குழந்தைகளின் களங்கமின்மையைப் பாதுகாக்க அழைப்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
எதிர்காலம் எனப் பொருள்படும் 'அவென்னிரே' அமைப்பின் இயக்குநரான மார்கோ ஜிரார்தோவிற்கும், தனது 30-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் 'Popotus' என்ற சிறுவர் வார இதழின் வாசகர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
மார்ச் 22, ஞாயிறன்று எழுதியுள்ள இந்தக் கடிதத்தில், குழந்தைப் பருவத்தின் தூய்மை மற்றும் மகிழ்ச்சியுடன் மீண்டும் இணையுமாறு வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, நவீனப் போர்களால் ஏற்படும் கொந்தளிப்புகளுக்கும், எண்ணிமத் தொழில்நுட்பத்தால் ஏற்படும் ஆபத்துகளுக்குப் பதிலளிக்கும் விதமாக இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு குழந்தைகளை எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பது குறித்துத் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ள திருத்தந்தை, குழந்தைகள் செயற்கை நுண்ணறிவு உரையாடல் மென்பொருட்களை 'உற்ற நண்பர்களாக' அல்லது ஞானத்தின் ஆதாரங்களாக அதிகமாகச் சார்ந்திருப்பதற்கு எதிராக எச்சரித்துள்ளதுடன், பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவர்களின் களங்கமின்மையைப் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
உலகத்தைப் பற்றிய ஒரு குழந்தைத்தனமான கண்ணோட்டத்தைப் பேணுவதிலும், உண்மையான உறவுகளையும் அறிவுசார் ஆர்வத்தையும் வளர்ப்பதிலுமே மனிதநேயத்தின் சாராம்சம் அடங்கியுள்ளது என்பதையும் எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை.
"ஒரு குழந்தையின் பார்வையை எதார்த்தத்தின் மீது வைத்திருப்பதன் மூலம், நாம் மனிதர்களாக நிலைத்திருக்க முடியும்," என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, "குழந்தைகள் தங்களின் உள்ளார்ந்த நன்மையை இழக்காமல், உலகின் அழகையும் அதிசயத்தையும் காண வழிகாட்டப்பட வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் இதற்கு வலுசேர்க்கும் விதமாக, “நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" (காண்க. மத் 18:3) என்ற இயேசுவின் வார்த்தைகளையும் நினைவூட்டியுள்ளார் திருத்தந்தை.
சிறந்த, இரக்கமிகு உலகிற்குப் பங்களிக்கக்கூடிய, பிறர் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் மற்றும் சிந்தனைமிக்க தனிநபர்களாக வளரக் கற்பிப்பதன் மூலம், குழந்தைகளைத் தொடர்ந்து அன்புடன் வளர்க்குமாறு பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் ஊக்குவித்து தனது செய்தியை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
