தேடுதல்

திருத்தந்தையின் புதன் பொது மறைக்கல்வி உரை

'படிநிலை' (Hierarchical) என்ற அடைமொழியின் மூலம், நல்லாயராகிய இயேசுவின் செயலில் திருத்தூதுப் பணிக்கு இருக்கும் 'புனிதத் தொடக்கத்தையும்', அதனுள் இருக்கும் உறவுகளையும் சுட்டிக்காட்ட பொதுச்சங்கம் விரும்புகிறது.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

மார்ச் 25 , புதன்கிழமை, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் சரியாக காலை 10 மணிக்கு தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் தொடங்கினார் திருத்தந்தை பதினான்காம் லியோ. கோட்பாட்டு அமைப்புவிதித் தொகுப்பு  'மக்களினங்களின் ஒளி' என்ற திருஅவைப் பற்றி இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்க ஆவணத்தில், இரண்டாம் அதிகாரத்தில் உள்ள "இறைமக்கள்" என்ற தலைப்பில் திருஅவையை "இறை மக்கள்" என்று விவரித்த பிறகு, அதன் படிநிலை அமைப்பு குறித்து தனது சிந்தனைகளை திருப்பயணிகளுடன் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை.

முதலில் திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து இறைவார்த்தைகள் ஆங்கிலம், இத்தாலி மற்றும் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசிக்கப்பட்டன. இப்போது வாசகத்திற்கு செவிமடுப்போம். “இனி நீங்கள் அந்நியர் அல்ல; வேற்று நாட்டினரும் அல்ல. இறைமக்கள் சமுதாயத்தின் உடன் குடிமக்கள்; கடவுளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். திருத்தூதர்கள், இறைவாக்கினர்கள் ஆகியோர்களை அடித்தளமாகவும், கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள்” (எபே 2:19-20)

இறைவார்த்தை வாசிப்பிற்குப் பிறகு திருத்தந்தை தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் தொடங்கினார்.

அன்புள்ள சகோதர் சகோதரிகளே, காலை வணக்கம். உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றேன்!

கத்தோலிக்கத் திருஅவை  திருத்தூதர்களைத் தனது அடித்தளமாகக் கொண்டுள்ளது. கிறிஸ்து அவர்கள் அனைவரையும் தனது மறையுடலின் (Mystical Body) உயிருள்ள தூண்களாக நியமித்தார். இது (திருஅவை) ஒரு படிநிலைத் தன்மையைக் கொண்டுள்ளது. இத்தன்மை அதன் உறுப்பினர்கள் அனைவரது ஒன்றிப்பிற்கும் அதன் திருத்தூதுப்பணிக்கும் மற்றும் அவர்கள் புனிதமடைவதற்கும் பணி செய்கிறது. இந்த புனிதமான படிநிலையானது, இயேசுவின் உயிர்ப்புக்கு அதிகாரப்பூர்வ சாட்சிகளாகவும் (காண்க. திபா 1:22; 1 கொரி 15:7), ஆண்டவராலேயே உலகெங்கும் திருத்தூதுப்பணிக்கு அனுப்பப்பட்டவர்களாகவும் (காண்க மாற் 16:15; மத் 28:19) விளங்கும் திருத்தூதர்களின் மீது நிலையாகக் கட்டப்பட்டுள்ளது (காண்க. எபே 2:20; திவெளி 21:14).

திருத்தூதர்கள் இயேசுவின் மீட்பளிக்கும் போதனைகளை நம்பிக்கையோடு பாதுகாக்க அழைக்கப்பட்டிருப்பதால் (2 திமோ 1:13-14), அவர்கள் தங்கள் திருப்பணியை மற்ற மனிதர்களிடம் ஒப்படைக்கிறார்கள். கிறிஸ்து மீண்டும் வரும்வரை, இப்பணியைப் பெற்றுக்கொண்டவர்கள் 'மேய்ப்புப் பணியின் தலைமுறைகளாக' திருஅவையைப் புனிதப்படுத்தவும், வழிநடத்தவும், போதிக்கவும் செய்கிறார்கள் (கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வித் தொகுப்பு, எண். 857).

