தேடுதல்

திருத்தூதுசார் பாவமன்னிப்பு அவையின் உறுப்பினர்களுடன் திருத்தந்தை திருத்தூதுசார் பாவமன்னிப்பு அவையின் உறுப்பினர்களுடன் திருத்தந்தை   (@Vatican Media)

போர்களில் ஈடுபடும் கிறிஸ்தவர்கள் தங்கள் செயல்களைப் பற்றி சிந்திக்க வேண்டும்!

திருத்தந்தை தனது உரையில், போர்களில் ஈடுபடும் கிறிஸ்தவர்கள் தங்கள் செயல்களைப் பற்றி சிந்திக்கவும், தங்கள் மனச்சாட்சியைப் பற்றி சிந்திக்கவும் வலியுறுத்தியதுடன், ஒரு மோதலில் பங்கேற்பதன் தார்மீக தாக்கத்தை அவர்கள் கருத்தில் கொண்டு அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திருஅவை எல்லையற்ற இரக்கத்தை வழங்கினாலும், பல கிறிஸ்தவர்கள் பாவமன்னிப்பைப் புறக்கணிக்கிறார்கள் என்பதைக் குறிப்பிட்டு, ஒப்புரவு அருளடையாளத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துமாறு அருள்பணியாளர்கள் மற்றும் அருள்பணித்துவ பயிற்சி மாணவர்களை ஊக்குவித்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

மார்ச் 13, வெள்ளிக்கிழமையன்று, திருத்தூதுசார் பாவமன்னிப்பு அவையால் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் 36-வது மனச்சான்று தொடர்பான பயிற்சி வகுப்பின் பங்கேற்பாளர்களுக்குத் திருப்பீடத்தில் வழங்கிய உரையொன்றில் இவ்வாறு ஊக்குவித்த திருத்தந்தை, விசுவாசிகளுக்கும் கடவுளுக்கும் இடையிலான ஒன்றிப்பை மீட்டெடுப்பதில் பாவமன்னிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

"திருஅவை வரலாறு முழுவதும் இந்த அருளடையாளம் வளர்ச்சியடைந்து வந்துள்ளது, ஆனால் பலர் அதை போதுமான அளவு பயன்படுத்துவதில்லை" என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, "சிலர் பாவமன்னிப்புக்கு செல்வதற்குப் பதிலாக கடுமையான பாவத்தில் கூட இருக்கிறார்கள்" என்று குறிப்பிட்டார்.

நான்காவது இலாத்தரான் திருச்சங்கத்தால் நிறுவப்பட்ட திருஅவை விதியை நினைவுகூர்ந்த திருத்தந்தை, "இது கத்தோலிக்கர்கள் ஆண்டிற்கு ஒரு முறையாவது தங்களின் பெரும் பாவங்களைக் குறித்து பாவ அறிக்கை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது" என்று சுட்டிக்காட்டினார்.

பாவமன்னிப்பை "ஒன்றிப்பின் ஆய்வகம்" என்று விவரித்த திருத்தந்தை, "இது கடவுளுடனான ஆன்மிக  ஒன்றிப்பை மீட்டெடுக்கிறது" என்றும், "திருஅவையுடனான பிணைப்பை வலுப்படுத்துவதுடன் குடும்பங்களிலும் சமூகத்திலும் அமைதிக்குப் பங்களிக்கிறது" என்றும் விளக்கினார்.

இளம் அருள்பணியாளர்கள் மற்றும் திருநிலைப்படுத்தலுக்கான அருள்பணித்துவ மாணவர்கள் குறித்து குறிப்பிட்ட திருத்தந்தை, "ஒப்புரவு அருளடையாளத்தின் வழியாக, மக்களுக்கும் கடவுளுக்கும் இடையிலான உறவை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதே அவர்களின் நோக்கமாக இருக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

பாவ அறிக்கைக் கேட்பதில், தங்களின் அர்ப்பணம் நிறைந்த பணிகளுக்காக அறியப்பட்ட  ஜான் மரிய வியானி, லியோபோல்டு மாண்டிக் மற்றும் பியத்ரெல்சினாவின் பியோ உள்ளிட்ட புனிதர்களை தனது உரையில் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

இறுதியாக, "அருள்பணியாளர்கள் தொடர்ந்து பாவ அறிக்கைக் கேட்பதில் ஈடுபடவேண்டும்" என்று ஊக்குவித்த திருத்தந்தை, "கடவுளின் பரிவிரக்கத்தை அனுபவிப்பவர்கள் உலகில் ஒப்புரவு மற்றும் அமைதிக்கான கருவிகளாக மாற முடியும்" என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 மார்ச் 2026, 12:38