நோயாளர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்காக திருத்தந்தை இறைவேண்டல்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பிப்ரவரி 11, புதன்கிழமையன்று, திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட புனித லூர்து அன்னையின் திருநாளில், நோயாளர்களுக்கும் அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும் நம்பிக்கை மற்றும் ஒன்றிப்பின் வார்த்தைகளை வழங்கி, அவர்களுக்காக இறைவேண்டல் செய்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
இந்தச் சிறப்பு வழிபாட்டின் போது, கூடியிருந்த விசுவாசிகளுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட திருத்தந்தை, உலகளவில் துன்பப்படுபவர்களுக்காக இறைவேண்டலில் ஒன்றுபடுவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டினார்.
விசுவாசத்திற்கும் துன்பத்திற்கும் இடையிலான ஆழமான தொடர்பை வலியுறுத்தி, கிறிஸ்துவின் அன்னையாம் கன்னி மரியாவால் கற்பிக்கப்பட்ட வலிமை வாய்ந்த பாடங்களை நினைவு கூர்ந்தார் திருத்தந்தை.
மேலும் "இவ்விழா எப்போதும் நம்முடன் இருக்கும் அன்னை மரியாவின் உடனிருப்பை நினைவூட்டும் ஓர் அழகான நாள்" என்று மொழிந்த திருத்தந்தை, "துன்பம், அன்பு மற்றும் நம் வாழ்க்கையை இறைவனிடம் ஒப்படைப்பது பற்றி மரியா நமக்குக் கற்பிக்கிறார்" என்று எடுத்துக்காட்டினார்.
மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பராமரிப்பாளர்களின் அயராத உழைப்பை அங்கீகரித்து, நோயுற்றவர்களைப் பராமரிப்பவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் பாராட்டிய திருத்தந்தை, "உங்கள் அனைவருக்கும், குறிப்பாக மிகவும் சவாலான காலங்களில் நோயுற்றவர்களை ஆதரிப்பவர்களுக்கு, இறைவனின் ஆசீர்வாதத்தை நான் வேண்டுகிறேன்" என்று கூறினார்.
அருள்மிகப் பெற்றவரே வாழ்க! என்ற மங்கள வார்த்தை இறைவேண்டலுடன் நிறைவடைந்தது இந்த வழிபாடு. அதைத் தொடர்ந்து, நோயாளர்களுக்கும் அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும் கடவுளின் உடனிருப்பையும் ஆறுதலையும் வேண்டி, தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
