முதுபெரும் தந்தை இரண்டாம் இலியாவின் மறைவுக்கு திருத்தந்தை இரங்கல்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
"இறைபதம் அடைந்துள்ள ஜார்ஜியா கத்தோலிக்க ஆர்த்தடாக்ஸ் வழிபாட்டு முறை திருஅவையின் முதுபெரும் தந்தை இரண்டாம் இலியா அவர்கள், பலருக்கு, ஓர் ஆன்மிகத் தந்தையாகவும், ஒப்புரவின் குரலாகவும், ஒன்றிப்பை அயராது கட்டியெழுப்புபவராகவும் விளங்கினார்" என்று கூறியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
மார்ச் 22, ஞாயிறன்று, ஜார்ஜியா கத்தோலிக்க ஆர்த்தடாக்ஸ் வழிபாட்டு முறை திருஅவைக்கு அனுப்பியுள்ள இரங்கல் செய்தியொன்றில் இவ்வாறு புகழாரம் சூட்டியுள்ள திருத்தந்தை லியோ அவர்கள், "பல ஆண்டுகளாக அன்பு, ஞானம் மற்றும் நற்செய்தியின் வல்லமையுடன் மக்களை வழிநடத்திய நல்மேய்ப்பர்" என்று மொழிந்துள்ளார்.
அவ்வழிபாட்டு முறை திருஅவையைச் சேர்ந்த அனைத்துத் திருநிலை அவையினர் மற்றும் விசுவாசிகளுக்குத் தனது இரங்கலைத் தெரிவித்துள்ள அதேவேளை, சவாலான காலங்களில் ஜார்ஜியாவை வழிநடத்துவதில் முதுபெரும் தந்தை இரண்டாம் இலியா அவர்களின் ஞானம், இரக்கம் மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்" என்று பாராட்டியுள்ளார்.
மேலும் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், நம்பிக்கையை வளர்க்கவும், ஒன்றிப்பை மேம்படுத்தவும் இறைபதமடைந்த முதுபெரும் தந்தை இரண்டாம் இலியா அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளைத் தனது செய்தியில் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.
கலாச்சாரப் பிளவுகளைக் குறைக்க உதவிய முதுபெரும் தந்தை இரண்டாம் இலியா அவர்களின் இசை மீதான அன்பைக் குறித்தும் குறிப்பிட்டுள்ளதுடன், திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் உட்பட முந்தைய திருத்தந்தையர்களுடன் அவர் கொண்டிருந்த சுமுகமான உறவையும் நினைவு கூர்ந்துள்ளார்.
இறுதியாக, இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை கொள்ளுமாறு அவ்வழிபாட்டு முறை திருஅவையின் விசுவாசிகளை ஊக்குவித்துள்ள திருத்தந்தை, அவரை இழந்து தவிக்கும் இவ்வேளையில் ஜார்ஜியா திருஅவைக்கும் குறிப்பாக, அதன் தலைவர்களுக்கும் தொடர்ச்சியான இறைவேண்டலையும் ஆதரவையும் அளிப்பதாக உறுதியளித்து தனது இரங்கல் செய்தியை நிறைவு செய்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
