தேடுதல்

கீழை மரபுறுதித்  திருஅவைககளின் உறுப்பினர்களுடன் திருத்தந்தை கீழை மரபுறுதித் திருஅவைககளின் உறுப்பினர்களுடன் திருத்தந்தை   (ANSA)

திருஅவைகளுக்கிடையே ஆழமான கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு அழைப்பு!

ஆர்மீனியன், கோப்திக், எத்தியோப்பியன், எரிட்ரியன், மலங்கரா மற்றும் சிரியாக் ஆகிய கீழை மரபுறுதித் திருஅவைகளின் பிரிதிநிதிகளுக்கு வழங்கிய உரையில் "கிறிஸ்தவ ஒன்றிப்பு, பரந்த உலகில் அமைதி மற்றும் ஒப்புரவிற்குப் பங்களிக்கும்" என்ற தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"நாம் நமக்குள் சுமந்து கொண்டிருக்கும் முற்சார்பு எண்ணங்களை நீக்கி, நம் இதயத்தின் பகைமை உணர்வை மாற்றி அமைக்கும்போது, ​​நாம் அன்பில் வளர்கிறோம், மிகவும் நெருக்கமாக ஒன்றிணைந்து செயல்படுகிறோம், கிறிஸ்துவில் நமது ஒன்றிப்பின் பிணைப்புகளை வலுப்படுத்துகிறோம்" என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

கீழை மரபுறுதித்  திருஅவைகளைச் சேர்ந்த இளம் அருள்பணியாளர்கள் மற்றும் துறவிகளின் கல்விப் பயணத்தின் (Study Visit) பங்கேற்பாளர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, "கிறிஸ்தவ ஒன்றிப்பு என்பது இம்மண்ணுலகில் அமைதிக்கும் அனைவரின் ஒப்புரவிற்கும் புளிப்பு மாவாக மாறுகிறது" என்றும் தெரிவித்தார்.

"கிறிஸ்தவ ஒன்றிப்பை ஊக்குவிக்கும் திருப்பீடத் துறையின் இந்த ஏற்பாடு, கத்தோலிக்கத் திருஅவைக்கும்  கீழை மரபுறுதித்  திருஅவைகளுக்கும் இடையில் ஒன்றுக்கொன்று கற்றல் மற்றும் செறிவூட்டலுக்கான வாய்ப்பாக அமைந்ததுள்ளது" என்றும் சுட்டிக்காட்டினார்.

கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான அண்மைய இறைவேண்டல் வாரம் பற்றி குறிப்பிட்ட திருத்தந்தை, கிறிஸ்தவர்கள், கலாச்சார மற்றும் வரலாற்று வேறுபாடுகள் இருந்தபோதிலும், "ஒரே உடலுக்கும் ஒரே தூய ஆவிக்கும்" சொந்தமானவர்கள் என்ற புனித பவுலின் படிப்பினையை நினைவு கூர்ந்தார்.

கிறிஸ்தவச் சமூகங்கள் உள்நோக்கத்துடன் செயல்படுவதற்கு எதிராக எச்சரித்த திருத்தந்தை, கிறிஸ்துவின் ஒரே மறைபொருள் உடலின் உறுப்பினர்களாக ஒருவரையொருவர் அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

"கிறிஸ்தவ மரபுகளின் பன்முகத்தன்மையை பகிரப்பட்ட பாரம்பரியத்தின் 'அற்புதமான பல்வண்ணக்கல்'" என்று விவரித்த திருத்தந்தை, "அதேவேளையில், விசுவாசிகள் ஒருவருக்கொருவர் ஆதரவளித்து விசுவாசத்தில் ஒன்றாக வளர வேண்டும்" என்று அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

ஒன்றிப்பைப் பின்தொடர்வதில் பணிவு மற்றும் சுய பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்து முதுபெரும் தந்தை அத்தேனாகோரஸ் அவர்களை மேற்கோள் காட்டி, முற்சார்பு எண்ணத்தை வெல்வதன் மூலம் "இதயத்தின் பகைமை உணர்வை மாற்றி அமைப்பதன்" அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

இறுதியாக, "கிறிஸ்தவ ஒன்றிப்பு, பரந்த உலகில் அமைதி மற்றும் ஒப்புரவிற்குப் பங்களிக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்து, தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 பிப்ரவரி 2026, 12:53