தேடுதல்

வன்முறைக்கு மத்தியில் அமைதியை ஏற்படுத்துவோம்!

மோதல்களால் பெருகிவரும் இந்த உலகில், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் குருத்து ஞாயிறு செய்தியானது, அமைதிக்கான கிறிஸ்துவின் அழைப்பையும், வன்முறையின் அனைத்து வடிவங்களையும் அவர் நிராகரிப்பதையும் நினைவூட்டும் ஒரு சரியான தருணமாக அமைந்துள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"அளவற்ற துன்பங்களையும் வன்முறைகளையும் எதிர்கொள்ளும் வேளையிலும், இயேசு கிறிஸ்துவால் முன்மாதிரியாகக் காட்டப்பட்ட அமைதியின் உண்மையான இயல்பைப் பற்றி விசுவாசிகள் தியானிக்க வேண்டும்" என்று அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ

மார்ச் 29, ஞாயிறன்று, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் சிறப்பிக்கப்பட்ட ஆண்டவருடைய பாடுகளின் குருத்து ஞாயிறு திருப்பலியின் மறையுரையில் இவ்வாறு விசுவாசிகளிடம் அழைப்புவிடுத்த திருத்தந்தை, "இயேசுவின் கல்வாரிப் பயணத்தில், ​​மனிதகுலத்திற்காக அவர் ஏற்றுக்கொண்ட பாடுகளையும் தியாகத்தையும் தியானித்து, விசுவாசிகள் தங்களை அவருக்குப் பின்னால் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

இயேசு அமைதியின் அரசர்

"இயேசு தம்மை அமைதியின் அரசராக வெளிப்படுத்துகிறார்," என்று தெரிவித்த திருத்தந்தை, "அவரைச் சுற்றிப் போர் சூழ்ந்திருந்தாலும், இருளில் மூழ்கும் உலகில் ஒளியாகத் தம்மை அளித்து, அவர் சாந்தத்தில் உறுதியாக நிலைத்திருக்கிறார்" என்றும், "மற்றவர்கள் அவருக்கு மரண தண்டனை விதிக்கச் சதி செய்தாலும், அவருடைய வாழ்க்கை அன்பின் கொடையாக அமைந்தது" என்றும் எடுத்துக்காட்டினார்.

"தனிநபர்களுக்கு அமைதியைக் கொண்டுவருவது மட்டுமல்லாமல், மனிதகுலத்தை இறைவனிடமிருந்தும் ஒருவரையொருவரிடமிருந்தும் பிரிக்கும் ஒவ்வொரு தடையையும் தகர்த்து, உலகத்தைத் இறைத்தந்தையுடன் ஒன்றிணைப்பதே இயேசுவின் விருப்பம்" என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை.

பணிவின் வடிவமாக மெசியா

திருமறைக நூல்களை மேற்கோள் காட்டி, சக்கரியா நூலில் உள்ள பண்டைய முன்னறிவித்தலை பற்றி நினைவுகூர்ந்த திருத்தந்தை, வன்முறைக்கு மேலான அமைதியின் அடையாளமாக, கிறிஸ்து ஒரு கழுதையின் மீது ஏறி எருசலேமுக்குள் பணிவுடன் நுழைந்ததை சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

"அமைதியின் அரசரான இயேசு, போர்க்குதிரையின் மீது வரும் ஒரு போர்வீர அரசராக அல்ல, மாறாக, அமைதியின் ஆட்சிக்கான கடவுளின் வாக்குறுதியை நிறைவேற்றும் பணிவு நிறைந்த மெசியாவாக வருகிறார்," என்று உரைத்த திருத்தந்தை, "அவர் தாக்கப்படும்போது திருப்பித் தாக்குவதில்லை, மாறாக, வன்முறையை எப்போதும் நிராகரிக்கும் கடவுளின் முகத்தை வெளிப்படுத்தி, துன்பங்களைத் தேர்ந்தெடுக்கிறார்" என்று கூறினார்.

