உயிர்த்தெழுதலையும் எதிர்நோக்கையும் தழுவிக்கொள்வோம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
"இயேசு இலாசரை உயிர்ப்பிக்கும் நிகழ்வு நமது ஆழமான தேவைகளை உணர்ந்துகொள்ளவும், தூய ஆவியாரின் உதவியுடன், சுயநலம், பொருள் பற்று, வன்முறை மற்றும் மேலோட்டமான தன்மை ஆகியவற்றில் நம்மைச் சிக்கவைக்கும் பழக்கவழக்கங்கள், மனப்பான்மைகள் மற்றும் சிந்தனை முறைகளிலிருந்து விடுபடவும் நம்மை ஊக்குவிக்கிறது" என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
மார்ச் 22, ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையில் இவ்வாறு மொழிந்தார் திருத்தந்தை.
இந்நாளில் திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு குறித்த நற்செய்தி வாசகத்தை (காண்க. யோவா 11: 1-45) மையமாகக் கொண்டு தனது கருத்துக்களை விசுவாசிகளுடன் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை.
இயேசு இறந்த இலாசரை உயிர்பெற்று எழச்செய்யும் நிகழ்வு குறித்து நினைவூட்டிய திருத்தந்தை, திருமுழுக்கின் வழியாக நிலைவாழ்வு எனும் கொடையை வழங்கும், இறப்பின் மீதான கிறிஸ்துவின் வெற்றியின் முக்கியத்துவத்தைக் குறித்து விசுவாசிகளிடம் வலியுறுத்திக் கூறினார்.
“உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார்" என்று இயேசு மார்த்தவிடம் கூறிய வார்த்தைகளை எடுத்துக்காட்டி விசுவாகளுக்கு நம்பிக்கையூட்டினார் திருத்தந்தை.
"புனித வாரம் நெருங்கி வரும் வேளையில், இயேசு மார்த்தாவிடம் கூறிய இந்த வார்த்தைகள் ஒரு வலிமை வாய்ந்த நினைவூட்டலாக அமைகின்றன" என்று தெரிவித்த திருத்தந்தை, "இது விசுவாசிகளை கிறிஸ்துவின் பாடுகள், இறப்பு மற்றும் உயிர்த்தெழுதல் குறித்து தியானிக்கவும், மீட்பு மற்றும் ஆன்மிகப் புதுப்பித்தலுக்காக இந்த நிகழ்வுகள் வழங்கும் அருளைத் தழுவிக்கொள்ளவும் அழைக்கிறது" என்றும் சுட்டிக்காட்டினார்.
உலகம் நிலையற்ற இன்பங்களைத் தேடுவதைச் சுட்டிக்காட்டி, "ஒவ்வொரு மனித இதயத்திலும் குடிகொண்டிருக்கும் நிலைவாழ்விற்கான ஆழமான ஏக்கத்தை, பொருள்சார் பொருள்கள், புகழ் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றால் பூர்த்தி செய்ய முடியாது" என்று குறிப்பிட்டார் திருத்தந்தை.
மேலும் "முடிவுள்ள எதுவும் நமது அகத் தாகத்தைத் தணிக்க முடியாது," என்று கூறிய திருத்தந்தை, "விசுவாசிகள் கடவுளிடம் மட்டுமே அமைதியைத் தேட வேண்டும்" என்று வலிறுத்திக் கேட்டுக்கொண்டார்.
“இலாசரே, வெளியே வா” என்று இயேசு கூறிய வார்த்தைகளை எடுத்துக்காட்டி, சுயநலம், பொருள் பற்று, மற்றும் மேலோட்டமான தன்மை எனும் “கல்லறைகளிலிருந்து” விடுபடுமாறு விசுவாசிகளுக்கு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.
மேலும் "கிறிஸ்தவர்கள் இந்தக் கட்டுப்படுத்தும் இடங்களிலிருந்து வெளிவந்து, இறையருளால் புதுப்பிக்கப்பட்டு, நம்பிக்கை, அன்பு மற்றும் தாராள மனப்பான்மையுடன் வாழ வேண்டும்" என்று அவர்களை ஊக்குவித்தார் திருத்தந்தை.
"வரவிருக்கும் புனித வாரத்தில், விசுவாசிகள் நம்பிக்கை, இறைப்பற்று மற்றும் விசுவாசத்துடன் வழிநடத்தப்பட வேண்டும்" என்றும், "அதன் வழியாக அவர்கள் ஒவ்வொரு நாளும் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை மீண்டும் புதிதாகச் சந்திக்க முடியும்" என்றும் மொழிந்தார் திருத்தந்தை.
இறுதியாக, விசுவாசிகள் அனைவரையும் அன்னை கன்னி மரியாவின் பரிந்துரை இறைவேண்டலில் ஒப்படைத்த திருத்தந்தை, அவர்களுக்குத் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கி ஞாயிறு மூவேளை இறைவேண்டல் உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
