தேடுதல்

பணியாளர்களை ஆசீர்வதிக்கும் திருத்தத்தை பணியாளர்களை ஆசீர்வதிக்கும் திருத்தத்தை   (AFP or licensors)

வத்திக்கான் இல்லப் பணியாளர்களுடன் திருத்தந்தை சந்திப்பு!

"தயாரிப்பது, வரவேற்பது, வாழ்த்துவது" என மூன்று வினைச்சொற்களுடன் வத்திக்கான் இல்லப் பணியாளர்களின் பணிகளைக் குறிப்பிட்ட திருத்தந்தை, “கவனமான தயாரிப்பும், கனிவான செயல்களும், அர்த்தமுள்ள கூட்டங்களுக்கு நல்லதொரு சூழலை உருவாக்குகின்றன” என்று எடுத்துக்காட்டினார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பிப்ரவரி 01, ஞாயிறன்று, வரவேற்பு அறை அதிகாரிகள், திருத்தந்தையின் வாகன ஓட்டுநர்கள், இரகசிய மற்றும் நம்பிக்கைக்குரிய வத்திக்கான் இல்லப் பணியாளர்களை திருப்பீடத்தில் சந்தித்து மகிழ்ந்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

இச்சந்திப்பின்போது, பொதுப் பார்வையாளர்கள் சந்திப்புகள், அரசு அதிகாரிகளின் வருகைகள் மற்றும் திருத்தந்தையின் பிற நிகழ்வுகளின் போது நாள்தோறும் தனக்கு உதவி புரியும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார் திருத்தந்தை.

மேலும் திருத்தந்தை இல்லத்தின் அலுவலகத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட அவர்களின் பணி, தனது அப்போஸ்தலிக்கப் பணியை ஆதரிப்பதாகவும், ஒவ்வொரு சந்திப்பின் தரத்தையும் வடிவமைப்பதாகவும் குறிப்பிட்டுக் காட்டினார் திருத்தந்தை.

"தயாரிப்பது, வரவேற்பது, வாழ்த்துவது" என மூன்று வினைச்சொற்களுடன் அவர்களின் பணிகளைச் சுருக்கமாகக் குறிப்பிட்ட திருத்தந்தை, “கவனமான தயாரிப்பும், கனிவான செயல்களும், அர்த்தமுள்ள கூட்டங்களுக்கு நல்லதொரு சூழலை உருவாக்குகின்றன” என்று எடுத்துக்காட்டினார்.

முக்கியமான விருந்தினர்களை வரவேற்கும்போதோ அல்லது சாதாரண திருப்பயணிகளை வரவேற்கும்போதோ, இயற்கையான மனநிலையுடனும் மனித நேயத்துடனும் நடந்துகொள்ளுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

“மரியாதைக்குரிய பணிகளுக்குத் தொழில்முறைத் தன்மை மட்டுமல்ல, உறுதியான நம்பிக்கை மற்றும் ஒத்திசைவான கிறிஸ்தவ வாழ்க்கையும் தேவை” என்று கூறிய திருத்தந்தை, அவர்களுடைய பங்களிப்பின் ஆன்மிகப் பரிமாணத்தையும் கோடிட்டுக் காட்டினார்.

அர்ப்பணிப்புடன் தங்கள் பணியைத் தொடர்ந்தாற்றுமாறு அவர்களிடம் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, திருஅவைக்கும் திருத்தந்தைக்கும் அவர்கள் அளித்த அர்ப்பணிப்பு நிறைந்த பணிகளுக்காக மீண்டும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டு தனது உரையை நிறைவு செய்தார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 பிப்ரவரி 2026, 12:56