நற்செய்தியிலும் திருஅவையின் பாரம்பரியத்திலும் வேரூன்றியுள்ள இந்தத் திருத்தூது வழி மரபு, மக்களினங்களின் ஒளி என்ற ஆவணத்தின் மூன்றாம் அதிகாரத்தில் மேலும் விரிவாக ஆராயப்படுகிறது. அந்த அதிகாரம் 'திருஅவையின் படிநிலை அமைப்புவிதித் தொகுப்பு, குறிப்பாக, ஆயர் பணி' (The hierarchical constitution of the Church and particularly the episcopate) என்று தலைப்பிடப்பட்டுள்ளது. திருஅவையின் படிநிலை அமைப்பு என்பது, ஒரு சமூக அமைப்பாக அதன் உள் நிர்வாகத்திற்காக உருவாக்கப்பட்ட வெறும் மனிதக் கற்பனை அல்ல (LG, 8); மாறாக, கிறிஸ்து திருத்தூதர்களிடம் ஒப்படைத்த திருத்தூதுப் பணியை உலகம் முடியும் வரை நிலைத்திருக்கச் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட ஓர் 'இறை நிறுவனம்' என்று பொதுச்சங்கம் அறிவுறுத்துகிறது.

திருஅவையின் சாராம்சத்தை விளக்கும் முதல் இரண்டு அதிகாரங்களுக்குப் பிறகு, இந்தத் தலைப்பு மூன்றாம் அதிகாரத்தில் இடம்பெறுவதால், படிநிலை அமைப்பு என்பது 'இறை மக்கள்'  என்ற கருத்தாக்கத்தை விட இரண்டாம் பட்சமானது என்று கருதிவிடக் கூடாது (காண்க. Acta Synodalia III/1, 209-210). 'மக்களினங்களுக்கு என்ற '(Ad Gentes) ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளபடி "திருத்தூதர்கள் ஒரே நேரத்தில் புதிய இஸ்ரயேலின் வித்தாகவும், புனிதமான படிநிலை அமைப்பின் தொடக்கமாகவும் இருந்தனர்" (காண்க எண். 5). அவர்கள் கிறிஸ்துவின் பாஸ்கா மறைபொருளால் மீட்கப்பட்ட ஒரு சமூகமாகவும், உலகிற்கு மீட்பின் கருவியாக நிறுவப்பட்டவர்களாகவும் திகழ்கிறார்கள்.

பொதுச் சங்கம் எதை உணர்த்த விரும்புகிறது என்பதைப் புரிந்துகொள்ள, ‘மக்களினங்களின் ஒளி’ என்ற ஆவணத்தின் மூன்றாம் அதிகாரத்தின் தலைப்பைக் கவனமாக வாசிப்பது அவசியமாகும். இது திருஅவையின் அடிப்படை அமைப்பைத் தெளிவுபடுத்துகிறது. இந்த அமைப்பு தந்தை இறைவனிடமிருந்து மகன் வழியாகப் பெறப்பட்டு, தூய ஆவியாரின் வருகையால் நிறைவு பெற்றது. நவீன காலத்தில் 'அமைப்புவிதித் தொகுப்பு' என்ற சொல் குறிப்பது போல, திருஅவையின் நிறுவன கூறுகளை மட்டும் முன்வைப்பது திருச்சங்கத் தந்தையர்களின் நோக்கமல்ல. மாறாக, இந்த ஆவணம் 'திருப்பணியாளர் அல்லது படிநிலை குருத்துவம்' (Ministerial or hierarchical priesthood) குறித்தே கவனம் செலுத்துகிறது. இது நம்பிக்கையாளர்களின் பொதுவான குருத்துவத்திலிருந்து வெறும் அளவில் மட்டுமல்ல, தன்மையிலேயே வேறுபடுகிறது. இருப்பினும், இவை "இரண்டும் ஒன்றையொன்று சார்ந்துள்ளன. ஏனெனில் இவை ஒவ்வொன்றும் தமக்கே உரிய முறையில் 'கிறிஸ்துவின் ஒரே குருத்துவத்தில்' பங்குபெறுகின்றன" (LG, 10).