வன்முறையை நியாயப்படுத்தாத இயேசு

"இயேசுவோடு இருந்தவருள் ஒருவர் தமது கையை நீட்டி வாளை உருவித் தலைமைக் குருவின் பணியாளர் ஒருவரை வாளால் தாக்கியபோது,  'உனது வாளை அதன் உறையில் திரும்பப் போடு. ஏனெனில், வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர்' என்று தம் சீடருக்கு எச்சரிக்கை செய்ததையும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

மேலும் தன்னைப் பொறுத்தவரையில், இந்தத் தருணம், வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்தக் கூடாது என்பதைக் காட்டும் விதமாக, இயேசு தமது வாழ்நாளில் படிப்பித்த அமைதியை எடுத்துக்காட்டுகிறது  என்பதையும் குறிப்பிட்டார் திருத்தந்தை.

இத்தகைய சூழ்நிலையில் இயேசு போர் தொடுக்க வரவில்லை, மாறாக, வரலாறு முழுவதும் மனிதகுலம் அனுபவித்த துன்பங்களைத் தழுவிக்கொண்டு, அவர் தம்மைச் சிலுவையில் அறையப்பட அனுமதித்தார்" என்று விசுவாசிகளுக்கு விளக்கினார் திருத்தந்தை.

போர் தொடுப்பவர்களின் இறைவேண்டல்கள் நிராகரிக்கப்படும்

தொடர்ந்து இடம்பெற்று வரும் உலகளாவிய மோதல்கள் குறித்துப் பேசுகையில், அமைதியின் அரசரான கிறிஸ்து, போர் தொடுப்பவர்களின் இறைவேண்டல்களைக் கேட்பதில்லை என்பதை வலியுறுத்திய திருத்தந்தை, "அவர் அந்த இறைவேண்டல்களை நிராகரித்து, 'நீங்கள் அதிகமான இறைவேண்டல்களை  செய்தாலும், அவற்றை நான் கேட்கமாட்டேன்; உங்கள் கைகள் இரத்தத்தால் நிறைந்திருக்கின்றன' எனக்  கூறுவார்" என்று இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து மேற்கோள் காட்டினார்.

சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை, துயருறும் மனிதகுலத்தின், குறிப்பாகப் போர் மற்றும் வன்முறையின் கொடூரங்களைத் தாங்கிக்கொள்பவர்களின் உருவகமாகச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, "அவருடைய காயங்களில், இன்று பலருடைய வேதனைகளை நாம் காண்கிறோம்," என்று குறிப்பிட்டார்.

மேலும் "இயேசுவின் இறுதிக் கூக்குரலில், ஒடுக்கப்பட்டோர், நோயுற்றோர், தனிமையில் வாடுவோர், வன்முறையின் பாரத்தால் நசுக்கப்பட்டோர் ஆகியோரின் கதறல்களை நாம் கேட்கிறோம்" என்று விசுவாசிகளிடம் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

துன்பங்கள் விரைவில் முடிவுக்கு வரும்

"மரணம் இனி நம் மீது ஆதிக்கம் செலுத்தாது, போரின் கொடூரங்கள் வலுவிழந்து வருகின்றன" என்றும் "வசந்த கால சூரியனில் பனி உருகுவதைப் போல, பாதிக்கப்பட்ட அனைவரின் துன்பங்களும் விரைவில் முடிவுக்கு வரும்" என்றும் நம்பிக்கை தெரிவித்து, அமைதிக்கான தனது இந்த வேண்டுதலை அன்னை புனித கன்னி மரியாவிடம் ஒப்படைத்தார்.

இறுதியாக, 'மரணமும் வன்முறையும் இனி உலகை ஆளக்கூடாது' என்று அன்னை புனித கன்னி மரியாவின் உதவியை நாடி இறைவேண்டல் செய்த ஆயர் டோனினோ பெல்லோவை (Tonino Bello) மேற்கோள் காட்டி, இரக்கத்திற்கும் அமைதிக்குமான ஒரு மனம்நிறைந்த வேண்டுகோளுடன் தமது மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 மார்ச் 2026, 10:39