தேடுதல்

திருப்பலியில் திருத்தந்தை லியோ திருப்பலியில் திருத்தந்தை லியோ   (ANSA)

விசுவாசத்தின் பாதையில் ஒன்றிணைந்து நடப்போம்!

"மொனாக்கோ தலத்திருஅவையானது, அமைதிக்குச் சான்று பகரவும், அன்பின் வழியாக மகிழ்ச்சியைக் கொண்டுவரவும் அழைக்கப்படுகிறது. பிறக்காத குழந்தை முதல் முதியோர் வரை, நலமுள்ளோர் முதல் நோயுற்றோர் வரை அனைத்து மக்கள் மீதும் நீங்கள் அன்பு காட்டுங்கள்" : திருத்தந்தை பதினான்காம் லியோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மார்ச் 28, சனிக்கிழமையன்று மாலை 03.30 மணிக்கு, மொனாக்கோவிலுள்ள இரண்டாம் லூயிஸ் கால்பந்து மைதானத்தில் தலைமையேற்று நிகழ்த்திய திருப்பலியில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வழங்கிய மறையுரை.

அன்புள்ள சகோதரர் சகோதரிகளே,

இன்றைய நற்செய்தியில் (யோவா 11:45–57), இலாசரை உயிர்பெற்றெழச் செய்தபிறகு, இயேசுவுக்கு யூதத் தலைமைச் சங்கம் விதித்த மரண தண்டனையைப் பற்றி நாம் அறிய வருகிறோம். அன்பின் இந்தச் செயல், அவருடைய நற்செயல்களுக்காக அல்ல, மாறாக அச்சத்தினாலும் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் ஆசையினாலும் அவரைக் கொல்லும் திட்டத்திற்கு வழிவகுத்தது. இது விதியல்ல, மாறாக இறைவனின் திருவுளத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட ஒரு தெரிவு.

இயேசுவின் நம்பிக்கையூட்டும் செய்தி உரோமையர்களின் பழிவாங்கும் நடவடிக்கையைத் தூண்டும் என்று தலைவர்கள் அஞ்சினர். அவரை மெசியாவாக ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, அவர்கள் அவரை ஓர் அச்சுறுத்தலாகக் கண்டனர். அவர்களுடைய அச்சம் அவர்களைச் சட்டத்தை மீறும்படித் தூண்டியது, ஆனால் கடவுள் தமது மீட்பின் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அவர்களுடைய தீச்செயலைப் பயன்படுத்திக்கொண்டார். அவ்வாண்டின் தலைமைக் குருவாய் இருந்த கயபா, தன்னை அறியாமலேயே, 'இயேசு தம் இனத்திற்காவும், தம் இனத்திற்காக மட்டுமின்றி, சிதறி வாழ்ந்த கடவுளின் பிள்ளைகளை ஒன்றாய்ச் சேர்க்கும் நோக்குடன் அவர்களுக்காகவும் இறக்கப்போகிறார்' என்று இறைவாக்காகச் சொன்னார். (வசனம் 51).

இன்றும், கடவுளின் செய்திக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களின் திட்டங்களுக்கும் இடையிலான போராட்டத்தை நாம் காண்கிறோம். ஆனால், தீமை எவ்வாறாக இருந்தாலும், கடவுளின் இரக்கமே மீட்புக்கான  உண்மையான பாதையாகும். இயேசு இறந்த இலாசரை மீண்டும் உயிர்ப்பித்தது போலவே, நம் ஒவ்வொருவருக்கும் மீட்புக்கும் ஒரு புதிய வாழ்க்கைக்கும் வாய்ப்பளிக்கிறார்.

நம் உலகில், பலர் இன்னும் ஒடுக்கப்படுகிறார்கள், மேலும் பல அப்பாவி உயிர்கள் பறிக்கப்படுகின்றன. ஆனால் கடவுளின் என்றுமுள்ள நீதி நம்மை இறப்பிலிருந்து காப்பாற்றி, நமக்கு நம்பிக்கையை அளிக்கிறது. திருத்தந்தை பிரான்சிஸ் தனது மேய்ப்புப் பணி கனவு குறித்த 'இரக்கத்தின் கலாச்சாரத்தில்' (culture of mercy) படிப்பிப்பது போல, கடவுளின் இரக்கம் இதயங்களை மாற்றியமைத்து, மற்றவர்களுக்குப் பணியாற்ற நம்மை அழைக்கிறது.

இறைவாக்கினர் எசேக்கியேல், தம் மக்களை சிலை வழிபாட்டிலிருந்து விடுவிப்பதற்கான கடவுளுடைய திட்டத்தைப் பற்றி நமக்குச் சொல்கிறார் (எசே 37:23). அதிகாரம், செல்வம் அல்லது தற்பெருமை போன்று நம் இதயங்களை அடிமைப்படுத்தும் எதுவும் சிலைகளே. இயேசுவின் அன்பின் முன்மாதிரியை நாம் பின்பற்றும் தாழ்மையின் வழியாகவே உண்மையான விடுதலை வருகிறது. அவருடைய தியாகத்தின் வழியாக, கடவுள் நம்மைத் தூய்மைப்படுத்தி, தம்முடைய மக்களாக மாற்றுவதாக வாக்குறுதி அளிக்கிறார்.

அநீதி, போர்கள் மற்றும் துன்பங்களுக்கு மத்தியில், துக்கத்திற்குப் பதிலாக கடவுளுடைய மகிழ்ச்சி மேலோங்குகிறது என்பதை நாம் நினைவில் கொள்வோம் (எரே 31:13). அதிகாரம் மற்றும் செல்வத்தின் மீதான மோகம் நமக்கு மிகுந்த துன்பத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் நாம் கடவுளிடம் திரும்பும்போது, இந்நிலை மாற்றம் பெறுகிறது என்பதை உணர்வோம். அவர் நம்மைத் தூய்மைப்படுத்தி, நமக்கு அமைதியைக் கொண்டு வருகிறார். உண்மையான அமைதி என்பது, மற்றவர்களை எதிரிகளாக அல்லாமல் சகோதரர் சகோதரிகளாகப் பார்க்கும் தூய்மையான உள்ளங்களிலிருந்து வருகிறது.

மொனாக்கோ தலத்திருஅவையானது, அமைதிக்குச் சான்று பகரவும், அன்பின் வழியாக மகிழ்ச்சியைக் கொண்டுவரவும் அழைக்கப்படுகிறது. பிறக்காத குழந்தை முதல் முதியோர் வரை, நலமுள்ளோர் முதல் நோயுற்றோர் வரை அனைத்து மக்கள் மீதும் நீங்கள் அன்பு காட்டுங்கள். மிகவும் நலிந்தோரைப் பராமரிக்கவும், உண்மையான மனித வளர்ச்சியை ஊக்குவிக்கவும் அன்னை புனித கன்னி மரியா உங்களுக்குத் துணை நிற்பாராக!

தீமை அதிகப்படியாகத் தோன்றும் இந்தத் தவக்காலத்தில், ஆண்டவர் தமது உயிர்த்தெழுதலை ஆயத்தப்படுத்துகிறார். இலாசரைப் போல, நாமும் இறப்பிலிருந்து வாழ்வுக்கு உயிர்பெற்றெழ அழைக்கப்பட்டிருக்கிறோம். ஆகவே விசுவாசத்தின் பாதையில் ஒன்றிணைந்து நடப்போம், உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் வழியாக உலகிற்கு வாழ்வளிப்போம். உங்கள் அனைவரையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 மார்ச் 2026, 16:20