தேடுதல்

அப்புலியன் மற்றும் கலாப்ரியன் இறையியல் நிறுவனங்களின் குழுமத்தினருன் திருத்தந்தை அப்புலியன் மற்றும் கலாப்ரியன் இறையியல் நிறுவனங்களின் குழுமத்தினருன் திருத்தந்தை   (ANSA)

திருஅவையின் பணியை முன்னோக்கி நகர்த்த இறையியல் உதவுகிறது!

திருத்தந்தை தனது உரையில், இன்றைய உலகில் நற்செய்தியின் அடையாளங்களாகவும் நம்பிக்கையின் பட்டறைகளாகவும் மாறும் கிறிஸ்தவச் சமூகங்களை உருவாக்கி, கல்விச் சமூகங்கள் உற்சாகத்துடனும் படைப்பாற்றலுடனும் விடாமுயற்சியுடன் செயல்பட ஊக்குவித்தார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"அருள்பணித்துவ மாணவர்கள், அர்ப்பண வாழ்விற்கு அழைக்கப்பட்ட இருபால் துறவியர், ஆண் பெண் பொதுநிலையினர் யாவரும் ஒன்றிணைந்து, கிறிஸ்தவச் சமூகங்கள் நற்செய்தியின் அடையாளங்களாகவும் நம்பிக்கையின் பட்டறைகளாகவும் மாற உதவும் ஒரு கல்வி சமூகத்தை கனவு காண உங்களை அழைக்கிறேன்" என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

மார்ச் 02, திங்களன்று, அப்புலியன் மற்றும் கலாப்ரியன் இறையியல் நிறுவனங்களின் குழுமத்தினருக்குத் திருப்பீடத்தில் வழங்கிய உரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, அவர்களின் அர்ப்பணத்திற்காகவும், தாராளமான பணிகளுக்காகவும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

இறையியலாளர்கள் மற்றும் மாணவர்கள் நற்செய்தியை அறிவிக்கும் பணியில் துணிவு, ஒன்றிப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையைத் தழுவிக்கொள்ளுமாறு வலியுறுத்திய திருத்தந்தை, அவர்களின் பணியை பாதுகாப்பான துறைமுகங்களில் தங்குவதற்குப் பதிலாக திறந்த கடலில் பயணிப்பதுடன் ஒப்பிட்டுக் காட்டினார்.

"இறையியல் கல்விப் படிப்புடன் மட்டும் நின்றுவிடாமல், நற்செய்தி அறிவிப்புக்குப் பணியாற்ற வேண்டும்" என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, கத்தோலிக்கர்கள் "திறந்த கடலுக்குப் பயப்பட வேண்டாம்" என்று கூறி ஊக்குவித்த முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளை அவர்களுக்கு எடுத்துக்காட்டினார்.

கடவுளின் மறையுண்மையைப் பற்றிய புரிதலை ஆழப்படுத்துதல் மற்றும் சமகால சமூகத்தில் நற்செய்தியை அறிவிக்க புதிய மொழிகள் மற்றும் அணுகுமுறைகளை ஆராய்தல் என இறையியல் உருவாக்கத்தை இரண்டு திசைகளில் நகரும் ஒரு துடிப்பான பயணம் என்று விவரித்தார் திருத்தந்தை.

"இறையியல் என்பது வல்லுநர்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல, மாறாக திருஅவையின் பணிக்கும், விசுவாசத்தில் வேரூன்றிய கலாச்சார மற்றும் சமூக ஈடுபாட்டை வளர்ப்பதற்கும் அடிப்படையானது" என்று சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

அப்புலியா மற்றும் கலாப்ரியா பகுதிகளில் இறையியல் நிறுவனங்களை ஒன்றிணைத்து மிகவும் நெருக்கமாக ஒத்துழைக்க எடுக்கப்பட்ட அண்மைய முயற்சிகளைப் பாராட்டிய திருத்தந்தை, இந்த நடவடிக்கையை மறைமாவட்டங்களுக்கிடையே ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் மற்றும் கடந்த கால போட்டிகளை முறியடிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு முயற்சி என்று அழைத்தார்.

மேலும் இத்தகைய ஒத்துழைப்பு, திருஅவையின் மேய்ப்புப் பணியை வலுப்படுத்துவதாகவும், எதிர்கால அருள்பணியாளர்கள், அர்ப்பண வாழ்விற்கு அழைக்கப்பட்ட இருபால் துறவியர் மற்றும் பொதுநிலையினத் தலைவர்களைப் பகிரப்பட்ட பொறுப்பால் குறிக்கப்பட்ட ஓர் ஒன்றிணைந்த பயணத்தின் (synodal style) பாணியில் உருவாக்க உதவுவதாகவும்  விளக்கினார் திருத்தந்தை.

வேலையின்மை, குடியேற்றம் மற்றும் அநீதி உள்ளிட்ட தெற்கு இத்தாலி எதிர்கொள்ளும் சமூகச் சவால்களை ஒப்புக்கொண்ட திருத்தந்தை, "இறையியல் கல்வி, ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் அக்கறையின்மையை  எதிர்கொள்ளும் திறன் கொண்ட விமர்சன மற்றும் முன்னுணர்ந்துரைக்கிற (prophetic) சிந்தனையை வளர்க்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

இறுதியாக, இன்றைய உலகில் நற்செய்தியின் அடையாளங்களாகவும் நம்பிக்கையின் பட்டறைகளாகவும் மாறும் கிறிஸ்தவச் சமூகங்களை உருவாக்கி, கல்விச் சமூகங்கள் உற்சாகத்துடனும் படைப்பாற்றலுடனும் விடாமுயற்சியுடன் செயல்பட ஊக்குவித்து தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 மார்ச் 2026, 11:51