சுரங்க சரிவு மற்றும் புயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இறைவேண்டல்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கிழக்கு காங்கோ ஜனநாயகக் குடியரசில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 200-க்கும் மேற்பட்ட மக்களுக்காகவும், மொசாம்பிக் மற்றும் ஐரோப்பாவில் ஏற்பட்ட கொடிய புயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் இறைவேண்டல் செய்தார் திருத்தத்தை பதினான்காம் லியோ.
பிப்ரவரி 01, ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையின் இறுதியில் இந்த இறைவேண்டலைச் செய்தார் திருத்தந்தை.
மொசாம்பிக்கில் குறைந்தது 150 பேரையும், போர்ச்சுக்கலில் ஆறு பேரையும் உயிரிழக்கச் செய்த கடுமையான புயல்கள் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களையும், தெற்கு இத்தாலியின் சில பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களையும் நினைவுகூர்ந்து இறைவேண்டல் செய்தார் திருத்தந்தை.
கிழக்கு காங்கோ ஜனநாயகக் குடியரசில் வடக்கு கிவு மாநிலத்தில் M23 கிளர்ச்சியாளர்களால் கட்டுப்படுத்தப்படும் ஒரு பகுதியான ரூபாயா சுரங்கத் தளத்தில் கடந்த வாரம் சுரங்கம் சரிந்தது, இதில் 200 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக சுரங்கத்தின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
காங்கோ அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களின் ஆதரவையும் உடனிருப்பையும் வெளிப்படுத்தியுள்ள, அதேவேளை, இயற்கை வளங்களை சட்டவிரோதமாக சுரண்டுவதற்காக கிளர்ச்சியாளர்களைக் குற்றம் சாட்டினர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
