பிளவுபட்ட உலகில் அன்பின் பாலங்களை அமைப்போம்!
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
உலகளவில் பெருகிவரும் வன்முறை மற்றும் பிரிவினைக்கு ஒரு சமநிலைப்படுத்தும் காரணியாக செயல்படுமாறு அழைப்பு விடுத்துள்ளதுடன், ஒன்றிப்பு, உரையாடல் மற்றும் அமைதியின் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
மார்ச் 21, சனிக்கிழமையன்று, காஸ்தல் கந்தோல்ஃபோவில் இடம்பெற்ற ஃபோகோலரே (Focolare) எனப்படும் அனைத்துலக ஆன்மிக மற்றும் சமூக மறுமலர்ச்சி இயக்கத்தின் பொதுப் பேரவையைத் தொடர்ந்து, அந்த இயக்கத்தின் உறுப்பினர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை,
"மோதல் நிலவும் இக்காலகட்டத்தில், இந்த இயக்கத்திற்குள்ளும் ஒட்டுமொத்த சமூகத்திலும் அமைதியையும் இணக்கமான சூழலையும் வளர்ப்பதற்கு இவ்வியக்கத்திற்குத் தூய ஆவியாரால் அளிக்கப்பட்ட கொடையாகிய ஒன்றிப்பு எனும் கோட்பாடு இன்றியமையாதது" என்று தெரிவித்த திருத்தந்தை, "சமூக உறவுகளையும் இதயங்களையும் சீர்குலைக்கும் பிரிவினை மற்றும் மோதல் எனும் நஞ்சை எதிர்கொள்ள இந்த ஒன்றிப்புணர்வு இன்று நமக்கு மிகவும் தேவைப்படுகிறது" என்றும் குறிப்பிட்டார்.
மேலும் அறச்செயல்கள் மற்றும் ஒருவரை ஒருவர் மதித்து நடக்கும் பண்பே ஒன்றிப்பின் மையம் என்று கூறிய இவ்வியக்கத்தின் நிறுவனர் Chiara Lubich அவர்களின் வார்த்தைகளை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, "ஒவ்வொரு தனிநபரின் சுதந்திரத்தையும் மனச்சான்றையும் மதிக்க வேண்டும்" என்று அவர்களைக் கேட்டுக்கொண்டார்.
"நிறுவனத்திற்குள் வெளிப்படைத்தன்மை மற்றும் குழுவாக இணைந்து இறைவிருப்பத்தை உணர்ந்து செயல்படுதல் ஆகிய இரண்டும் இவ்வமைப்பின் நோக்கத்தைப் பாதுகாப்பதற்கும் புதிய சவால்களுக்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்வதற்கும் இன்றியமையாதவை" என்று சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
கடந்த பல பத்தாண்டுகளாக ஃபோகோலாரே இயக்கத்தின் பணிகளால் உருவான புனிதத்தன்மை மற்றும் நற்செய்தி அறிவிப்புப் பணிகளை அங்கீகரிதுள்ள திருத்தந்தை, தனது பன்முகத்தன்மை கொண்ட ஆன்மிகச் சமூகத்தின் மூலம் உலகளாவிய அமைதி மற்றும் ஒன்றிப்பை வளர்ப்பதில் இவ்வியக்கம் காட்டி வரும் தொடர்ச்சியான அர்ப்பணிப்புக்கும், திருஅவைக்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பிற்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டு தனது உரையை நிறைவு செய்தார்.
1943-இல் இத்தாலியைச் சேர்ந்த Chiara Lubich என்னும் பொதுநிலையினர் ஒருவரால் நிறுவப்பட்ட ஃபோகோலரே (Focolare) எனப்படும் இவ்வியக்கம் தற்போது 140-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒன்றிப்பு, உரையாடல் மற்றும் சமூக மாற்றத்திற்கான விழுமியங்களுடன் பணியாற்றி வருகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
