தேடுதல்

திருத்தந்தையின் மொனாக்கோவிற்கான திருத்தூதுப் பயணம் திருத்தந்தையின் மொனாக்கோவிற்கான திருத்தூதுப் பயணம்  

திருத்தந்தையின் மொனாக்கோவிற்கான திருத்தூதுப் பயணம் : ஒரு முன்தூது

“வழியும் உண்மையும் வாழ்வும் நானே" (காண்க. யோவா 14:6) என்ற இறைவார்த்தைகளை விருதுவாக்காகக் கொண்டு மொனாக்கோவிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்கிறார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நேயர்களே நமது திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் மார்ச் 28, சனிக்கிழமை நாளை ஒருநாள் திருத்தூதுப் பயணமாக மொனாகோவிற்குச் செல்கிறார். யோவான் நற்செய்தியில் வரும், “வழியும் உண்மையும் வாழ்வும் நானே" (காண்க. யோவா 14:6) என்ற இறைவார்த்தைகளை இந்தத் திருத்தூதுப் பயணத்திற்கான விருதுவாக்காகக் கொண்டு மொனாக்கோவிற்குப் பயணம் மேற்கொள்கிறார். இந்நாளில் அந்நாடு குறித்த அரசியல், மத மற்றும் வரலாற்றுப் பின்னணியை அறிந்துகொள்வோம்.

வரலாறுப் பின்ணனி

பிரான்ஸ் ரிவியேராவில் அமைந்துள்ள சிறிய நகர-நாடான மொனாக்கோ, தொன்மையான காலத்திலிருந்து நீண்ட மற்றும் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. முதலில் ஃபீனீசியர்களால் குடியேற்றம் செய்யப்பட்ட இது, பின்னர் ரோமானியர்களால் கைப்பற்றப்பட்டது; அவர்கள் அந்தப் பகுதியில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தினர். 1297 ஆம் ஆண்டு, இன்றும் மொனாக்கோவை ஆட்சி செய்து வரும் கிரிமால்டி குடும்பம் மொனாக்கோ கோட்டையை கைப்பற்றியது. இது அந்த அரசாட்சியின் சுயாட்சிப் பயணத்தின் தொடக்கமாக அமைந்தது.

19-ஆம் நூற்றாண்டில், மொனாக்கோவின் அரசியல் நிலைமை பிரான்ஸின் தாக்கத்தில் மாறியது, குறிப்பாக மூன்றாம் சார்ல்ஸ் (1856–1889) ஆட்சிக் காலத்தில் நாடு நவீனமயமாக்கப்பட்டு, மொன்தே கார்லோவின் புகழ்பெற்ற பொழுதுப்போக்கு மையம் நிறுவப்பட்டது. 1861 ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தத்தின் மூலம் மொனாக்கோவின் சுயாட்சி அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது, ஆனால் பிரான்ஸுக்கு சில நிலப்பகுதிகளை இழந்ததால் அதன் பரப்பளவு குறைந்தது. 1918-ஆம் ஆண்டில், மொனாக்கோ பிரான்ஸ்-மொனாக்கோ ஒப்பந்தத்தில் சேர்ந்தது. இதனால் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கைகளில் பிரான்ஸுக்கு கட்டுப்பாடு கிடைத்தாலும், உள்நாட்டு ஆட்சியை கிரிமால்டி குடும்பம் தொடர்ந்து வைத்திருந்தது.

புவியியல் அமைப்பு

வத்திக்கான் நகருக்கு அடுத்ததாக உலகின் மிகச்சிறிய நகர-நாடு இதுவாகும். இதன் எல்லையின் வடக்கு, மேற்கு, மற்றும் தெற்குப் பகுதிகளில் பிரான்சு நாடு உள்ளது. இதன் பரப்பளவு 1.98 சதுர கி.மீ. (0.76 சதுர மைல்) ஆகும், மொனாக்கோவின் மக்கள் தொகை ஏறத்தாழ 39,000 மட்டுமே. இதனால் இது உலகின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றாகும். மொனாகோ உலகின் அதிக மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP $215,163) கொண்டுள்ளது. அத்துடன் உலகின் மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக உள்ள நாடும், தனி நபர் வாழ்வுக் காலம் (90 ஆண்டுகள்) அதிகமான நாடும் இதுவே. அண்மையில் ஹேர்க்குலி துறைமுக விரிவாக்கத்தை அடுத்து மொனாக்கோவின் மொத்தப் பரப்பளவு 2.05 சதுர கி.மீ. ஆக அதிகரித்தது. நடுநிலக் கடலில் மேலும் நிலம் மீளக் கோரப்பட்டதை அடுத்து நாட்டின் பரப்பளவை மேலும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டது.

