தேடுதல்

கிறிஸ்துவின் ஒளியை உயிர்த்துடிப்புள்ளதாக வைத்திருப்போம்!

திருத்தந்தை தனது மறையுரையில், விசுவாசிகள் இயேசுவுக்குச் செவிசாய்த்து, அவருடைய ஒளியை உலகிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், "நாம் அவருக்குச் செவிசாய்த்து, அவருடைய ஒளியில் நுழைந்து, உலகத்திற்கு ஒளியாக மாறுவோம்" என்றும் குவார்த்திஜோலோ பங்குத் தள விசுவாசிகளை ஊக்குவித்தார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"மனிதகுலத்திற்கும் வாழ்க்கைக்கும் தீங்கு விளைவிக்கும் அனைத்துச் சவால்கள் மத்தியிலும் மாற்றத்தையும் வாழ்க்கையையும் கொண்டுவரும் நற்செய்தியை நாம் தொடர்ந்து பகிர்ந்து கொள்வோம்" என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

மார்ச் 01, ஞாயிறன்று, உரோமையின் குவார்த்திஜோலோ பங்குத் தளத்திலுள்ள இயேசுவின் விண்ணேற்றக் கோவிலில் தலைமையேற்று நிகழ்த்திய மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, இயேசுவின் தோற்றமாற்ற நிகழ்வின் அடிப்படையில் விசுவாசத்தின் பயணத்தையும் கடவுளின் அன்பின் மாற்றும் வலிமையையும் குறித்து தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

"வாழ்க்கை என்பது கடவுளுடைய வார்த்தையில் நம்பிக்கை தேவைப்படும் ஒரு பயணம்" என்று கூறிய திருத்தந்தை, "ஆபிரகாம் ஒரு புதிய வாக்குறுதியைத் தேடி தனது நாட்டை விட்டு வெளியேறியபோது செய்தது போல, விசுவாசிகள் தங்கள் வலுக்குறைவின்மையை ஏற்றுக்கொண்டு கடவுளின் வாக்குறுதிகளை நம்பியிருக்க வேண்டும்" என்று ஊக்குவித்தார்.

மேலும் "நாம் கடவுளின் அழைப்புக்கு முழுமனதுடன் பதில் அளிக்கும்போது, நம்மிடமிருந்து யாரும் பறித்துக்கொள்ள முடியாத ஒரு செல்வத்தில் வளர்வோம்" என்று மொழிந்தார் திருத்தந்தை.

இயேசுவின் தோற்றமாற்றம் பற்றிப் பேசிய திருத்தந்தை, "மலையில் இயேசுவின் ஒளிமயமான தோற்றம், அனைத்துத் திருச்சட்டங்களின் நிறைவேற்றமே அவரது பணி என்பதை நமக்கு உறுதியளிக்கிறது" என்று அப்பங்குத் தளத்தின் விசுவாசிகளுக்கு நினைவூட்டினார்.

விசுவாசிகள் இயேசுவுக்குச் செவிசாய்த்து, அவருடைய ஒளியை உலகிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை, "நாம் அவருக்குச் செவிசாய்த்து, அவருடைய ஒளியில் நுழைந்து, உலகத்திற்கு ஒளியாக மாறுவோம்" என்று அவர்களை ஊக்குவித்தார்.

உள்ளூர் சமூகத்தின் சவால்களை எதிர்கொள்வதில் இப்பங்குத் தளத்தின் தீவிரமான பங்களிப்பைப் பாராட்டிய திருத்தந்தை,  "சமூகத்தைக் கட்டியெழுப்புவோம்" என்ற விருதுவாக்கின் கீழ், இப்பங்குத் தளம்  அனைவரையும் சொந்தம் கொண்டாடுவதையும் வரவேற்பதையும் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது" என்று குறிப்பிட்டார்.

மேலும் இளைஞர்கள் வலிமை, நம்பகத்தன்மை மற்றும் நம்பிக்கையுடன் வாழ ஊக்குவிக்கும் இளைஞர் திட்டமான "மாஜிஸ்" (Magis) அமைப்பின் பணியைப் பாராட்டி மகிழ்ந்தார் திருத்தந்தை.

இப்பங்குத்தளச் சமூகத்தை "நம்பிக்கையின் அடையாளம்" என்று அழைத்த திருத்தந்தை, "நற்செய்தியைப் பரப்புவதைத் தொடரவும், விசுவாசம் மற்றும் சமூகத்திற்குப் பணியாற்றுவதன் வழியாக வாழ்க்கையை உருமாற்றவும் அவர்களை வலியுறுத்தினார்.

இறுதியாக, "மனிதகுலத்தையும் வாழ்க்கையையும் சிதைக்கும் அனைத்துச் சவால்களையும் எதிர்கொண்டு, நாம் தொடர்ந்து நற்செய்தி அறிவிப்பின் சான்றுகளாக இருப்போம்" என்றும், "அதுவே மாற்றத்தையும் வாழ்க்கையையும் தருகிறது," என்றும் கூறி தனது மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 மார்ச் 2026, 09:54