நற்செய்தி விழுமியங்களையும் ஒருமைப்பாட்டையும் கடைபிடியுங்கள்!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
எளிய நிலையில் உள்ள சமூகங்களுக்கு உதவுவதற்கும், இத்தாலிய சமூகத்தில் கத்தோலிக்கர்களின் தீவிர ஈடுபாட்டை ஊக்குவிப்பதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஆதரவளித்ததற்காக, கத்தோலிக்க நலவாழ்வு நிறுவனம் மற்றும் கத்தோலிக்கக் காப்பீட்டுச் சங்கம் ஆகியவற்றைப் பாராட்டி மகிழ்ந்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
மார்ச் 13, வெள்ளியன்று கத்தோலிக்க நலவாழ்வுச் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு பாராட்டுத் தெரிவித்த திருத்தந்தை, சமூக வாழ்க்கையில் கத்தோலிக்கர்களின் பங்களிப்பை அதிகரிக்குமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டார்.
1891-ஆம் ஆண்டு திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ அவர்கள் வெளியிட்ட "புதிய விஷயங்களைப் பற்றி" (Rerum novarum) அதாவது 'மூலதனம் மற்றும் உழைப்பின் உரிமைகள் மற்றும் கடமைகள்' என்ற திருமடலுக்குப் பிறகு உருவான கத்தோலிக்கச் சமூக இயக்கத்திலிருந்து உத்வேகம் பெறுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த திருத்தந்தை, இந்த இயக்கமே கூட்டுறவு சங்கங்கள், கிராமப்புற வங்கிகள் மற்றும் ஒன்றுக்கொன்று உதவும் சங்கங்கள் உருவாவதற்கு வழிவகுத்தது என்று குறிப்பிட்டார்.
1896-ஆம் ஆண்டு வெரோனாவில் (Verona) அருள்பணியாளர்கள் மற்றும் பொதுநிலையினரால் தொடங்கப்பட்ட கத்தோலிக்க நலவாழ்வுச் சங்கத்தின் சேவையை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, இத்தகைய முயற்சிகள் இரண்டு உலகப் போர்கள் உள்ளிட்ட கடினமான காலங்களை சமூகங்கள் தாங்கி நிற்பதற்கு உதவியதாகக் கூறினார்.
மேலும் இத்தாலியின் 'மூன்றாம் துறை' (Third Sector) மற்றும் இளைஞர்களுக்கான அதன் முயற்சிகளுக்கு கத்தோலிக்க நலவாழ்வு நிறுவனம் அளிக்கும் ஆதரவைப் பாராட்டிய திருத்தந்தை, "இதில் இத்தாலியின் மிலான் நகரில் அமைந்துள்ள திரு இதயக் கத்தோலிக்கப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட புதிய கல்விக் கூடமும் அடங்கும்" என்றும், "இது உரோமையில் அமைந்துள்ள புனித விண்ணேற்பு அன்னைப் பல்கலைக் கழகம் (LUMSA) வரை விரிவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது" என்றும் கூறினார்.
இறுதியாக, கத்தோலிக்கப் பொருளாதார நிபுணர் Giuseppe Toniolo அவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றி, நற்செய்தி விழுமியங்களுடனும் ஒருமைப்பாட்டுடனும் பணிகளைத் தொடருமாறு கத்தோலிக்க நலவாழ்வுச் சங்கத்தை வலியுறுத்திய திருத்தந்தை, தனது அப்போஸ்தலிக்க ஆசீரை அவர்களுக்கு வழங்கி தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
