மொனாக்கோவிற்கு திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம் குறித்து வத்திக்கான் பரிசீலனை!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இவ்வாண்டு மார்ச் மாத இறுதியில் மொனாக்கோவிற்கு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஒரு நாள் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வது குறித்து வத்திக்கான் பரிசீலித்து வருவதாக திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 10, செவ்வாய்க்கிழமையன்று இந்தத் தகவலை வழங்கியுள்ள திருப்பீடச் செய்தித் தொடர்பகம், இந்தப் பயணம் உறுதிப்படுத்தப்பட்டால், இது திருத்தந்தை லியோ அவர்களின் இரண்டாவது வெளிநாட்டுப் திருத்தூதுப் பயணமாகவும், நவீன யுகத்தில் மொனாக்கோவிற்கு ஒரு திருத்தந்தை மேற்கொள்ளும் முதல் பயணமாகவும் இருக்கும் என்றும் கூறியுள்ளது.
கடந்த ஜனவரி 17, சனிக்கிழமையன்று, வத்திக்கானில் திருத்தந்தை லியோ மற்றும் மொனாக்கோ இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட் இருவருக்கும் இடையே இடம்பெற்ற ஒரு சந்திப்பைத் தொடர்ந்து இந்தச் சாத்தியமான திருப்பயணம் நடைபெறுவதாகவும் அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது, இரு தரப்பினருக்கும் இடையிலான வலுவான உறவுகள், அந்நாட்டின் சமூக வாழ்வில் கத்தோலிக்கத் திருஅவையின் பங்களிப்பு மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், தேவையில் இருப்போருக்கு உதவுதல், மனித மாண்பை மதித்தல் மற்றும் உலகளவில் அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துதல் போன்ற கரிசனைகள் குறித்து பகிர்ந்து கொள்ளப்பட்டதாகவும் திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் அறிக்கை மேலும் உரைத்துள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் துருக்கி மற்றும் லெபனோனுக்கு திருத்தந்தை லியோ அவர்கள் தனது முதல் வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டார். அதன் பின்னர் எதிர்காலத்தில் அல்ஜீரியா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் பெரு ஆகிய நாடுகளுக்குத் திருத்தூதுப் பயணங்களை மேற்கொள்வதில் அவர் ஆர்வம் காட்டியுள்ளார், அங்கு அவர் முன்பு மறைபரப்புப் பணியாளராகவும் ஆயராகவும் பணியாற்றினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
