தேடுதல்

திருத்தந்தையின் பிப்ரவரி மாத இறைவேண்டல் கருத்து!

"ஒரு திருஅவையாக, நாம் வலுவின்மையை நிலைநிறுத்தி, துன்பங்களுக்கு மத்தியில் ஆறுதல், நம்பிக்கை மற்றும் புதிய வாழ்க்கையின் ஆதாரமாக மாறுவோம்" என்று பிப்ரவரி மாதத்திற்கான தனது செபக் கருத்தில் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பிப்ரவரி 05, புதன்கிழமையன்று வெளியிட்டுள்ள தனது பிப்ரவரி மாத இறைவேண்டல் கருத்தில், குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுடன் உலகளாவிய ஒன்றிப்புக்காக அழைப்புவிடுத்துள்ளார், திருத்தந்தை பதினான்காம் லியோ.

"துன்பங்களுக்கு மத்தியிலும், அவர்களின் வலுவிழந்த உடலும் புன்னகையும் நம்பிக்கைக்கும் விசுவாசத்திற்கும் சான்றாக உள்ளன" என்று குறிப்பிட்டு, இந்தக் குழந்தைகளின் துணிவுமிகு மனநிலையை எடுத்துக்காட்டிள்ளார் திருத்தந்தை.

“இந்தக் குழந்தைகளுக்கு முறையான மருத்துவப் பராமரிப்பு, பரிவிரக்கத்துடன் கூடிய கவனிப்பு மற்றும் ஆதரவான சமூகங்கள் கிடைக்க வேண்டும்” என்று இறைவேண்டல் செய்துள்ள திருத்தந்தை, அவர்களுடைய குடும்பங்களுக்கு வலிமையையும் நம்பிக்கையையும் அருளக் கேட்டுக்கொண்டுள்ளதுடன், சோதனைகளின் மூலம் விசுவாசத்தின் சாட்சிகளாக இருக்க அவர்களை ஊக்குவித்துள்ளார்.

மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்குத் தனது ஆசீர்வாதத்தை வழங்கியுள்ள திருத்தந்தை, அவர்களின் பணி பொறுமை, இளகிய மனம் மற்றும் ஆழமான இரக்க உணர்வுகளால் வழிநடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் "துயருறும் குழந்தைகளின் பாதிப்பு, அன்பு மற்றும் ஒருமைப்பாட்டின் உறுதியான சைகைகளுடன் பதிலளிக்க சமூகத்தை ஊக்குவிக்க வேண்டும்" என்று விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை.

"ஒரு திருஅவையாக, நாம் வலுவின்மையை நிலைநிறுத்தி, துன்பங்களுக்கு மத்தியில் ஆறுதல், நம்பிக்கை மற்றும் புதிய வாழ்க்கையின் ஆதாரமாக மாறுவோம்" என்று கேட்டுக்கொண்டு பிப்ரவரி மாதத்திற்கான தனது இறைவேண்டல் கருத்தை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 பிப்ரவரி 2026, 11:03