கிறிஸ்துவின் முன்மாதிரியை நெருக்கமாகப் பின்பற்றுங்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இன்றைய உலகின் நவீன சவால்களுக்கு மத்தியில் புனிதத்தைத் தழுவி கிறிஸ்துவின் முன்மாதிரியை நெருக்கமாகப் பின்பற்றுமாறு ஸ்பெயினின் அருள்பணியாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ
பிப்ரவரி 09, திங்களன்று, ஸ்பெயினிலுள்ள மாத்ரித் உயர் மறைமாவட்டத்தில் பிப்ரவரி 9, 10 ஆகிய இருநாள்கள் இடம்பெற்ற வரும் அருள்பணியாளர்களின் ஒன்றுகூடலை முன்னிட்டு, அருள்பணியாளர்களுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை.
மதச்சார்பின்மை, கருத்து வேறுபாடு மற்றும் கலாச்சார மாற்றத்தின் அழுத்தங்களை ஒப்புக்கொண்டுள்ள திருத்தந்தை, "இன்றைய அருள்பணியாளர்கள் பணிகள், முடிவுகள் பயன்கள் ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்தாமல், இறைவேண்டல், நற்கருணை மற்றும் மேய்ப்புப் பணிகளில் அடித்தளமாகக் கொண்ட 'கிறிஸ்துவுடன் இணைந்த மனிதர்களாக' இருக்க அழைக்கப்படுகிறார்கள்" என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும் "முழுமையாக கிறிஸ்துவுக்கு உடையவர்களாக இருங்கள். தூய்மை உடையவர்களாக இருங்கள்" என்று கூறிய அவிலாவின் புனித ஜானின் அறிவுரையை மேற்கோள் காட்டி அவர்களைப் புனித வாழ்வு வாழ்வதற்கு அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை.
"இன்றைய உலகில், விசுவாசம் எளிதில் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம் அல்லது முக்கியமற்றதாகக் கருதப்படலாம்" என்று எடுத்துரைத்துள்ள திருத்தந்தை, "இருப்பினும், கிறிஸ்துவுடனான வலுவான தொடர்பு, உண்மையான நோக்கத்தைக் கண்டறியவும், கடவுளின் ஆழமான மறைபொருளைப் புரிந்துகொள்ளவும் அருள்பணியாளர்கள் மற்றவர்களுக்கு உதவிபுரியவும் உதவுகிறது" என்றும் விளக்கியுள்ளார்.
அருள்பணித்துவ உடன்பிறந்த உறவின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்துள்ள திருத்தந்தை, பணிவாழ்வில் தனிமைப்படுத்தல் மற்றும் தனிப்பற்றுக்கு எதிராகவும் எச்சரித்துள்ளார்.
அருள்பணியாளர்கள் தங்கள் சொந்த இறைவேண்டல் வாழ்க்கையை வளர்த்துக் கொள்ளவும், தங்கள் சமூகங்களுக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றவும், விசுவாசிகள் கடவுளின் உடனிருப்பைத் தேட ஊக்குவிக்கவும் விண்ணப்பித்துக்கொண்டு தனது உரையை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