எனவே, திருஅவையில் பணியாற்றுவதற்காக 'புனித அதிகாரம்' (Potestas) அருளப்பட்ட மனிதர்களிடம் ஒப்படைக்கப்பட்ட திருப்பணியைப் பற்றிப் பொதுச்சங்கம் பேசுகிறது (LG, 18). இது குறிப்பாக ஆயர் நிலை (LG, 18-27), அடுத்ததாக குருத்துவ நிலை (LG, 28) மற்றும் திருத்தொண்டர் நிலை (LG, 29) ஆகியவற்றை ஒரே 'திருநிலைப்பாட்டு அருள்சாதனத்தின்' நிலைகளாக விளக்குவதில் கவனம் செலுத்துகிறது.

'படிநிலை' (Hierarchical) என்ற அடைமொழியின் மூலம், நல்லாயராகிய இயேசுவின் செயலில் திருத்தூதுப் பணிக்கு இருக்கும் 'புனிதத் தொடக்கத்தையும்', அதனுள் இருக்கும் உறவுகளையும் சுட்டிக்காட்ட பொதுச்சங்கம் விரும்புகிறது. முதலாவதாக ஆயர்களும், அவர்கள் வழியாகக் அருள்பணியாளர்களும்  திருத்தொண்டர்களும் சில பணிகளை (Munera) ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். 'இறை மக்கள் அனைவருக்கும்' பணிபுரிய இப்பணிகள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், இறைமக்கள் அனைவரும் 'சுதந்திரமாகவும் நேர்த்தியாகவும் ஒரே இலக்கை நோக்கிப் பயணம் செய்து, மீட்பை அடைய முடியும்' (LG, 18).

இந்தத் திருத்தூதுப் பணியின் 'கூட்டுப்பொறுப்பு' (Collegial) மற்றும் 'சமூகத் தன்மையை' (Communitarian) ‘மக்களினங்களின் ஒளி’ என்ற ஆவணம் மீண்டும் மீண்டும் திறம்பட நமக்கு நினைவூட்டுகிறது. ஆண்டவர் தமது மக்களின் மேய்ப்பர்களிடம் ஒப்படைத்துள்ள இந்தப் பணி ஒரு உண்மையான பணியாகும்; இது திரு விவிலியத்தில் மிக முக்கியமாக 'டயகோனியா' (Diakonia), அதாவது 'திருப்பணி' (Ministry) என்று அழைக்கப்படுகிறது' (LG, 24) என்பதை இந்த ஆவணம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

எனவே, திருத்தந்தை புனித ஆறாம் பவுல் ஏன் படிநிலை அமைப்பை இவ்வாறு விவரித்தார் என்பது இப்போது தெளிவாகிறது. "கிறிஸ்து தமது திருஅவைக்கு விட்டுச் சென்ற நம்பிக்கைக் கருவூலம், முன்மாதிரிகள், கட்டளைகள் மற்றும் அருள்கொடைகள் ஆகியவற்றைச் சிதையாமல், கனிதரும் வகையில் பரப்புவதையும் உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, கிறிஸ்துவின் அன்பிலிருந்து பிறந்த ஓர் உண்மை நிலையே இந்தப் படிநிலை அமைப்பு' (Alloc. 14 Sept. 1964).

அன்புச் சகோதர சகோதரிகளே, நமது ஆண்டவர் தமது திருஅவைக்கு நற்செய்திப் பணியில் ஆர்வமிக்கவர்களையும், திருமுழுக்குப் பெற்ற அனைவரின் நலனுக்காகத் தங்களை அர்ப்பணிப்பவர்களையும், உலகின் எல்லாப் பகுதிகளுக்கும் துணிச்சலோடு செல்லும் மறைப்பணியாளர்களையும் (Missionaries) திருப்பணியாளர்களாக அனுப்பி வைக்க வேண்டுமென்று அவரிடம் உருக்கமாக மன்றாடுவோம்.

இவ்வாறு தனது மறைக்கல்வி உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை இறுதியாக இயேசு கற்பித்த இறைவேண்டல் செபத்திற்குப் பிறகு அனைத்துத் திருப்பயணிகளுக்கும் தனது திருத்தூது ஆசீரை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 மார்ச் 2026, 14:25