ஐரோப்பாவில் நலவாழ்வு சமத்துவம் மற்றும் ஒன்றிப்புக்கு அழைப்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
“இன்று எனக்கு அடுத்திருப்போர் யார்?” என்ற தலைப்பில் ஐரோப்பாவில் இடம்பெறும் மாநாடு ஒன்றின் பங்கேற்பாளர்களுக்கு வழங்கிய உரை ஒன்றில், அனைவருக்கும் நலவாழ்வுப் பாதுகாப்பு அளிப்பதன் தார்மீகக் அவசியத்தையும், ஐரோப்பா முழுவதும் உள்ள வலுக்குறைந்த மக்களுக்கு ஆதரவளிக்க வேண்டிய அவசரத் தேவையையும் வலியுறுத்தினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
மார்ச் 18, புதன்கிழமையன்று வத்திகானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுலரங்கில் இந்த மாநாட்டின் பங்கேற்பாளர்களைச் சந்தித்தபோது இவ்வாறு வலியுறுத்திய திருத்தந்தை, ஐரோப்பாவில் நலவாழ்வு சமத்துவம் மற்றும் ஒன்றிப்பு நிலவிடவும் அழைப்பு விடுத்தார்.
ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் மன்றம், இத்தாலிய ஆயர் பேரவை மற்றும் உலக நலவாழ்வு அமைப்பு (ஐரோப்பிய மண்டிலம்) ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, இரண்டாவது உலக நலவாழ்வு அமைப்பின் ஐரோப்பிய நலவாழ்வு சமத்துவ நிலை அறிக்கையின் சமர்ப்பிப்புடன் ஒருங்கே நடைபெற்றது.
நல்வாழ்வுப் பராமரிப்பை அணுகுவதில் அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வுகளையும், இளைஞர்கள் எதிர்கொள்ளும் கடுமையான மனநலச் சவால்களையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, உடல்நலம் என்பது ஒரு மனித உரிமை, அது ஆடம்பரப் பொருளல்ல என்று வலியுறுத்தியதோடு, அலட்சியத்திற்கும் தனிமைப்படுத்தலுக்கும் எதிராகச் சமூகங்கள் செயல்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
நல்ல சமாரியரின் உவமையை மேற்கோள் காட்டி, மற்றவர்கள் மீதும், குறிப்பாக, ஒடுக்கப்பட்ட மற்றும் துயருறும் மக்கள் மீதும் தங்களுக்குள்ள பொறுப்பை உணர்ந்துகொள்ளுமாறு பங்கேற்பாளர்களைக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
இறுதியாக, உடன்பிறந்த உறவு, ஒருமைப்பாடு மற்றும் நீதியை மேம்படுத்துவதில் திருஅவையின் பங்கை மீண்டும் உறுதிப்படுத்திய திருத்தந்தை, பொது நன்மைக்கான சேவையில் நல்ல சமாரியரின் மனப்பான்மையைக் கடைப்பிடிக்குமாறு கிறிஸ்தவர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
