தேடுதல்

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை

இறைமக்களின் ஓர் அங்கமாக இருக்கும் கொடையைப் பெற்றதற்காக, அதைப் பற்றிய விழிப்புணர்வையும் நன்றியுணர்வையும் நமக்குள் தட்டி எழுப்புவோம். அதே வேளையில், இந்தத் தகுதி நமக்கு அளித்துள்ள பொறுப்புணர்வையும் நாம் உணர்வோம்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

மார்ச் 18, புதன்கிழமை, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் சரியாக காலை 10 மணிக்கு தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் தொடங்கினார் திருத்தந்தை பதினான்காம் லியோ. கோட்பாட்டு அமைப்புவிதித் தொகுப்பு 'மக்களினங்களின் ஒளி' என்ற திருஅவைப் பற்றி இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்க ஆவணத்தில், இரண்டாம் அதிகாரத்தில் உள்ள "இறைமக்கள்" என்ற தலைப்பில் தனது சிந்தனைகளை திருப்பயணிகளுடன் இவ்வாரமும் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை. முதலில் புனித பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து இறைவார்த்தைகள் ஆங்கிலம், இத்தாலி மற்றும் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசிக்கப்பட்டன. இப்போது வாசகத்திற்கு செவிமடுப்போம்.

“நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர்; அவரது உரிமைச் சொத்தான மக்கள். எனவே, உங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளவரின் மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பது உங்கள் பணி. முன்பு நீங்கள் ஒரு மக்களினமாய் இருக்கவில்லை; இப்பொழுது கடவுளுடைய மக்களாக இருக்கிறீர்கள். முன்பு இரக்கம் பெறாதவர்களாய் இருந்தீர்கள்; இப்பொழுதோ இரக்கம் பெற்றுள்ளீர்கள்.” (1 பேதுரு 2: 9 -10 )

இறைவார்த்தை வாசிப்பிற்குப் பிறகு திருத்தந்தை தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் தொடங்கினார்.

அன்புள்ள சகோதர் சகோதரிகளே, காலை வணக்கம். உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றேன்!

மெசியாவின் மக்கள் குலம் (LG, 9), கிறிஸ்துவின் குருத்துவ, இறைவாக்கின மற்றும் அரசப் பணிகளில் தங்களை இணைத்துக் கொள்வதன் மூலம், அவருடைய மீட்புப் பணி நிறைவேற்றப்படுவதற்கு கிறிஸ்துவிடமிருந்து அருளைப் பெறுகின்றனர். புதிய மற்றும் நிலையான உடன்படிக்கையின் வழியாக, ஆண்டவர் இயேசு குருக்களின் அரசு ஒன்றை நிறுவினார் என்றும், தம் சீடர்களை ஒரு 'அரச குருகுலமாக' (காண்க 1 பேதுரு 2:9; 1 பேதுரு 2:5; திருவெளிப்பாடு 1:6) உருவாக்கினார் என்றும் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்க தந்தையர்கள்  கற்பிக்கின்றனர். நம்பிக்கையாளர்களின் இந்தப் பொதுக் குருத்துவம் திருமுழுக்கின் வழியாக வழங்கப்படுகிறது. இது நாம் ஆவியோடும் உண்மையோடும் கடவுளை வழிபடவும், 'திருஅவையின் வாயிலாகக் கடவுளிடமிருந்து பெற்ற நம்பிக்கையை வெளிப்படையாக அறிக்கையிடவும்' (LG, 11) நமக்கு ஆற்றலை அளிக்கிறது.

மேலும் உறுதிப்பூசுதல் அருளடையாளத்தின் வழியாக, திருமுழுக்குப் பெற்ற அனைவரும் 'திருஅவையோடு இன்னும் நிறைவாகப் பிணைக்கப்படுகிறார்கள்; தூய ஆவியாரின் சிறப்பான ஆற்றலால் ஊக்கமடைகிறார்கள்; இவ்வாறாக, கிறிஸ்துவின் உண்மையான சாட்சிகளாகச் சொல்லாலும் செயலாலும் நம்பிக்கையைப் பரப்பவும் பாதுகாக்கவும் அவர்கள் இன்னும் அதிகமாக கடமைப்பட்டிருக்கிறார்கள்' (மேற்படி நூல்). திருப்பணியாளர்களையும் (Ordained Ministers) மற்றும் பொதுநிலையினரையும் ஒன்றிணைக்கின்ற அந்தப் பொதுவானப் பணியின் வேராக இந்த அருள்பொழிவு அமைகின்றது.

