ஆப்பிரிக்க கிறிஸ்தவக் கூட்டமைப்பின் பொறுப்பாளர்களுடன் திருத்தந்தை ஆப்பிரிக்க கிறிஸ்தவக் கூட்டமைப்பின் பொறுப்பாளர்களுடன் திருத்தந்தை   (ANSA)

தீவிரவாதம் பெருகி வரும் உலகில் மதங்கள் ஒன்றிணைய வேண்டும்!

திருத்தந்தை தனது உரையில், "தவறான முன்தீர்மானங்கள், வெறுப்பு மற்றும் வன்முறைக்கு எதிராகப் போராட வேண்டியது மதக் குழுமங்களின் பொறுப்பு" என்றும், "அதற்குப் பதிலாக, அநீதியைக் கண்டித்து அமைதியைப் பறைசாற்றும் குரல்களாக அவை மாற வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டார்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

“பிரிவினைகளும் தீவிரவாதமும் அதிகரித்து வரும் இவ்வுலகில், அமைதியையும் ஒன்றிப்பையும் மேம்படுத்த மதங்களுக்கு இடையே வலுவான ஒத்துழைப்பு அவசியம்” என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையிலான உறவை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட அனைத்து ஆப்பிரிக்க கிறிஸ்தவக் கூட்டமைப்பின் பொறுப்பாளர்களைத் திருப்பீடத்தில் சந்தித்துப் பேசியபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை வளர்க்க அந்த அமைப்பினர் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பாராட்டினார்.

மேலும் "வெவ்வேறு மத மற்றும் கலாச்சாரப் பின்னணியைக் கொண்ட மக்கள் அமைதியாகவும், ஒத்துழைப்புடனும் வாழ முடியும் என்பதற்கு இவர்களது பணி ஒரு சான்று என்றும் குறிப்பிட்டார் திருத்தந்தை.

மதங்களுக்கு இடையே ஒன்றுக்கொன்றான புரிதலை மேம்படுத்துவதில் 'மதங்களுக்கு இடையிலான உரையாடலுக்கான திருப்பீடத்துறையின்' பங்களிப்பை எடுத்துரைத்த திருத்தந்தை, அமைதி, நீதி மற்றும் உடன்பிறந்த உறவை மேம்படுத்த எடுக்கப்படும் முயற்சிகளுக்குத் தொடர்ந்து ஒத்துழைக்குமாறு அவர்களை ஊக்கப்படுத்தினார்.

"நமது காலத்தில்" என்று பொருள்படும் 'Nostra Aetate' என்ற இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் ஆவணத்தின் படிப்பினைகளைக் குறிப்பிட்ட திருத்தந்தை, பெரும்பாலும் உலகளாவிய உண்மைகளையும் விழுமியங்களையும் பிற மதங்களும் வெளிப்படுத்துகின்றன என்பதைச் சுட்டிக்காட்டி, அவர்களையும் மதித்து நடக்க வேண்டும் என்ற தனது கருத்தினை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

"உண்மையான ஒன்றிப்புக்கு வெளிப்படைத்தன்மை, உரையாடல் மற்றும் பிறரை எதிர்கொள்ள விருப்பம் ஆகியவை இன்றியமையாதவை" என்றும் வலியுறுத்திக் கூறினார் திருத்தந்தை.

"தவறான முன்தீர்மானங்கள், வெறுப்பு மற்றும் வன்முறைக்கு எதிராகப் போராட வேண்டியது மதக் குழுமங்களின் பொறுப்பு" என்றும், "அதற்குப் பதிலாக, அநீதியைக் கண்டித்து அமைதியைப் பறைசாற்றும் குரல்களாக அவை மாற வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

இறுதியாக, அவர்கள் அனைவரையும் அமைதியின் சிற்பிகளாகவும், சமூகத்தில் நம்பிக்கையை உருவாக்குபவர்களாகவும் செயல்படுமாறு கூறி தனது உரையினை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 மார்ச் 2026, 13:19