ஆண்டவர் இயேசு ஒவ்வொரு சூழ்நிலையிலும் நம்முடன் பயணிக்கிறார்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"உண்மையின் ஊற்றாக நம்மில் பொங்கி எழும் நற்செய்தியின் வார்த்தை, ஒவ்வொருவரும் தங்கள் கண்களைத் திறக்கவும், எது நல்லது எது கெட்டது என்பதை அறிவார்ந்த விதத்தில் மதிப்பிடவும், இதனால் சுதந்திரமான மற்றும் பக்குவப்பட்ட மனச்சாட்சியை உருவாக்கவும் உதவுகிறது" என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

மார்ச் 08, ஞாயிறன்று, உரோமையின் பழைய கோபுர சாலையிலுள்ள புனித காணிக்கை அன்னை பங்குத்தளக் கோவிலில் தலைமையேற்று நிகழ்த்திய திருப்பலியின் மறையுரையில் இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, "இயேசுவின் பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்பில் பங்குபெறப்போகும் முக்கிமான தருணத்தில் நாம் இருக்கின்றோம்" என்று அதன் மக்களுக்கு எடுத்துக்காட்டினார்.

இயேசு சமாரியப் பெண்ணைச் சந்தித்ததைப் பற்றிய நற்செய்தி வாசகத்தை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, அனைத்து விசுவாசிகளுக்கும் கிறிஸ்து வழங்கும் நிலைவாழ்வு அளிக்கும் தண்ணீரைப் பற்றி  சுட்டிக்காட்டி "இது கடவுளின் எல்லையற்ற அன்பையும் ஒவ்வொரு மனித இதயத்திலும் உள்ள ஆன்மிகப் புதுப்பித்தலுக்கான ஆழ்ந்த தாகத்தையும் குறிக்கிறது" என்று தெரிவித்தார்.

"தவக்காலம் என்பது கடவுளுடனான ஒருவரின் உறவைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம்" என்று கூறிய திருத்தந்தை, "சமாரியப் பெண்ணைப் போலவே, பாவத்தின் காயங்கள் இருந்தபோதிலும், மனிதகுலம் அன்பு மற்றும் வாழ்க்கைக்காக ஆழமாகத் தாகம் கொண்டுள்ளது" என்று விளக்கினார்.

"சமாரியப் பெண் அனுபவிக்கும் வாழ்க்கை மற்றும் அன்பின் மீதான தாகம் நமது தாகம்" என்று கூறிய திருத்தந்தை, "கிணற்று ஓரமாய் அந்தப் பெண்ணுடன் கிறிஸ்துவின் வியப்புக்குரிய சந்திப்பு, ஒதுக்கப்பட்டதாகவோ அல்லது நிராகரிக்கப்பட்டதாகவோ உணருபவர்களை சென்றடைய கடவுள் எடுக்கும் புதிய முயற்சியை வெளிப்படுத்துகிறது" என்று எடுத்துரைத்தார்.

ஒரு காலத்தில் ஒதுக்கப்பட்டும், வெட்கத்துக்குரியவராகக் கருதப்பட்டும் வாழ்ந்து வந்த சமாரியப் பெண், கிறிஸ்துவைச் சந்தித்த பிறகு தனது சமூகத்திற்கு மகிழ்ச்சியின் ஆதாரமாகவும், மறைபரப்புப் பணியாளராகவும் எப்படி மாறினார் என்பது குறித்து விசுவாசிகளிடம் விவரித்தார் திருத்தந்தை.

"இந்தச் சந்திப்பின் மூலம், கடவுளுடைய அருளின் மாற்றும் வலிமையை நாம் காண்கிறோம்," என்று குறிப்பிட்ட திருத்தந்தை, விசுவாசிகள் தங்கள் சொந்த திருமுழுக்குக் கொடைகளைக் குறித்துச் சிந்திக்கவும், கிறிஸ்துவின் நிலைவாழ்வு அளிக்கும் தண்ணீரிலிருந்து வரும் மாற்றத்தைத் தழுவிக்கொள்ளவும் ஊக்குவித்தார்.

அப்பங்குத்தள இறைமக்கள் எதிர்கொண்டு வரும் சவால்கள், குறிப்பாக வறுமை, ஓரங்கட்டப்படுதல் மற்றும் இளைஞர்களின் போராட்டங்கள் போன்ற பிரச்சனைகள் குறித்து எடுத்துக்காட்டிய திருத்தந்தை, நம்பிக்கையையும் மனித மாண்பையும் தேடும் உலகில், கிறிஸ்துவின் அன்பு மற்றும் அக்கறையின் அடையாளங்களாக வாழ அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இறுதியாக, "ஆண்டவராம் இயேசு எப்போதும் நம்முடன் இருக்கிறார், ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவர் நம்முடன் பயணிக்கிறார்" என்று மொழிந்த திருத்தந்தை, அன்னை புனித கன்னி மரியாவின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, நற்செய்தியின் வலிமையான சான்றுகளாக விளங்கிட அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டு  தனது மறையுரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 மார்ச் 2026, 08:54