இது குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். "இறைமக்களை நோக்குவது என்பது, நாம் அனைவரும் பொதுநிலையினராகவே திருஅவைக்குள் நுழைகிறோம் என்பதை நினைவுகூர்வதாகும். நமது அடையாளத்தை நிலையாக முத்திரையிடும் முதல் அருளடையாளம் திருமுழுக்கு ஆகும். இதைக் குறித்து நாம் எப்போதும் பெருமை கொள்ள வேண்டும். ஏனெனில், தம் மறுபிறப்பாலும் தூய ஆவியின் அருள்பொழிதலாலும் திருமுழுக்குப் பெற்றவர்கள். அருள் இல்லமாகவும் தூய திருப்பணி நிலையினராகவும் திருநிலைப்படுத்தப் பெற்றுள்ளனர். (LG, 10). இவ்வாறாக, நாம் அனைவரும் இறைவனின் 'தூய நம்பிக்கை மக்கள்' என்ற இனமாக மாறுகிறோம்." (இலத்தீன் அமெரிக்காவிற்கான திருத்தந்தை ஆணையத்தின் தலைவருக்கு எழுதிய கடிதம், 29 மார்ச் 2016).

இந்த அரசக் குருத்துவத்தின் செயல்பாடானது பல வழிகளில் நிகழ்கிறது; இவை அனைத்தும் நம்முடைய புனிதமடைதலை நோக்கமாகக் கொண்டவை. எல்லாவற்றிற்கும் மேலாக, திருப்பலி ஒப்புக்கொடுத்தலில் பங்கேற்பதன் வழியாக இது நிறைவேறுகிறது. செபம், ஒறுத்தல் மற்றும் தீவிரமான பிறன்புப் பணிகள் ஆகியவற்றின் வழியாக, கடவுளின் அருளால் புதுப்பிக்கப்பட்ட வாழ்விற்கு நாம் சான்று பகிர்கின்றோம் (LG, 10). இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் இதனைச் சுருக்கமாகக் கூறும்போது, 'குருத்துவச் சமூகத்தின் புனிதத் தன்மையும், அதன் முறையான அமைப்பும், அருளடையாளங்கள் மற்றும் நற்பண்புகள் வழியாகவே உயிர் பெறுகின்றன' (LG, 11) என்கிறது.

இறைவனின் தூய மக்கள் கிறிஸ்துவின் இறைவாக்குப் பணியிலும் பங்கேற்கிறார்கள் என்று இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்க  தந்தையர்கள்  கற்பிக்கின்றனர் (LG, 12). இச்சூழலில், 'நம்பிக்கை உணர்வு' மற்றும் 'நம்பிக்கையாளர்களின் ஒருமித்த கருத்து' ஆகிய முக்கியமான கருப்பொருள்களை அவர்கள் (பொதுச் சங்கத் தந்தையர்கள்) அறிமுகப்படுத்துகின்றனர். இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் மறைக்கல்வி ஆணையம் இந்த 'நம்பிக்கை  உணர்வு' (Sensus Fidei) என்பது குறித்து இவ்வாறு விளக்கம் அளித்துள்ளது: 'இது ஒட்டுமொத்தத் திருஅவையின் ஓர் உள்ளார்ந்த ஆற்றல் போன்றது; இதன் உதவியால், திருஅவையானது தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளைத் தனது நம்பிக்கையின் மூலம் அடையாளம் காண்கிறது; நம்பிக்கை சார்ந்த காரியங்களில் எது உண்மை, எது பொய் என்று பிரித்தறிகிறது; அதே நேரத்தில், அவ்வுண்மைகளை இன்னும் ஆழமாகப் புரிந்துகொண்டு, அவற்றை வாழ்வின் அனைத்துச் சூழல்களிலும் இன்னும் நிறைவாகச் செயல்படுத்துகிறது' (காண்க Acta Synodalia, III/1, 199). எனவே, நம்பிக்கை உணர்வு என்பது தனிப்பட்ட நம்பிக்கையாளர்களுக்கு உரியது என்றாலும், அது அவர்களுக்குள்ள தனிப்பட்ட உரிமையினால் அல்ல, மாறாக ஒட்டுமொத்த இறைமக்களின் உறுப்பினர்கள் என்ற நிலையிலேயே அவர்களுக்கு சொந்தமாகிறது.

இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்க ஆவணத்தில், இரண்டாம் அதிகாரத்தில் உள்ள "இறைமக்கள்" என்ற தலைப்பு இந்த இரண்டாம் கருப்பொருளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இதனைத் திருஅவை கொண்டுள்ள 'தவறாவரம்' என்னும் தன்மையோடு இணைக்கிறது. திருத்தந்தை கொண்டுள்ள தவறாவரம் என்பது, திருஅவையின் ஒட்டுமொத்தத் தவறாவரத்திற்குப் பணிவிடை செய்யும் ஓர் அங்கமாகும். "தூயவரிடமிருந்து அருள்பொழிவைப் பெற்றுள்ள (காண்க 1 யோவான் 2:20,27) ஒட்டுமொத்த நம்பிக்கையாளர்களும் நம்பிக்கை சார்ந்த காரியங்களில் தவறிழைக்க முடியாது. ஆயர்கள் முதல் கடைக்கோடி நம்பிக்கையாளர்கள் வரை, நம்பிக்கை மற்றும் ஒழுக்க நெறி சார்ந்த காரியங்களில் ஒருமனதான உலகளாவிய உடன்பாட்டைத் தெரிவிக்கும்போது, ஒட்டுமொத்த மக்களின் இந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட நம்பிக்கை உணர்வின் வழியாக இப்பண்பு வெளிப்படுகிறது" (LG, 12).

எனவே, மேய்ப்பர்களையும் உள்ளடக்கிய நம்பிக்கையாளர்களின் ஒரு கூட்டமைப்பாக விளங்கும் திருஅவை, நம்பிக்கை சார்ந்த காரியங்களில் தவறிழைக்க முடியாது. தூய ஆவியாரின் அருட்பொழிவை அடிப்படையாகக் கொண்ட இந்தப் பண்பின் கருவியாகத் திகழ்வது, ஒட்டுமொத்த இறைமக்களின் 'இயற்கைக்கு அப்பாற்பட்ட நம்பிக்கை உணர்வு' (Supernatural sense of faith) ஆகும்; இது நம்பிக்கையாளர்களின் ஒருமித்த கருத்தில் வெளிப்படுகிறது.

திருஅவையின் போதனையால் (Magisterium) பாதுகாக்கப்படும் இந்த ஒன்றிப்பிலிருந்து, திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரும் நற்செய்தி அறிவிப்பின் 'செயல்பாட்டு முகவர்களாக' (Active agents) மாறுகின்றனர். ஆண்டவர் தமது ஒட்டுமொத்தத் திருஅவைக்கும் வழங்கியுள்ள 'இறைவாக்கு கொடைக்கு' ஏற்ப, கிறிஸ்துவுக்கு ஒருங்கமைந்த சாட்சியம் அளிக்க அவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

உயிர்த்தெழுந்த இயேசுவிடமிருந்து நம்மிடம் வரும் தூய ஆவியார், உண்மையாகவே 'ஒவ்வொரு நிலையில் உள்ள நம்பிக்கையாளர்களுக்கும் சிறப்பு அருள்கொடைகளை வழங்குகிறார். இவற்றின் மூலம் அவர்கள் திருஅவையின் புதுப்பித்தலுக்கும், அதன் விரிவான வளர்ச்சிக்கும் பயனுள்ள பல்வேறு பொறுப்புகளையும் பணிகளையும் ஏற்றுக் கொள்ளத் தகுதியுள்ளவர்களாகவும் ஆயத்தமானவர்களாகவும் மாற்றப்படுகிறார்கள் (LG, 12).

இந்த அருங்கொடை ஆற்றலின் ஒரு குறிப்பிட்ட வெளிப்பாடாக, அருளின் செயலாற்றலால் தொடர்ந்து உருவாகிச் செழித்தோங்கும் 'அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு' அமைகிறது. மேலும், திருஅவை அமைப்புகள் (Ecclesial associations), இறைமக்களைக் கட்டியெழுப்புவதற்காக ஆன்மிகக் கனிகளின் பன்முகத்தன்மைக்கும் வளமைக்கும் ஓர் ஒளிமிகுந்த உதாரணமாகத் திகழ்கின்றன.

அன்புச் சகோதரர் சகோதரிகளே! இறைமக்களின் ஓர் அங்கமாக இருக்கும் கொடையைப் பெற்றதற்காக, அதைப் பற்றிய விழிப்புணர்வையும் நன்றியுணர்வையும் நமக்குள் தட்டி எழுப்புவோம். அதே வேளையில், இந்தத் தகுதி நமக்கு அளித்துள்ள பொறுப்புணர்வையும் நாம் உணர்வோம்.

இவ்வாறு தனது மறைக்கல்வி உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை. இறுதியாக இயேசு கற்பித்த இறைவேண்டல் செபத்திற்குப் பிறகு அனைத்துத் திருப்பயணிகளுக்கும் தனது திருத்தூது ஆசீரை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 மார்ச் 2026, 13:15