சேவை நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் பணியாளர்களைத் திருப்பீடத்தில் சந்தித்துபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.

தனது உரையை இறைவேண்டலுடன் தொடங்கிய திருத்தந்தை, உலகம் முழுவதற்கும் குறிப்பாக திருப்பீடத்திற்கு இந்த விமான சேவை நிறுவனம் ஆற்றி வரும் அர்ப்பணிப்புடன் கூடிய சேவைக்காக  தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

மேலும் முன்பு அலிடாலியா என்று அறியப்பட்டு தற்போது ITA  விமான சேவை நிறுவனமாக பெயர் மாற்றப்பட்டுள்ள இத்தாலியின் தேசிய விமான நிறுவனத்திற்கும் திருப்பீடத்திற்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்பினையும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

திருத்தந்தை புனித ஆறாம் பவுல் காலத்திலிருந்தே திருத்தந்தையர்களின் பயணங்களுக்கு இந்த விமான சேவை நிறுவனம் ஆதரவாக இருந்து வருவதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, திருத்தந்தை பயணிக்கும் விமானங்களில் அமைதியான மற்றும் மதிப்புமிக்க சூழலை உருவாக்குவதில் விமான ஊழியர்களின் முக்கியப் பங்கை எடுத்துக்காட்டினார்.

மேலும், திருத்தந்தையின் திருத்தூதுப்பயணங்கள் அமைதியின் அடையாளங்களாக விளங்குகின்றன என்பதை சுட்டிக்காட்டிய திருத்தந்தை, விமானங்கள் எப்போதும் "அமைதியை சுமந்து செல்பவையாக இருக்க வேண்டுமே தவிர, ஒருபோதும் போருக்கானதாக இருக்கக்கூடாது" என்றும் "போரில் விமானங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படுவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது" என்றும் கவலை தெரிவித்தார்.

இறுதியாக ITA விமான சேவை நிறுவனம் மற்றும் திருப்பீடத்திற்கு இடையிலான இந்த நட்புறவு தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, சவாலான காலங்களில் தேவைப்படும் கனிவு மற்றும் நற்பண்புகளின் வெளிப்பாடாக இந்த உறவு தொடர்ந்து நீடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்து தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 மார்ச் 2026, 12:49