அரசியல் நிலைமை

மொனாக்கோ ஓர் அரசியலமைப்பு அரசாட்சி நாடாகும். இந்நாட்டை கிரிமால்டி குடும்பம் ஆட்சி செய்கிறது; தற்போதைய இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட் ஆவார். அவர் 2005 இல் தனது தந்தையான பிரின்ஸ் ரெய்னியர் IIIக்கு பிறகு ஆட்சியேற்றார்.

1962-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின் அடிப்படையில் நாடு நிர்வகிக்கப்படுகிறது. இது மன்னரின் அதிகாரங்களை வரையறுத்து, தேசிய கவுன்சிலுக்கு (பாராளுமன்றம்) முக்கிய அதிகாரங்களை வழங்குகிறது. இருந்தாலும் வெளிநாட்டு உறவுகள் மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் மன்னருக்கு இன்னும் பெரிய செல்வாக்கு உள்ளது.

மொனாக்கோவில் அரசியல் கட்சிகள் இல்லை. தேசிய கவுன்சில் கொள்கை வடிவமைப்பில் முக்கிய பங்கு வகித்தாலும், பல முடிவுகள் இன்னும் அரச குடும்பத்துடன் ஆலோசித்து எடுக்கப்படுகின்றன. இந்த அரசியல் அமைப்பு நிலைத்தன்மை, வளமை  மற்றும் செல்வந்தர்களுக்கான பாதுகாப்பான இடமாக மொனாக்கோவின் நிலையை பேணுவதில் கவனம் செலுத்துகிறது.

கத்தோலிக்கமும் திருஅவையும்

மொனாக்கோவில் பெரும்பாலான மக்கள் அதாவது 80 விழுக்காட்டிற்கும் மேலாக உரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்கள். இந்த மதம் அந்த நாட்டில் ஆழமாக வேரூன்றியுள்ளது. கிரிமால்டி குடும்பமும் நீண்டகாலமாக கத்தோலிக்க மதத்துடன் தொடர்புடையது. மொனாக்கோ-வில்லில் அமைந்துள்ள “புனித அமலோற்பவ அன்னை பேராலயம்” முக்கியமான மதக் கட்டிடமாகும். இங்கு கிரிமால்டி குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக மூன்றாம் இளவரசர் ரெய்னியர் மற்றும் இளவரசி கிரேஸ் ஆகியோர் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கத்தோலிக்க திருஅவை நாட்டின் கலாச்சாரம் மற்றும் பொதுவாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. திருப்பலி முறையாக நடைபெறுகிறது; கிறிஸ்துமஸ் மற்றும் உயிர்ப்புப் பெருவிழா போன்ற விழாக்கள் மிகுந்த முக்கியத்துவத்துடன் கொண்டாடப்படுகின்றன.

கத்தோலிக்கத் தலத்திருஅவையின் தற்போதைய நிலை

மொனாக்கோவில் மக்கள் தொகை குறைவாக இருப்பதால், அருள்பணியாளர்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. சில மறைமாவட்ட அருள்பணியாளர்கள் மற்றும் துறவியர் உள்ளூர் மக்களுக்குப் பணியாற்றுகின்றனர். மொனாக்கோ மறைமாவட்டம், பிரான்சின் மார்செய் மறைமாவட்ட மறைமாலித்தின் கீழ் உள்ளது; தற்போது அதன் பேராயர் டொமினிக் மரி டேவிட் ஆவார். மறைமாவட்ட அருள்பணியாளர்கள்  19 பேர், துறவற அருள்பணியாளர்கள்  8 பேர் என மொத்த அருள்பணியாளர்கள் 27 பேர் பல்வேறு இறைப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் உள்ளூர் மக்களுக்கும் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்களுக்கும் பணியாற்றி வருகின்றனர். செல்வந்தர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வேலைக்காக வரும் வெளிநாட்டினருக்கும் ஆன்மிக சேவைகளை வழங்குகின்றனர். திருப்பலி நிறைவேற்றுதல், திருச்சடங்குகள் வழங்குதல் மற்றும் ஆன்மிக வழிகாட்டுதல் ஆகியவை இவர்களின் முக்கியப் பணிகள். சிறிய மக்கள் தொகை காரணமாக, அருள்பணியாளர்கள் அரச குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர்.

திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம்

திருத்தந்தையின் மொனாக்கோ வருகை, அந்த நாட்டின் வத்திக்கானுடன் உள்ள ஆழமான கத்தோலிக்க உறவை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக இருக்கும். திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள் மொனாக்கோவிற்குச் செல்லவில்லை. ஆனால் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள், 2008-ஆம் ஆண்டு மொனாக்கோவிற்குச் சென்றார். இது அங்குள்ள கத்தோலிக்க சமூகத்திற்கு மிக முக்கியமான நிகழ்வாக அமைந்தது.

