பிறரன்புப் பணிகள் வழியாக நற்செய்தியை வாழ்ந்து காட்டுங்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
"சில வேளைகளில், மற்றவர்களையும் அவர்களின் பிரச்சனைகளையும் கவனிக்கத் தவறும் போது நாமும் பார்வையற்றவர்களாக மாறுகிறோம்" என்றும் "தொடக்க கால கிறிஸ்தவர்கள் ஒன்றாக இறைவேண்டல் செய்து, எல்லாவற்றையும் மகிழ்ச்சியாகவும் எளிமையாகவும் பகிர்ந்து கொண்டது போல, இயேசு நம்மை வித்தியாசமாக வாழ அழைப்பு விடுக்கிறார்" என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
மார்ச் 15, ஞாயிற்றுக்கிழமையன்று, உரோமையின் பளிங்குக் கல் பாலத்திலுள்ள இயேசுவின் திருஇருதயப் பங்குத் தளத்தில் நிகழ்த்திய திருப்பலியின் மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, "இன்றைய நாள் நற்கருணைக் கொண்டாட்டம் மகிழ்ச்சியை மையமாகக் கொண்டுள்ளது" என்று தெரிவித்தார்.
"கிறிஸ்தவர்கள் அமைதி மற்றும் ஒருமைப்பாட்டிற்கான தங்கள் உறுதிப்பாட்டை புதுப்பிக்க வேண்டும்" என்று வலியுறுத்திய திருத்தந்தை, கடவுளின் பெயரால் வன்முறையை நியாயப்படுத்துவதற்கு எதிராக எச்சரித்ததுடன், துயருறும் மக்களை அலட்சியப்படுத்த வேண்டாம் என்று விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டார்.
இன்றைய நற்செய்தியில் வரும், 'பிறவியிலேயே பார்வையற்ற ஒருவர் பார்வைபெறுதல்' (யோவான் 9) நிகழ்வு குறித்து தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, ஆன்மிகக் குருட்டுத்தன்மையிலிருந்து கடவுளின் அன்பால் வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய பார்வைக்கு மனிதகுலம் பயணிக்கும் ஓர் அடையாளமாக இந்த அருளடையாளத்தை விவரித்தார்.
தவக்காலத்தின் இந்த நான்காவது ஞாயிற்றுக்கிழமையை மகிழ்ச்சியின் ஞாயிறாக எடுத்துக்காட்டிய திருத்தந்தை, உலகெங்கிலும் உள்ள மோதல்களால் ஏற்படும் துயரங்களை சுட்டிக்காட்டியதுடன், போரால் பிரச்னைகளைத் தீர்க்க முடியாது என்பதை வலியுறுத்தினார்.
கடவுளை 'இருளால் அடக்க முடியாது' என்று குறிப்பிட்ட திருத்தந்தை, இறைநம்பிக்கை உரையாடல், விசுவாசம் மற்றும் அமைதியை ஊக்குவிக்க வேண்டும் என்பதை அப்பங்குத் தளத்தின் விசுவாசிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.
"கடவுளின் கண்களால் பார்ப்பது" என்பது தப்பெண்ணத்தை வென்று, தேவையில் இருப்போரின் மாண்பை அங்கீகரிப்பதாகும்" என்று எடுத்துரைத்த திருத்தந்தை, "மக்கள் கடவுளைப் புறக்கணித்து, கடுமையான விதிகளில் அதிகமாக கவனம் செலுத்தும்போது, அவர்கள் இரக்கம் காட்டுவதைத் தடுக்கக்கூடிய மிக மோசமான குருட்டுத்தன்மை ஏற்படும்" என்று எச்சரித்தார்."
அப்பங்குத் தளத்தின் ஏறக்குறைய 90 ஆண்டுகால பிறரன்புப் பணிகளைப் பாராட்டிய திருத்தந்தை, இதில் புலம்பெயர்ந்தோர், ஏழைகள், துயருறும் குடும்பங்கள் மற்றும் அருகிலுள்ள ரெபிபியா சிறைச்சாலையுடன் தொடர்புடைய மக்கள் ஆகியோருக்கான சேவைகளும் அடங்கும் என்பதையும் குறிப்பிட்டார்.
காரித்தாஸ் நிறுவனத்தின் பணிகள், வலுக்குறைந்த பெண்களுக்கான குடும்ப வீடுகள் மற்றும் இளைஞர் கல்வித் திட்டங்கள் போன்ற முயற்சிகள் குறித்தும் அப்பங்குத் தளத்தின் விசுவாசிகளிடம் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.
இறுதியாக, புனித அகுஸ்தினாரை மேற்கோள் காட்டி, விசுவாசிகள் உறுதியான பிறரன்புச் செயல்கள் வழியாக, இறைநம்பிக்கையை வெளிப்படுத்துமாறு ஊக்குவித்த திருத்தந்தை, இப்பங்குதள மக்கள் அனைவரும் இறைவேண்டல், அருளடையாளங்கள் மற்றும் பிறரன்புப் பணிகள் வழியாக நற்செய்தியை வாழ்ந்துகாட்டுமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
