தேடுதல்

கிறிஸ்துவே நம் விசுவாசத்தின் உயிர்நாடி!

"கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக, நாம் மனித மாண்பைப் பாதுகாக்கவும், நற்செய்தியைப் பரப்பவும், சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுக்கவும் கடமைப்பட்டிருக்கிறோம்" : திருத்தந்தை பதினான்காம் லியோ

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

மார்ச் 28, சனிக்கிழமையன்று, காலை 11.00 மணிக்கு, புனித அமலோற்பவ அன்னை பேராலயத்தில் கத்தோலிக்கச் சமூகத்துடன் நண்பகல் இறைவேண்டல் கொண்டாட்டத்தில் பங்கேற்றார் திருத்தந்தை பதினான்காம் லியோ. அப்போது அவர் வழங்கிய மறையுரை..

அன்புள்ள சகோதர சகோதரிகளே!

இறைவனிடத்தில் நமக்காகப் பரிந்து பேசுகிற ஒருவர் நமக்கு உண்டு, அவரே நீதியுள்ளவராகிய இயேசு கிறிஸ்து. அவர் நமது பலவீனங்களில் நம்மை நெருங்கி வந்து, நமது பாவங்களைச் சுமந்து, நமக்கு மீட்பை  வழங்குகிறார்.

கிறிஸ்துவே நமது விசுவாசத்தின் மையப்புள்ளி; அவர் தமது இரக்கத்தினால் கருணையினால் இறைவனோடும் பிறரோடும் நம்மை ஒப்புரவாக்குகிறார். அந்த இரக்கம் நம்மை குணமாக்கி, உருமாற்றி, நம்மை உறவு ஒன்றிப்புக்குள் வழிநடத்துகிறது.

பல்வேறுபட்ட மக்கள் வாழும் இந்த மொனாக்கோவில், உங்கள் தலத்திருஅவையானது இறைவனுடைய அன்பை வெளிப்படுத்துகிறது; மேலும் அனைத்து மக்களையும் அவருடைய பிள்ளைகளாக ஏற்று வரவேற்கிறது. கிறிஸ்துவுக்குள் தேசத்தாலோ அல்லது சமூக அந்தஸ்தாலோ எந்தப் பிரிவினையும் இல்லை; நாம் அனைவரும் ஒன்றாய் இருக்கிறோம்.

கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக, நாம் மனித மாண்பைப் பாதுகாக்கவும், நற்செய்தியைப் பரப்பவும், சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுக்கவும் கடமைப்பட்டிருக்கிறோம். நற்செய்தியை ஆர்வத்துடன் முழங்குங்கள்; வாழ்வைப் பாதுகாத்திடுங்கள்; மேலும் சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் நீதிக்காகவும், ஒருமைப்பாட்டிற்காகவும் குரல் கொடுங்கள்.

உயிருள்ள விசுவாசமானது காலத்தின் தேவைகளுக்குப் பதிலளிப்பதாக இருக்க வேண்டும்; அது கருத்தரிப்பு  முதல் இறப்பு வரை மனித வாழ்வைப் பாதுகாக்கவும், நீதியும் இரக்கமும் கொண்ட ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பவும் நம்மை வழிநடத்த வேண்டும்.

மொனாக்கோவின் பாதுகாவலர் புனித டிவோட்டா உங்களுக்கு ஊக்கமளிக்கட்டும்; அமல உற்பவியான அன்னை கன்னி மரியா உங்களை எப்போதும் வழிநடத்தட்டும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 மார்ச் 2026, 15:55