மார்ச் 28, சனிக்கிழமையன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், மொனாக்கோ நாட்டிற்கு அமைதிக்கான ஒரு நாள் திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்கிறார் என்றும், இது அவரது முதல் ஐரோப்பிய பயணம் மற்றும் 2026-ஆம் ஆண்டின் முதல் அனைத்துலகத் திருத்தூதுப் பயணத்தைக் குறிக்கும் விதமாக அமைந்துள்ளது. ஒன்பது மணி நேரங்களைக் கொண்ட திருத்தந்தையின் இந்தப் பயணத்தில், மொனாக்கோவின் இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட் மற்றும் கத்தோலிக்கச் சமூக உறுப்பினர்களுடனான சந்திப்புகள், இளைஞர்கள் மற்றும் கிறிஸ்தவப் புகுநிலையினர் உடனான சந்திப்புகள் ஆகியவை அடங்கும்.

மொனாக்கோவின் ஃபாண்ட்வியலில் (Fontvieille) அமைந்துள்ள புகழ்பெற்ற இரண்டாம் லூயிஸ் கால்பந்து மைதானத்தில் தலைமையேற்று நிகழ்த்தும் திருப்பலியுடன் திருத்தந்தையின் அந்நாட்டிற்கானத் திருத்தூதுப் பயணம் நிறைவடையும்.

மார்ச் 28, சனிக்கிழமையன்று காலை 9:00 மணிக்கு மொனாக்கோ உலங்கு வானூர்தித் தளத்திற்கு (helicopter) உலங்கு வானூர்தி (Helicopter) மூலம் வந்தடையும்  திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், கத்தோலிக்க மதம் அரசு மதமாக உள்ள மொனாக்கோ நகரத்திற்கு வருகை தரும் முதல் திருத்தந்தையாகத் திகழ்கிறார். அதனைத் தொடர்ந்து மொனாக்கோவின் இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட் மற்றும் அவரது குடும்பத்தினருடன் இளவரசர் அரண்மனையில் ஒரு விழா மற்றும் மரியாதைக்குரிய வருகையுடன் திருத்தந்தையின் திருத்தூதுப் பயண நிகழ்வுகள் தொடங்குகின்றன.

பின்னர் காலையில், திருத்தந்தை லியோ அவர்கள் கோர்சிகா மற்றும் மொனாக்கோவின் பாதுகாவலர் புனித டிவோட்டா கோவிலிற்கு வெளியே இளைஞர்கள் மற்றும் கிறிஸ்தவப் புகுநிலையினருக்கு உரையாற்றுவதற்கு முன்பு, அமலோற்பவ அன்னைப் பேராலயத்தில் உள்ளூர் கத்தோலிக்கரைச் சந்திப்பார். சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, திருத்தந்தை லியோ அவர்கள், இரண்டாம் லூயிஸ் கால்பந்து மைதானத்தில் திருப்பலிக்குத் தலைமை தாங்குவார், பின்னர் மாலை 5:45 மணிக்குத் தனது திருத்தூதுப் பயணத்தை முடித்துக்கொண்டு உரோமை நகருக்குத் திரும்புவார். திருத்தந்தையின் இந்தத் திருத்தூதுப் பயணம், திருப்பீடத்திற்கும் மொனாக்கோவின் ஆளும் கிரிமால்டி குடும்பத்திற்கும் இடையிலான நீண்டகால உறவை எடுத்துக்காட்டும் அதேவேளையில், மனித உயிருக்கு மரியாதை, சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் சமூக உரையாடல் போன்ற பகிரப்பட்ட முன்னுரிமைகளை ஊக்குவிக்கிறது என்று திருஅவையின் உயர் அதிகாரிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இன்றைய நிலை

இன்றைய நிலையில், மொனாக்கோ உலகின் மிகச் செல்வந்த மற்றும் தனித்துவமான இடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அதன் பொருளாதாரம் ஆடம்பர சுற்றுலா, வங்கி மற்றும் நிலம் தொடர்பான வியாபாரங்களால் இயக்கப்படுகிறது. இது ஒரு "வரிப் புகலிடமாக" கருதப்படுகிறது. மொன்தே கார்லோ கிராண்ட் ப்ரிக்ஸ் (Monte Carlo Grand Prix) என்ற உலகப் புகழ்பெற்ற விளையாட்டு நிகழ்வுகளையும் நடத்துகிறது. சிறிய நாடாக இருந்தாலும், பன்னாட்டளவில் முக்கிய தாக்கம் செலுத்துகிறது.

“வழியும் உண்மையும் வாழ்வும் நானே" என்ற விருதுவாக்குடன் மொனாக்கோவிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம் சிறக்க இறைவேண்டல் செய்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 மார்ச் 2026, 14:52